Thursday, October 01, 2015

அறியாமலிருக்கும் அற்புதங்கள் - 1


ஒரு புதிய வன பகுதிக்குள், ஆர்வத்துடன் நுழைகிறீர்கள். உங்களின் ஐம்புலன்களுமே அதிக கவனத்துடன் எதிர் கொள்ள போகிற வித்தியாசமான அனுபவங்களுக்கு எதிர் பார்த்திருக்கும் அல்லவா?  இதைப்  போன்றதொரு "தேடல்" மனதுடன் வேதாகம பக்கங்களுக்குள் போகிறவர்களுக்கு, ஆவியானவர் உணர்த்துகிற பரவச அனுபவங்கள் ஒரு புறம் இருக்க, பல தருணங்களிலும் பல கேள்விகள் எழுவதும் இயல்பானதே. மனதுள் உதிக்கிற இந்த கேள்விகளுக்கான பதில்களை நாம் தேடுகிற தருணங்கள்  குறைவு தான். அப்படித் தேடினாலும் கிடைக்கிற பதில்கள் பல தருணங்களிலும் மனநிறைவை தருவதில்லை. இதற்கான காரணங்களை நாம் பட்டியல் இடவும் கூடும்.  ஆனால் நம்முடைய கவனம் எல்லாம் இப்படியான சில கேள்விகளுக்கு மிக அருமையாக அமைந்து விடுகிற பதில்கள் பரவசமாய் நம் விசுவாச வாழ்வில் இன்னும் பலப்படுத்துகிறதற்கு  ஏதுவாக உதவிடக்கூடும்.

உதாரணத்திற்கு நம் முற்பிதா ஆபிரஹாமின் விசயத்திற்கு வருவோம். பெருவெள்ளம் வந்து வடிந்த பின் நோவாவோடு (ஆதியாகமம் 9) தேவன் பேசின பிறகு, ஒரு பெரிய கால இடைவெளி. இதில் நூற்றுக்கணக்கான வருடங்கள் இருந்திருக்கலாம். இந்த பெரிய இடைவெளியில் பெருகின மக்கள் தேவனை மறந்து போனவர்களாய் இருக்க வேண்டும். நோவா பெருவெள்ளம் வடிந்த பிறகு தேவனை சுகந்த வாசனை பலியோடு தொழுது கொண்ட பிறகு, ஆபிரகாமுக்கு முன்பாக  எவரும் இப்படியாக தொழுது கொண்டதாக நமக்கு குறிப்புகள் இல்லை. பிறகு ஆபிராம் தான் கர்த்தர் தமக்கு தரிசனமான பிறகு அவருக்கு பலிபீடத்தைக் கட்டி (ஆதியாகமம் 12:7) தொழுது கொள்ளுகிறான். சரி அப்படியானால் ஆபிராம் தவிர வேறு எவருக்குமே தேவன் தம்மை வெளிப்படுத்தவில்லையா  என்ற கேள்வி வருமெனில் இல்லை என்று நாம் தீர்மானமாகச் சொல்ல முடியாது. உதாரணத்திற்கு  வம்ச வரலாறு இல்லாத மெல்க்கிசேதேக்கை வேதாகமத்திலிருந்து ஒரு உதாரணமாகவே கூறலாம். இது பற்றி பிறகு பார்க்கபோகிறோம்.

பாரம்பரியங்களின் படி ஆபிராமின் (ஆபிரகாம்) தகப்பன் "தேராகு "சிலைகளை செய்பவராக இருந்தாராம். இந்த தேராகுவின் மகனை ஆண்டவர் தெரிந்து கொண்டது ஒரு பெரிய ஆச்சர்யம்!! மட்டுமல்ல, ஆப்ரஹாமுக்கு தந்த வாக்குத்தத்தங்களில் (ஆதியாகமம் 12:1-3) வெகு வியப்பான விஷயம் ஒன்றுண்டு.
"பூமியிலுள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்"
இந்த வசனத்தை நாம் இப்படியாக விளங்கி கொள்ளலாம். அதாவது உலகின் சகலவிதமான ஜாதிகள், மக்களுக்காக ஆசீர்வாதம் ஆப்ரஹாமின் வழியாக இவ்வுலகில் வர  தேவசித்தம் / தேவ வாக்குத்தத்தம் உண்டு.

