Wednesday, October 21, 2015

அறியாமலிருக்கும் அற்புதங்கள் - 5


உலகின் பல்வேறு தேசங்களில் உள்ள அறியாமலிருக்கும் அற்புதங்களைப் பார்த்த நாம், இம்முறை ஒரு மாறுதலுக்காக நம் இந்தியாவைப் பற்றி பார்க்கப் போகிறோம்.  ஒரு புத்தகத்தில் இவ்விதமாய் குறிப்பிடப்பட்டிருந்தது.

'ஐரோப்பாவில் பெரும்பாகம் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து, தற்காலத்தில் அதிக நாகரீகம் பெற்றவர்கள் என்று எண்ணப்படுகிற ஆங்கிலேயர், ஜெர்மானியர் போன்றவர்கள் எல்லாம் சாக்கினி தேசக் காடுகளில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த அந்த காலத்திலேயே இந்தியாவில் கிறிஸ்துவ மதம் ஸ்தாபிதமாகி இருந்தது.'

இந்தக் காலம் அநேகமாக முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டாக இருக்க வேண்டும். யோசிக்கையில் ஆச்சர்யம் தான். முதலாவது நூற்றாண்டிலேயே அப்போஸ்தலர் தோமா மூலம் இந்தியாவில் கிறிஸ்துவம் விதைக்கப்பட்டு விட்டது. இந்திய மக்களில் ஒரு பகுதியினர், குறிப்பாக தென்னிந்தியாவில் ஒரு பகுதியினர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை, மெய்யான தேவனை அறிந்துக் கொண்டார்கள் எனலாம். ஒரு அருட்பணியாளர் சொன்னதை போல 'தோமாவின் ஊழியத்தின் விசேஷம் என்னவென்றால், முற்றிலும் அறிந்திராத ஒரு தேசத்தில், வேதாகமமோ அல்லது அது போன்ற வேறு எதுவுமே இல்லாத நிலையில், தன் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள் மூலமாக மட்டிலுமே ஆண்டவரைப் பற்றி அறிவித்திருக்க வேண்டும். இது எத்தனை கடினமான, சவால்கள் நிரம்பின முயற்சியாக இருந்திருக்க வேண்டும் இல்லையா?'
தோமாவின் ஊழியத்திற்கு கனிகள் இருந்ததா? மக்கள் அவர் வார்த்தைகளை, அவர் காட்டின வழியை ஏற்றுக் கொண்டார்களா? ஏற்றுக்கொண்டவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறிப் போயிருந்திருக்க வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு கிடைக்கிற பதில்கள் சுவாரசியமானவை. மட்டுமல்ல, நம் விசுவாசிகளில் பலரும் அறிந்திராதவை என்றும் கூட சொல்ல முடியும். பலர் நினைத்திருக்கிறபடி தோமாவின் ஊழியத்தால் கேரளக் கரையோரத்தில் உள்ள, சென்னையில் உள்ள பலரும் தான் என்றில்லாமல் (அதுவும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் தான் என்றில்லாமல்) வேறு கூட்ட மக்களும் உண்டு. ஒரு பிரசங்கியார் சொன்னதைப் போல கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதையில் வரும் 'சான்றோர்கள்' இப்படியான விசுவாசிகளைத் தான் குறிக்கிறது என்று நாமும் சொல்லாவிட்டாலும் கூட, வித்தியாசமாய் இருந்தார்கள் என்று சொல்ல முடியும். இம்மக்களின் பாடல்களில் அல்லது மற்றவைகளில் ஒருவேளை நேரிடையாக சிலுவை, கிறிஸ்து போன்ற பதங்கள் பிரயோகிக்கப் படாமாலிருக்கக் கூடும். ஆனால் நாம் முன்பாகவே கூறினதைப் போல புதிய ஏற்பாட்டின் நாம் அறிந்திருக்கிற எந்த புத்தகமும் எழுதப்படாததற்கு முன்பாகவே இந்தியா வந்த தோமா ஆண்டவரை மக்களுக்கு வித்தியாசமான வகையில் அடையாளப்படுத்தி அல்லது காட்டி இருந்திருக்கக்கூடும். அது என்னவாக இருந்திருக்கலாம் என்பதை பிறகுப் பார்க்கலாம். 