பின் இதையே மறுபடியும் உறுதிப்படுத்துவதைப் போல ஆதியாகமம் 22:15-18ன் வசனங்களும் அமைந்திருக்கின்றன. ஒரு விதத்தில் (வெறும்) ஆபிராமாக இருந்த பொழுது பெற்ற வாக்குத்தத்தம் ஆபிரகாமாக மாற நிகழ்ந்த பலவைகளுக்குப்பிறகு, இந்த ஆப்ரஹாமிற்கும் அதாவது தன்னை அழைத்த ஆண்டவரின் பலத்த வியப்பூட்டும் கிரியைகளை கண்டபிறகு, முன்பு அழைத்த பொழுது சொல்லப்பட்டவைகள் நிறைவேற்றப்படும் என்பதைப் போல இந்த ஆபிரகாமிற்கும் திரும்பவும் கூறப்படுகிறது எனலாம்.

ஆனாலும் இந்த ஆதியாகமம் 22;18 வசனத்தில் ஒரு முக்கியமான, நாம் பார்க்கப் போகிற இக்கட்டுரைத் தொடருக்கு ஆதாரமான ஒரு குறிப்பு உண்டு. இதன் அடிப்படையில் தான் நாம் பல விசயங்களை ஆராயப்போகிறோம்.

இந்த இடத்தில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று உண்டு. பெரும்பாலான வேதாகம பதிப்புகளில் இந்த வசனம் சரியான படி மொழிப்பெயர்க்கப் படவில்லை.

அதாவது ஆதியாகமம் 22:18ம் வசனத்தில் வருகிற "சந்ததி" என்ற பதம் "வழிமரபினர்" (descendants) என்னும் பன்மையில் அமைந்திருக்கிறது. ஆனால் இது பன்மையில் அல்ல. ஒருமையில் இருந்திருக்க வேண்டியதொன்று.

எதை வைத்து இப்படிச் சொல்ல முடியும் என்று நீங்கள் கேட்கலாம். யோசிக்கலாம். இதோ பவுல் நமக்கு உதவுகிறார் பாருங்கள்.  கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் தெளிவாக சொல்கிறார் (கலாத்தியர் 3:16).
"ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே " 
இந்த வசனத்திலும் கூட சந்ததி என்கிற பொதுவான பன்மைச் சொல்லையே பயன்படுத்தி இருந்தாலும் உண்மையில் இது ஒருமைச் சொல்லாகவே இருந்திருக்க வேண்டும்.

லாம்சா வேதாகமத்தில் (LAMSA BIBLE) இந்த வார்த்தையை "Seed" அதாவது "வித்து" என்றும், New International Versionல் offspring அதாவது "மகனான" அல்லது "புத்திரனான" என்றும் பதிப்பித்திருக்கிறார்கள்.

இப்போது நம்மில் பலருக்கு இன்னொரு சந்தேகமும் வரக்கூடும். ஆதியாகமம் 22:17ல் "உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும்..."  என்று வருவதற்கு என்ன பதில் என்றெல்லாம் ...

இந்த 17வது, 18வது வசனங்களில் சந்ததி என்ற பதம் மூன்று முறை வந்தாலும் தவறுதலாக கூறப்பட்டிருந்தது 18வது வசனத்தில் மட்டும் தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்வது நல்லது. மாற்றம் 18வது வசனத்தில் உள்ள சந்ததியில் மட்டுமே.  இந்த சந்ததி என்ற பதத்திற்கு பதிலாக வித்து என்று பார்க்கும் பொழுது ஒரு புதிய பரிமாணத்தில் நாம் அதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த வித்து என்பதை வலியுறுத்த "The Message" போன்ற சமீபத்தில் வந்த மிகச் சிறந்த வேதாகம மொழிபெயர்ப்பு இவ்விதமாக குறிப்பிடுகிறது.