தோமா தமிழகத்தில் ஊழியம் செய்த பொழுது மக்கள், தமிழ் மக்கள் அவரையும், ஆண்டவரையும் ஏற்றுக் கொண்டார்கள். எனில் அவர்கள் யார்? அதில் முக்கியமான, நமக்குத் தெரிந்தவர்கள் இருக்க வாய்ப்புண்டா என்கிற ஆய்வில் நாம் அறிய வருகிற பதில்கள் வியப்பானவை.


1970களில் தமிழகமெங்கும் 'மெய்பொருள் விழா'க்கள் என்றழைக்கப்படுகிற கூட்டங்கள் நடந்தன. அவைகளில் புலவர் மு.தெய்வநாயகம், "திருக்குறள்" கிறிஸ்த்துவ கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டது என்றும், திருவள்ளுவர் தோமையாரால் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தப் பட்டிருக்க வேண்டும் என்பது பற்றியும் மிகவும் ஆதாரப்பூர்வமாக பேசினார். அவர் கருத்துக்களுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பின பொழுதும், அவர் எழுப்பின கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை தர எவரும் முன்வரவில்லை.

சமீபத்தில்  ஒரு மூத்த ஆயருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தன்னைப் பொறுத்த வரை சமண சமயக் கருத்துக்களை தான் திருக்குறள் பிரதிபலிக்கிறது என்றார். அவர் மட்டுமல்ல, திரு.வி.க,கிறிஸ்துவக் கல்லூரி பேராசிரியரான ச.த.சற்குணன், பேராசிரியர் S.வையாபுரிப் பிள்ளை போன்றவர்களுமே அப்படித்தான் நம்புகிறார்கள். என்றாலுமே இந்தக் கருத்தை அவருடைய 'ஏழு பிறப்பு' என்கிற சிறு நூலில் திட்டமும், தெளிவுமாக மறுக்கிறார் புலவர் மு.தெய்வநாயகம்.

பிறவி சுழற்சிக் கொள்கை, பல பிறப்புகள் போன்ற கொள்கைகளை உள்ளடக்கியது சமண சமயம் என்பது நமக்குத் தெரியும். இவற்றைக் கூறுகிற விதமாய் திருக்குறள்கள் பலவற்றில் வருகிற எழுமை, ஏழு பிறப்பு, பிறப்பறுத்தல், பிறவிப் பெருங்கடல் போன்ற பதங்களை புலவர் எப்படி விளக்குகிறார் என்பதை இப்போது பார்க்கலாம்.

எழுமையையும், ஏழு பிறப்பு என்பதனையும் ஒரே விதமாய் பொருள் கொண்டு, பலர் விரிவுரை எழுதி இருந்தாலும் அவற்றை நுட்பமாய் ஆராய்ந்து இரண்டும் வெவ்வேறு அர்த்தத்தில் வருகிறவை என்கிறார். அதே விதமாக ஏழு பிறப்பு என்பதுமே கூட 'ஏழு' என்பது வேதாகமத்தில் பல இடங்களில் வருகிற 'ஏழு' என்ற எண் எப்படி முழு மைய, நிறைவை அடையாள படுத்துகிறதோ, அதே தன்மையில் தான் குறள்களிலும் வருகின்றனவாம்.

மற்ற இரு பதங்களுமே, அவைகளின் இயல்பான அர்த்தங்களை வைத்து பொருத்திப் பார்க்கிற பொழுது அது சமண சமயக் கொள்கைகளுக்கே அதாவது பிறவி சுழற்சிக் கொள்கைகளுக்கே எதிராக வருவதை தெளிவாக விளக்குகிறார் புலவர்.

(இந்த இடத்தில் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.  ஒரு தமிழ் செய்யுள் பாட விளக்க உரை போல சற்றே கடினமாக நம் கட்டுரை மாறி விடுவதை தவிர்க்கும் பொருட்டு, சுருக்கமான தகவல்களை மட்டும் தந்து கொண்டிருக்கிறோம் என்பதை நம் வாசகர்கள் புரிந்துக் கொள்ள வேண்டுகிறோம்.  என்றும் தமிழ் செய்யுள் பாட சாயல் வருவதை தவிர்க்க இயலவில்லை. மன்னிக்க..!)

இதெல்லாம் சரி, கிறிஸ்துவை அல்லது கிறிஸ்துவக் கோட்பாடுகளை உள்ளடக்கிய நூல் திருக்குறள் என்பதற்கு வேறு ஆதாரம் உண்டோ என்று பார்த்தால், பல உண்டு, குறிப்பாக 'பாயிரத்தை' சுட்டிக் காட்டுகிறார் புலவர்.