         "You will observe that scripture, in the careful language of legal document, does not say 'to descents' referring to anybody in general, but 'to your descendants' (the noun,note, is in singular) referring Christ"

ஆக ஆபிரகாமுக்கு தரப்பட்ட வாக்குத்தத்த ஆசீர்வாதங்களில்
  1. அவருடைய சந்ததி கடற்கரை மணலத்தனையாக, வானத்து நட்சத்திரங்களை போல பெருகும், ஆசீர்வதிக்கப்படும்.
  2. அவருடைய சந்ததியில் வரப்போகிற "வித்து" ஆகிய கிறிஸ்துவுக்குள் சகல ஜாதிகளும் சகல தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும்.
இதை இவ்விதமாகவும் விளங்கிக்கொள்ளலாம். ஆக பல்வேறு ஜாதிகள், பிரிவுகளிலிருந்து ஆபிரகாம் என்றழைக்கப்படுகிற ஆபிராமை பிரித்தெடுத்து ஆசீர்வதிக்க சித்தம் கொண்ட கடவுள் அவருடைய சந்ததியில் வரப்போகிற வித்தாகிய கிறிஸ்துவின் வழியாக, அவர் மூலமாக மற்ற மக்கள் பிரிவினர் ஆசீர்வதிக்கப்படப் போகிற திட்டத்தையும் வைத்தருளினார்.

இது கொஞ்சம் புதிதாகவும் விநோதமாகவும் ஆச்சர்யமாகவும் தோன்றுகிறதல்லவா? இது சாத்தியமோ? யூதர்கள் மட்டுமல்லவா தேவன் தெரிந்தெடுத்த, பிரித்தெடுத்த கூட்டம் - சந்ததி. அவர்களுக்கான ஆசீர்வாதங்களுக்குள் மற்ற பிரிவினர், தேசத்தார், இனத்தார் எப்படி வந்து பங்கு கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று பலரும் யோசிக்கலாம்.

யூதர்கள் பிரித்தெடுக்கப்பட்ட சந்ததி என்பது மெய் தான். என்றாலுமே நம் ஆண்டவர் மற்ற மக்கள் பிரிவினர், தேசத்தார், இனத்தாரிடமும் பல்வேறு இடைவெளிகளில் தம்மை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை கிடைத்து வருகிற பல ஆராய்ச்சிகள், அகழ்வுக்  குறிப்புகள் உணர்த்துகின்றன. இப்படி வெளிப்பாடு பெற்ற மக்கள் எப்படி கிறிஸ்துவுக்குள் கூட்டி சேர்க்கப்படுகிறார்கள் என்பது மற்றொரு பிரமிக்க வைக்கிற காரியமாகும்.


மானுடவியலிலும், மொழியியலிலும் விற்பன்னரான டான் ரிச்சர்ட்சன் எழுதிய "நித்தியம் அவர்கள் மனங்களில்" (Eternity in their hearts – by Don Richardson) என்ற புத்தகத்தில் பல்வேறு நாடுகளில், நாகரீகங்களில் அநேக பழங்குடி மக்கள் மத்தியிலுமே கூட எப்படி தேவன் தம்மை, தமது காரியங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை சுவைபட, அழகாகச் சொல்லியிருக்கிறார்.

இதென்ன நூதனமான செய்தி? இதற்கு வேதாகம அடிப்படையில் குறிப்புகளோ அல்லது ஆதாரமோ உண்டா என்று பலர் நினைக்கலாம். எனவே நாம் முன்பு குறிப்பிட்ட கருத்துக்கு முதல் ஆதாரமாக நாம் ஆபிரகாமின் காலத்து மெல்கிசேதேக்கையே  எடுத்துக் கொள்ளலாம்.