பாயிரம் என்றால்? எல்லா இலக்கிய நூல்களின் ஆரம்பத்திலும் 'பாயிரம்' என்று ஒரு பகுதி உண்டு. இது நூல் ஆசிரியர் தாம் வணங்குகிற குருவுக்கோ, பெரியவர்களுக்கோ அஞ்சலி போல எழுதுகிற பகுதி, சமர்ப்பணம் செய்யும் பகுதி என்று சாதாரண மக்கள் விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக பொதுவாக இப்படிச் சொல்லலாம்.

திருக்குறளின் 'பாயிரம்' பகுதியில் நான்கு அதிகாரங்கள் உண்டு.
1.கடவுள் வாழ்த்து,
2.வான் சிறப்பு,
3.நீத்தார் பெருமை,
4.அறன் வலியுறுத்தல்  என்று.
இதில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து சரி நமக்குப் புரிகிறது.  அடுத்த
அதிகாரம் வான் சிறப்பு என்றால் மழையின் பெருமை அல்லது சிறப்பு.
                               நீத்தார் பெருமை =உயிர் நீத்தவர்கள்,
அல்லது பெரியோர்கள் பற்றின சிறப்பு என்று இயல்பாய் இருக்கிற அர்த்தத்தில் பொருள் கொள்வோமெனில், ஒரு கேள்வி எழுகிறது. கடவுள் வாழ்த்துக்கு அதாவது கடவுளுக்கு இணையாக மழையையும், உயிர் நீத்தவர்களையும் எப்படிச் சொல்லி இருக்கிறார், ஏன் சொல்லி இருக்கிறார், எதற்காக என்றெல்லாம் கேள்விகள் வருமெனில், வெளி வந்துள்ள பல விளக்கவுரைகளை பார்க்கும் பொழுது பல முரண்பாடுகள் வருவதை தெளிவாக சுட்டிக் காட்டுகிறார் புலவர். ஆனால் ஒரு மாற்றாக,

வான் சிறப்பு = மழை சிறப்பு = பரிசுத்த ஆவியானவரை மழைக்கு அடையாளமாக சொல்லி, (பரிசுத்த ஆவியானவரின் மழைக்கு அடையாளமாக சொல்லி) பரிசுத்த ஆவியானவரின் சிறப்பு என்றும்,

நீத்தார் பெருமை = நீத்தவர்கள் அல்ல, நீத்தவர், நமக்காக உயிர் நீத்தவர் = தேவ குமாரன் பெருமை என்றும் பொருள் கொண்டு பார்க்கும் பொழுது, எழுப்பப் படுகிற அநேக கேள்விகளுக்கு திருப்தியான பதில்கள் கிடைக்கின்றன.

குறிப்பாக குறள்களில்வருகிற, ஐந்துவித்தான், மூவர் யார் என்கிற பதங்களை சரியான தளத்தில், இந்த கோணத்தில் தான் விளங்கிக் கொள்ள பொருத்தமாகிறது என்று ஆணித்தரமாக உரைக்கிறார் புலவர்.

தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற மொழிப்பெயர்ப்பாளரும், நாவலாசிரியருமான மறைந்த திரு.க.நா.சு. அவர்கள் எழுதிய சரித்திர நாவல் ஒன்றில் தோமையாருக்கும், திருவள்ளுவருக்கும் இருந்த நட்பு பற்றின தகவல்கள் இந்த நேரத்தில் நினைவுக்கூரத்தக்கது. இதற்கும் திரு.க.நா.சு. அவர்கள் ஒரு கிறிஸ்துவர் அல்ல, வெறும் கற்பனை குதிரையை மட்டும் தட்டிவிட்டு எழுதுபவரும் அல்ல.

திருவள்ளுவர் சரி, அதற்குப் பிறகு வந்த மற்றவர்களில் எவரையாவது சொல்ல முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு வரக்கூடும்.

'சித்தர்கள்' என்று தமிழ் மக்கள் அழைக்கிற அநேகர் (முனிவர்களைப் போன்றவர்கள்) தோமாவின் மூலமாகவும், அதற்குப் பின்பாகவும் ஆண்டவரை அறிந்துக் கொண்டார்கள் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு.