வேடிக்கையாக ஒரு போதகர் இப்படிச்  சொல்வதுண்டு, நம்மில் பலர் புரிந்து கொள்ளாத சில வேத சமாச்சாரங்கள் உண்டு. அதில் இந்த மெல்கிசேதேக்கும் ஒன்று.

இந்த மெல்கிசேதேக்கு தான் ஆதியாகமத்து கிறிஸ்து என்று கருதுகிற கூட்டத்தார் உண்டுதான். இந்த மெல்கிசேதேக்கு பற்றி பல பாரம்பரிய, சுவாரஸ்யமான குறிப்புகள் தல்மூட்களில் உண்டு. இவர் நோவாவின் குமாரனான சேமின் வழி வந்தவர் என்றும்... சேம் தான் என்றும் கூட.

ஆனால் மெல்கிசேதேக்கு (מַלְכִּי־צֶדֶֿק) என்கிற பெயர் இரண்டு கானானிய வார்த்தைகள் சேர்ந்ததாகும். மெல்கி (מֶלֶךְ) என்பதற்கு (KING) ராஜா என்றும், சேதேக்கு (צדיק) என்பதற்கு நீதியின் ராஜா என்றும் பொருள். இந்த கானானியர்கள் விக்கிரக ஆராதனைகளுக்கும், குழந்தை பலிகளுக்கும் பெயர் பெற்றவர்கள். இந்த கானானிய பின்னணியிலிருந்து வந்த மெல்கிசேதேக்குக்கு எப்பொழுது, எப்படி தேவன் தம்மை வெளிப்படுத்தினார்? பெரும் புதிர் தான். இந்த புதிர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மெல்கிசேதேக்கு பற்றின அறிமுகத்தைப் பாருங்கள். உன்னதமான தேவனுடைய ஆசாரியனும், சாலேமின் ராஜாவுமாகிய மெல்கிசேதேக்கு...! (ஆதியாகமம் 14: 18).



ஆபிரகாமை தேவன் தெரிந்து கொண்ட விவரத்தை நாம் வேதத்தில் பார்க்கிறோம். ஆனால் மெல்கிசேதேக்கின் அறிமுகத்தை தவிர அவர் பற்றி ஆதியாகமத்தில் வேறு குறிப்புகள் இல்லை. (அதாவது பார்த்த ஆதியாகமம் 14: 18-20 வசனங்களைத் தவிர). எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் சற்று விவரமான குறிப்புகள் இருந்தாலும் அவைகள் மெல்கிசேதேக்கின் தனிப்பட்ட விவரங்களை சொல்வதில்லை. எபிரெயர் 7: 3ல் தகப்பனும் தாயும் வம்ச வரலாறும் இல்லாதவன் என்றிருக்கிறது.

ஆபிராம் கெதர்லாகொமேரை முறியடித்துத் திரும்பும்பொழுது சாலேம் என்கிற கானானிய பெயர் உள்ள பட்டணத்திற்கு வரும்பொழுது தான் மெல்கிசேதேக்கு சந்திக்கிறார். இந்த சாலேம் என்கிற பெயரே எபிரேய வாழ்த்துச்சொல்லான ஷாலோமுக்கு (שָׁלוֹם) ஆரம்பமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். இந்த சாலேம் இருந்த சாவே பள்ளத்தாக்கு பகுதிகளுமே பழைய எருசலேமின் (Old City of Jerusalem) தெற்கு சுவர் பகுதிக்கு (southern wall) கீழிருந்த பகுதி என்று ஜோசிபஸ்சும் (Titus Flavius Josephus) குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சுவாரஸ்யமான தொடர்புகள் ஒரு புறமிருக்க மெல்கிசேதேக்கு - ஆபிராமின் சந்திப்பு மிகவும் முக்கியமானதும் ஆச்சரியமானதுமானது. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிராமிடம் திடுமென்று உன்னதமான தேவனுடைய ஆசாரியன் என்று சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழங்களில் வெளிப்படுகிற வெகு அற்புதமானதொரு காரியம், நம் மொழிபெயர்ப்புகளில் எங்கோ ஒளிந்து கொண்டுவிட, அந்த உண்மைகளும் உணரப்படாமலே போய்விட்டன.