அநேகம் சித்தர் பாடல்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். உருவ வழிபாடும், சிலை வழிபாடும், பல தெய்வ வணக்கமும் ஏதேதோ சடங்கு, சாக்கியங்களும், பூஜை புனஸ்காரங்களும் இருந்திருந்த அந்தக் காலத்தில், அந்த சூழலில் இந்தப் பாடல்கள் அதற்கு எதிராக இருக்கின்றன என்பது எத்தனை வியப்பான விஷயம் அல்லவா? உதாரணத்திற்கு ஒரு சில பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

இதோ 'சிவ வாக்கியார்' எழுதின இரு பாடல்கள்!
"கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குராமரே,
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே!
ஆவதும் அழிவதுவும் இல்லை இல்லை இல்லையே...."(30)
"அழுக்கற தினங்குளித்து அழுக்கறத மாந்தரே 
அழுக்கிருந்தது எவ்விடம், அழுக்கில்லாதது எவ்விடம் 
அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் 
அழுக்கில்லாத சோதியோடு அணுகி வாழல் ஆகுமே" (201) 
எஸ்.தாயப்பன் என்பவர் எழுதின "சித்தர்கள் கண்ட மெய்ப் பொருள்" என்ற சிறுநூலில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான அகத்தியரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, "அவர் மெய்யான தேவனை உணர்ந்து திருவருள் வயப்பட்டு அவரால் ஆட்கொள்ளப்பட்டு, ஞானம் பெற்று, தான் பெற்ற பேரின்ப ஞானத்தை, கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புரட்டி" என ஔவை கிழவி பாடியதைப் போல் பரம் பொருளான இறைவனே அவரிடம் உரைத்தபடி ('அகத்தியர் ஞானம்') என்று முப்பதே பாடல்களில் சுருக்கிப் பாடியுள்ளார்" என்கிறார்.

இப்பாடல்களில் ஒரு சில பாடல்களைப் பார்க்கலாம், எத்தனை நேர்த்தியாக வேதாகமக் கருத்துக்கள் இப்பாடகளில் தொங்கி நிற்கிறது பாருங்கள்.

அகந்தையில் தேவதூதர் விழுந்து போன கதை நமக்குத் தெரியும். அதைச் சொல்கிறது இப்பாடல். இதை படிக்கும் முன்பாக ஏசாயா 14: 12 - 14 வசனங்களையும், யூதா எழுதின நிருபத்தின் 6 வது வசனத்தையும் ஒரு முறை படிக்கவும்.
"தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்."
அகத்தியர் ஞானம் : பாடல் 9
"அலகையது தேவனுக்குச் சரியாய் நின்று,
ஆங்காரம் தானெடுத்து அகந்தையாலே,
நிலை குலைந்து பாதாளக் குழிக்குள் நின்று,
நித்தியமும் மானிடரை மோசம் போக்கி,
பல கலையும் உணர் அறிவை மயக்கித் தங்கள்
பாதாள வீடதிலே பதுங்கச் செய்யும்
நிலையதுவை அறியாமல் போனார் போனார்
நினைத்துப் பார் புலத்தியனே நிசமாய்த்தானே..."
நிச்சயம், இது சித்தர் பாடல் தானா இல்லை சமீபத்தில் எவராவது எழுதியதோவென்று ஒரு கணம் சந்தேகம் வந்து போயிருக்கக்கூடும். அகத்தியரின் இன்னொரு பாடலையும் பார்க்கலாம். தேவன் சகலத்தையும் உண்டாக்கினதில் இருந்து பின் மனு உருவில் வந்ததை சொல்கிறது இது.

அகத்தியர் ஞானம் (15)
"வணங்குவாய் செகசோதி ஒருவனாகி மானிலத்தை
ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின்பு குவலயத்தில்
தான் உதித்துக் குருவாய் வந்து
சனமான சமுசாரம் ஒன்று இல்லாமல் சன்னியாசி போல்
இருந்து தவத்தைக் காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப் போட்டு அகண்டதவம்
சென்றவரை அண்டுவாயே..."
திரித்துவத்தைப் பற்றி திரி ஏக தேவனைப் பற்றிய பாடல் இது.  பல தெய்வ வணக்கங்கள் உள்ள சூழலில், ஆண் /பெண் தெய்வங்கள் என்றெல்லாம் உள்ள சூழலில்,  இப்பாடலின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