இப்போது நாம் அந்த மூல மொழியின் வார்த்தைகளுக்குப் போய் அது உணர்த்துகிற காரியங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளப் பார்க்கலாம். இது மிகவும் அவசியமானதொன்றாகும். ஏனெனில் நாம் ஏற்கனவே சொன்னபடி இத்தொடரில் பார்க்கப்போகிற பல்வேறு இனத்தினரின் கலாச்சாரங்களின், சமுதாய வழக்கங்களினூடே தேடிப் பார்க்கப் போகிற உண்மைகளுக்கு இது அவசியமாகும்.

ஆதியாகமம் 14: 19ல் நம் தமிழ் வேதாகமத்தில்
"...வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக" 
என்று மெல்கிசேதேக்கு சொல்வதாக இருக்கிறது. மூலமொழியில் உன்னதமான தேவன் என்ற பதத்திற்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தை "எல் எலியோன்" (אֵל עֶלְיוֹנִין) என்பதாகும். இந்த இரு வார்த்தைகளும் கானானிய வார்த்தைகள் தாம் என்பது தான் விசேஷம்.

இதில் ஏல் (אֵל) என்கிற கானானிய வார்த்தைக்கு தேவன் என்று பொருள். இந்த வார்த்தை எபிரேய மொழியிலும் புகுந்து ஆபிரகாமின் சந்ததிகளான எபிரேயர்கள் பயன்படுத்தியது வரலாறு. உதாரணத்திற்கு, பெத்தேல் (בֵּית אֵל) - தேவனுடைய வீடு. ஏல் ஷடாய் (אל שדי‎) - வல்லமையுள்ள  தேவன். இன்னும் ஏலோகிம் (אֱלֹהִים) - கடவுள் (பன்மையில் உள்ள தேவனை பற்றி மிகவும் ஆர்ச்சரியகரமாக ஒருமையில் குறிக்கிற சொல்).

இதே விதமாக எலியோன் (עֶלְיוֹנִין) என்ற வார்த்தை பொனிஷிய (Phoenician language) மொழியிலும், பழைய கானானிய மொழியிலுமே கடவுளைக் குறிக்கிற வார்த்தை.

இந்த இரு பதங்களையும் சேர்த்த "எல் எலியோன்" என்ற பதத்தை "தேவன் மெய்யான தேவன்" என்றோ "தேவாதி தேவன்" என்றோ "மிகவும் உன்னதமான தேவன்" என்றோ மொழிப்பெயர்க்கலாம். இதை கானானிய கலாச்சார பின்னணியில் இவ்விதமாகவும் அர்த்தப்படுத்திப் பார்க்கலாம். பல தெய்வ / விக்கிரக வணக்கம் உள்ள கானானிய மத சூழலில் இந்த தெய்வத்தை வெகுவாக வித்தியாசப்படுத்திக் காட்டவே முன்பு சொன்ன மொழிப்பெயர்ப்பு பதங்கள். அதாவது "தேவாதி தேவன்", "உன்னதமான தேவன்" என்று அழைத்திருக்கலாம்.

இப்பொழுது மெல்கிசேதேக்கை, கனானியனாக இருந்த அவரை, 'உன்னதமான தேவனுடைய ஆசாரியன்' என்ற அடைமொழி, பிற கானானிய கடவுளர்கள் அல்லாமல், வேறு வித்தியாசமான, அதாவது தேவாதி தேவனின் ஆசாரியன் என்று அடையாளப்படுத்துகிறது.  இப்படியாக மெல்கிசேதேக்கு, உன்னதமான தேவனின் (அதாவது எல் எலியோனின்) ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக என்றவுடன், தங்களின் கடவுளை "யாவே" (יהוה) என்று மட்டும் மிகவும் பவித்திரமாக அவர்கள் மொழியில் அழைத்து பழகியிருந்திருக்கக் கூடிய ஆபிராம், அதுவும் தன்னை அழைத்த யாவேயின் மேல் மிகவும் வைராக்கியம் கொண்டிருந்திருக்கக் கூடிய ஆபிராம், இப்படியாக மெல்கிசேதேக்கு இன்னொரு பெயரில் கடவுளை அழைத்து ஆசீர்வதித்ததை ஏற்றுகொள்வது ஒரு புதிரைப் போல தோன்றுகிறதல்லவா? எந்த ஒரு மறுப்பும், மறுமொழியுமின்றி மெல்கிசேதேக்கின் வாழ்த்தையும், அவர் அளித்தவைகளையும் ஏற்றுகொண்டது மட்டுமின்றி, மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தை அங்கீகரிப்பது போல அவருக்கு தசமபாகத்தை தருகிறான்.

இது எதை காட்டுகிறது எனில் மெல்கிசேதேக்கின் "தேவாதி தேவன்" அல்லது "உன்னதமான தேவன்" அல்லது "எல் எலியோன்" (אֵל עֶלְיוֹנִין) தான் தன்னுடைய "யாவே" (יהוה) யாகவும் இருக்க வேண்டும் என்று ஆபிராம் நம்பி இருக்க வேண்டும்.

அதாவது யூதரல்லாத அல்லது தெரிவு செய்யப்பட்ட தன்னை போல் அல்லாத வேறு ஒருவருக்கும் தன்னை அழைத்த தேவன் தம்மை வெளிப்படுத்தியிருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டிருந்திருக்க வேண்டும். அதுவும் மெல்கிசேதேக்கை ஆசாரியராக அங்கீகரித்து தசம பாக காணிக்கை தருகிற அளவிற்கு எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் 7ம் அதிகாரத்தில் 
"...சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான்" என்றும், "இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்" 
என்றும் (எபிரெயர்7:7,4) எழுதப்பட்டிருப்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

இதே ஆபிராம் சோதோமின் ராஜா கொஞ்சம்குறைய மெல்கிசேதேக்கு போலவே வந்து தருகிற பரிசுகளை மறுப்பதையும் நாம் காண முடியும்.

ஆகா இவைகள் எல்லாம் எதை நமக்கு உணர்த்துகின்றன என்பதற்கு டான் ரிச்சர்ட்சன் அழகாக ஒரு புது விளக்கத்தை தருகிறார். இப்படியாக...

தேவனுடைய திட்டத்தில் ஆபிரகாமிற்கான வெளிப்படுத்தல்கள் என்றிருப்பதைப் போல மெல்கிசேதேக்கிற்கான வெளிப்படுத்துதல்கள் என்றும் சில காரியங்கள் இருக்க வாய்ப்புண்டு. இந்த இரண்டாவதில் எப்படியாக தேவன் மற்ற பழங்குடிகள், பல தேசத்தார் மத்தியில் தன்னை வெளிப்படுத்தினார் என்றும், அந்த வெளிப்படுத்துதல்கள் இறுதியாக எப்படி கிறிஸ்துவுக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டு இன்னெரு புதிய பரிமாணத்திலே அவருக்குள்ளே யூதரென்றும், கிரேக்கரென்றும், அடிமையென்றும், சுயாதீனரென்றும் இல்லாத படி கிறிஸ்துவினுடையவர்களாகிய அனைவருமே அவரின் பிள்ளைகளாகிற தகுதியைப் பெற்றிருப்பதை நாம் பார்க்கலாம்.

ஆபிரகாமின் காரியங்களை தேவன் தம்மைப் பற்றி கூறின விசேஷித்த வெளிப்பாடு என்றும், மெல்கிசேதேக்கு போன்றவர்களிடத்தில் தேவன் கூறினவைகளை பொதுவான வெளிப்பாடு என்றும் ஒரு வசதிக்காக நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு வெளிப்பாடுகளுமே பிறகு கிறிஸ்து இயேசுவிற்குள் ஒன்றிணைகிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பதை நாம் பிறகு உதாரணங்களோடு பார்க்கும்பொழுது இன்னும் தெளிவாக விளங்கி கொள்ள முடியும்.