அகத்தியர் ஞானம் பாடல் : 20
"முச்சுடராம் ஒன்றாம் மும்மூர்த்தியல்ல;
மூவருமே ஆளுயரம் ஒன்றேயாகும்.
அச்சுதா இவர்களுமே ஆண், பெண் அல்ல;
அரனும் அல்ல; இலிங்கம் அல்ல; அநாதியான
சச்சிதானந்தனையே வணக்கம் செய்து
சற்குருவைத் தரிசித்து சரண் பற்றி,
எச்சரிக்கை கொண்டு நட அப்பா! அப்பா
எண்ணிலா முத்திவழி எய்துவாயே."
சரி வேறு சித்தர்களின் பாடல்கள், இவ்விதமான கருத்துக்களோடு உண்டா என்றால் நிறைய உண்டு. அதிலும் சிலவற்றை பற்றி மட்டும் பார்க்கலாம். இதோ குருவின் (கடவுளின், ஆண்டவரின்) பாதம் மட்டுமே பற்றிக் கொள்ள வலியுறுத்தும் பாம்பாட்டி சித்தரின் பாடல்.
"பொய் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளிம்பும்
மெய்க் குருவின் பாதம் போற்றி ஆடாய் பாம்பே..."
புராண புருஷர்கள் எல்லாம் வெறும் மனிதர்கள் தாம் என்று சொல்லும் சித்தர் திருமூலரின் பாடல்.
"பல கலைகளோ துவகை நாலுந்தானும்பண்ணியதோர் நால் வேத மாறு சாஸ்திரம் அலையுடனே தத்துவங்கள் தொண்ணுற்றலும் அவைகளிலே பொய் களவு அதர்மஞ்சேரும் மலையரசன் சிவன், பிரம்மா, விஷ்ணு தானும் மாசில்லா நாதருட வழியுங் காணார் நிலை பெருக மோட்ச வழி காணாததாலே நீதியற்ற மனிதரென்று நிகழ்த்தினோமே..."
இன்னொரு சித்தர் பாடல் உக்கிரமாகச் சொல்கிறது
"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பஞ் சாத்து றீர்
சுத்தி வந்து முணுமுணுவென்று சொல்லு மந்திரமேதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்டச் சட்டி சட்டுவங்கறிச் சுவை யறியுமோ?
மாறுபட்ட மணி கிலுக்கி மலரிறைத்து வீணிலே
உறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே
வேறுபட்ட தேவரும் விரும்புகின்ற உண்மையுங்
கூறுபட்டதேது காண் குருக்கள் பூசை பண்ணுகிறீர்"
இப்படி சொல்லிக் கொண்டே போகமுடியும். 'சித்தர் பாடல்களும், கிறிஸ்தவமும்' பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் மைக்கேல் பாரடே இன்னும் விவரங்களை தரக்கூடும்.  ஆனால் நம் கட்டுரையின் நேரடியான நோக்கம் அதுவல்ல. தோமாவின் ஊழியத்தின் கனிகளாய் இருந்த இவர்கள் இவர்களைப் போன்றிருந்தவர்கள் என்னவானார்கள் என்பது இன்னொரு கட்டுரை எழுத வேண்டிய அளவிற்கான விஷயம். சாது செல்லப்பா அவர்களின் குறுந்தகடு ஒன்றில் அவர் பேசும்போது இப்படி குறிப்பிடுகிறார், 'சுவாமி விவேகானந்தர் எழுதிய ஞானதீபம் என்ற புத்தகத்திலே நான் படித்தேன், முதல் நூற்றாண்டிலேயே இந்தியாவிலே 33,000 கிறிஸ்துவர்கள், அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் இருந்தார்களாம்.' என்று.



அவர்களின் நம்பிக்கைகளில் எப்படி பின்பு வந்த ஆரியர்களின் தலையீடு, பாதிப்பு எல்லாவற்றையும் மாற்றி திசை திருப்பிப் போட்டது பற்றி பல ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. இது ஒரு பக்கமிருக்கட்டும்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் எழுப்பின கேள்விகளுக்கு, அதாவது தோமா எப்படியாக ஆண்டவரை பற்றின நற்செய்தியை என்ன விதமாய் வைத்திருக்க முடியும் என்பதை சில பதிவுகளைக் கொண்டு யூகிக்க முற்படலாம்.