இந்த இரு வெளிப்பாடுகளை ஒரு உதாரணத்தின் மூலம் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளப் பார்க்கலாம்.

விஞ்ஞானிகள் "ஒளி" இருவிதமான ரூபத்தில் இவ்வுலகில் இருக்கிறது என்கிறார்கள். 1. Ambient light - பரவலான ஒளி. இது எல்லா பக்கங்களிலும் சூழ்ந்துள்ள அல்லது விகசித்திருக்கிற ஒளி. 2. Coherent light - ஒத்திசைவான, ஒருங்கிணைந்த ஒளி.

முதலாவது வகைக்கு நாம் பொதுவான பகல் வெளிச்சத்தை, பரவி இருக்கிற வெளிச்சத்தை உதாரணமாக சொல்லலாம். ஒளி தரும் மூலம் இருக்கும் பொழுது இயல்பாகவே எங்கும் பரவி இருக்கும் வெளிச்சத்தை போல.

ஆனால் இரண்டாவது வகை ஒளிக்கு சில நிபந்தனைகள் உண்டு. இது செயல்பட சில காரியங்கள் அவசியமாகிறது. லேசர் போன்ற ஒளிக்கற்றைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

முதலாவது வகையில் போட்டான்ஸ் (Photons) என்று அழைக்கப்படுகிற துகள்கள் ஒரு ஒழுங்கின்றி எங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கும், அதாவது ஒரு தோட்டத்தில் ஓடியாடி விளையாடுகிற நிறைய குழந்தைகளை போல.

ஆனால் இரண்டாவது வகையில் ஒவ்வொரு போட்டானும் ஒழுங்காக ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு ஒளிக்கற்றையைப் போலிருக்கும். அதாவது ஒரு தோட்டத்தில் பிள்ளைகள் ஒழுங்காக அணிவகுத்துச் செல்வதைப் போல.

இந்த இரண்டாவது வகை ஒளிக்கற்றையில் அனேக காரியங்களை நாம் சாதிக்க முடியும். விசேஷித்த காரியங்களை செய்து முடிக்க இயலும்.

பொதுவான வெளிப்பாட்டை முதலாவது வகை ஒளிக்கும், விசேஷித்த வெளிப்பாட்டை இரண்டாவது வகை ஒளிக்கும் ஒப்பிடலாம்.

ஆபிரகாமுக்கும் அவர் சந்ததிகளுக்கும் தேவனுடைய உடன்படிக்கை / வாக்குத்தத்தம் அருளப்பட்டிருக்க, புறஜாதிகளுக்கான ஆசீர்வாதம் கிறிஸ்துவின் மூலமாகவே நிறைவேறுகிறதாய் இருக்கிறது.

இனி வரும் பகுதிகளில் அப்போஸ்தலர்கள் நடபடிகளில் வருகிற அத்தேனியர் முதற்கொண்டு (பவுல் அறிவித்த அறியப்படாத தேவனுக்கான மேடை) பல்வேறு தேசங்களில் இந்தியா, சீனா முதலிய பகுதிகளில் இந்த மெல்கிசேதேக்கின் வெளிப்பாடுகள் இருந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
-எட்வினா ஜோனாஸ் 

3 comments:

  1. PRAISE TO THE MOST HIGH GOD. The information in this post was very interesting. the conclusion was wonderful!!!!!!!!!! Expecting great things

    ReplyDelete
  2. Praise the lord bro
    Melchizedek patri enaku bible l padikum bothu puriyamalirunthathu.

    Ithu varai Jesus m melchizedek m ore aal ore nabar enru ninaithu irunthen

    Ungal blog I padithavudan than enaku vilangitru.

    Inum naraya thagavalgal kuduga naga therijukanum.
    Nanri.
    Migavum prayojanamaaga irunthathu.

    ReplyDelete