'தோமா எழுதின சுவிஷேசம்' என்ற புத்தகம் பற்றி நம்மில் ஒரு சிலர் கேள்விப்பட்டிருக்கக் கூடும். முன்பாக இதன் சில பகுதிகள் மட்டுமே ('OXYRHYNCHUS' என்ற தொகுப்பில் இருந்தன)  நமக்கு முன்பாகவே கிடைக்கப் பெற்றிருந்தாலும், 1945ம் வருடம் எகிப்து தேசத்தில் உள்ள நாக் ஹம்மாடி (NAG HAMMADI) யில் தற்செயலாய் கிடைத்த ஒரு பெரிய பானை ஒன்றில் கிடைத்த ஏராளமான பாப்பிரஸ் பிரதிகளில் (PAPYRUS MANUSCRIPTS) இந்த தோமாவின் சுவிஷேசமும் முழு அளவில் கிடைத்தது.





பலர், இது மற்ற சுவிசேஷங்களுக்கு முன்பதாகவே எழுதப்பட்டிருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள், 114 வசனங்களைக் கொண்ட இந்த சுவிஷேசத்தில் பல பகுதிகள், குறிப்பாக உவமைகள், நம்மின் ஒத்திசைவு சுவிசேஷங்களுக்கு இணையாக இருந்தாலுமே நம் வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் வேறு பல்வகை காரணங்களுக்காக சேர்க்கப்படவில்லை. அநேக பண்டிதர்கள் தோமாவின் சுவிசேஷத்தின் பல பகுதிகள், அங்கீகரிக்கப்பட வேண்டிய அளவிற்கு சிறப்பாக இருக்கின்றன என்கிறார்கள்.

தோமாவின் சுவிசேஷத்தையும், யோவானின் சுவிஷேசத்தையும் ஒப்பிட்டு பலர் ஆய்வு செய்துள்ளனர் என்பது இன்னொரு விஷேசம். (ஒப்பிடுதல்) காரணம் என்னவெனில் இரண்டிற்கும் பொதுவான இறையியல் அடிப்படை உண்டு என்பது தான். (வித்தியாசங்கள் உண்டு, வேறு பலவற்றில்)  இதில் நமக்கு பயன்படுகிற ஒன்றை மட்டும் பார்ப்போம்.

இருவருமே ஆண்டவரை வெளிச்சமாக ஒளியாக பார்க்கிறார்கள்.  யோவான் முதலாம் அதிகாரம் 1 - 9 வசனங்களில் இயேசு 'ஒளி'யாக அறிமுகப்படுத்தப் படுகிறார். யோவான் ஸ்நானனைப் பற்றிக் கூறும்பொழுது "அவன் அந்த ஒளியல்ல. அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தவன்" என்கிறார். பின் 9வது வசனத்தில் எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியே அந்த மெய்யான ஒளி என்கிறார். பிறகு யோவான் 8:12ல் இயேசு ஜனங்களை நோக்கி "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" என்றார். யோவான் 1:3ல் "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" என்கிறது.
இதே கருத்தை பிரதிபலிப்பதைப் போல தோமா சுவிஷேசத்தின் 77வது வசனம் இப்படியாகச் சொல்கிறது, இயேசு சொல்கிறார்
'எல்லாவற்றின் மேலும் பிரகாசிக்கிற ஒளி நானே. நான் எங்குமிருக்கிறேன். என்னிடமிருந்தே எல்லாம் உண்டானது, என்னிடமே எல்லாம் திரும்பும்...'

இவைகளை எல்லாம் நாம் இப்போது எதற்கு பார்க்கிறோம் என்றால், தோமா ஆண்டவரை ஒளியாக, வெளிச்சமாக, அறியாமை, தீமை என்ற இருளிலிருந்து விடுவிக்கிறவராயும் அந்நாட்களில் மக்களுக்கு முன் வைத்திருக்க வேண்டும். இருள் நிறைந்த எல்லாவற்றிலிருந்தும் விடுதலை தருகிறவராய் ஆண்டவரை பற்றி உள்வாங்கிக் கொண்டதாலோ என்னவோ பல சித்தர் பாடல்களில் ஆண்டவரை சோதியாக, ஒளியாக, வெளிச்சமாக உருவகிப்பதைப் பார்க்க முடிகிறது. தங்களை இத்தகைய இருள்களிலிருந்து மீட்டுக் கொள்கிறவராயும், உருவமற்றவராயும் பார்க்க முடிந்திருக்கிறதோ என்று நாம் யூகிக்க இடமிருக்கிறது.

இக்காரியங்கள் நமக்கு திரும்பத் திரும்ப உணர்த்துகிற காரியங்களில் ஒன்று, அவரின் வழிகள் அற்புதமானவைகள், ஆராய்ந்து முடியாதவைகள்.
-எட்வினா ஜோனாஸ் 

6 comments:

  1. Dear friend,
    Refered to Agathiyar Gnanam 15:- I have searched and found Agathiyar Gnana Padalgal but nowhere, i could find this "Vananguvai Jegasothi oruvnaihi". If you have any link, please share.
    Several christian blogs refer this (Padal). If this Padal is incorrect, christians will not be able to save any soul but gain anger and hatred. This type of act prevent a hindu from saving; I believe Jesus did not expect such strategy.
    There are lot of coincidence in Siththar Padalgal and Bible. As you said, Thomas Bible and John's gospel coincide a lot in Hinduism/Saivism.
    One God, Trinity , Soul are beautifully explained in Hindu/Saivism with fine details. May be kept as secret for modern hindus/Saivists.
    For Christians, Thomas bible and Book of Enok are kept secret as well.
    I humbly recommend all christians shall read books of Hindus (4 Vetham-Upanishad-12 Thirumurai-Thiruneni) for better understanding of bible.
    The secrets in bible are revealed awesome in hindu/Saivism.

    some coincidence are follows:
    1.John 1:1-5 with Yoga Sutra 1:27.
    2.John 14:6 Vs Hindu Mantras (All mantras start with Aum)
    3.Amen Hallelujah (Rev 19:4) Vs. Aum Namshivaya.
    4. Rev 1:8, 21:6,22:13 Vs Yoga Sutra 1:27


    By the way, if Hindus are believing in one God, Trinity , Word of God (Aum=Pranavam), what do christians expect from Hindus after christening?

    ReplyDelete
  2. யூதர்கள்,கிருஸ்தவர்கள் புராண சமயத்தில் இருந்து அபகரித்த நம்பிக்கைகள் ஒன்று இரண்டு அல்ல
    1.ஆமென் என்பது எகிப்தியர்கள் வணங்கிய தெய்வம்
    2.அல்லேலுயா என்பது வேதத்தில் சிவனை போற்றும் நாமம்
    இப்படி இன்னும் ஆழமான ஆய்வுகளில் வெளிவந்த முக்கிய தலைப்புகள்
    1.உயிர்த்தெழுதலும் உயிரற்ற ஆதாரமும்
    2.கன்னி மேரி வரலாற்று உன்மையான
    3.புதிய ஏற்பாடும் பழைய அரிதாரமும்
    இந்த ஒவ்வோரு
    தலைப்பும்
    மிக ஆழமான ஆழ்வுக்குறிப்புக்களை கொண்டுள்ளது
    ஆதாரம் யூடுப் சேனல் பெயர்
    "அறிவொளி மன்றம்" கிருஸ்தவ அபகரிப்பை அறிந்து கொள்ள வாரீர்

    ReplyDelete
  3. கிருஸ்தவ அபகரிப்பை அறிய
    அறிவொளி மன்றம் சேனல் மூலம் வரலாற்று ஆதாரங்கள் உடன் அறிய வாரீர்

    ReplyDelete
  4. யூதர்கள்,கிருஸ்தவர்கள் புராண சமயத்தில் இருந்து அபகரித்த நம்பிக்கைகள் ஒன்று இரண்டு அல்ல
    1.ஆமென் என்பது எகிப்தியர்கள் வணங்கிய தெய்வம்
    2.அல்லேலுயா என்பது வேதத்தில் சிவனை போற்றும் நாமம்
    இப்படி இன்னும் ஆழமான ஆய்வுகளில் வெளிவந்த முக்கிய தலைப்புகள்
    1.உயிர்த்தெழுதலும் உயிரற்ற ஆதாரமும்
    2.கன்னி மேரி வரலாற்று உன்மையான
    3.புதிய ஏற்பாடும் பழைய அரிதாரமும்
    இந்த ஒவ்வோரு
    தலைப்பும்
    மிக ஆழமான ஆழ்வுக்குறிப்புக்களை கொண்டுள்ளது
    ஆதாரம் யூடுப் சேனல் பெயர்
    "அறிவொளி மன்றம்" கிருஸ்தவ அபகரிப்பை அறிந்து கொள்ள வாரீர

    ReplyDelete