இன்கா சாம்ராஜ்யம் (Inca Empire), இன்கா நாகரீகம் (Inca Civilization) விபரங்களை நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கி.பி. 14வது நூற்றாண்டில் உலகிலேயே பெரியதொரு சாம்ராஜ்யமாக இன்கா அரசு இருந்தது. மட்டுமல்ல உலகின் மேற்குப் பகுதியில் இதுவரை சரித்திரம் கண்ட பழம்பெரும் அரசுகளில் இதுவே மிகப் பெரியதும், அகன்று பரந்திருந்ததொன்றுமாகும். 'இன்கா'வின் செல்வச் செழிப்பும், வாழ்வியல் முன்னேற்றங்களும் நவீன விஞ்ஞானத்திற்கே சவால் விடக் கூடிய பல பொறியியல் அற்புதங்களும், இன்றைக்கும் மானுடவியலாளர்களையும், புதைப்பொருள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இன்கா சாம்ராஜ்யம் அதன் உச்சநிலையில் வடக்கு, தெற்காக 2500 மைல் நீண்டிருந்தது எனில் அதன் விஸ்தீரணத்தை கொஞ்சம் மனதில் கொண்டு வரப் பாருங்களேன். 'சக்கரம்' என்ற விஷயம் கண்டுப்பிடிக்கப்படாத நாட்கள் அவை.
என்றாலும், இன்கா சாம்ராஜ்யமெங்கும் போடப்பட்டிருந்தப் பாதைகள் இன்றும் காணக்கிடைக்கின்றன. அந்தியன் (Andean) மலைப்பகுதிகளிலும் விரிந்திருந்த இந்த அரசில், சில பகுதிகள் 15000 அடிக்கும் மேலாக இருப்பவை. அதாவது நம்முடைய பனிப்படர்ந்த இமயமலைக்கு அடுத்தப்படியாக மிக மோசமான, கடுமையான காலநிலையைக் கொண்டவைகளாகும். இந்தப் பகுதிகளிலும் சேர்ந்து, 14000 மைல்களுக்கும் அதிகமாக பாதைகள் போடப்பட்டிருந்தன. பாதைகள் கற்களால் ஆனவை. 3அடி அகலத்திற்கு உட்பட்டவை, என்றாலும் சரிவுகளில் பயணிக்கிறவர்கள் விழுந்துவிடாதபடி, அங்கங்கே பக்கவாட்டுச் சுவர் போல அமைக்கப்பட்டிருந்தன. தவிர பயணிகள் ஓய்வெடுக்க, தங்கிப்போவதற்கென்று குறிப்பிட்ட தூரங்களில் தங்குமிடங்கள் இருந்தன. இதன் விளைவாக தகவல் பரிமாற்றங்களும், பொருட்கள் கொண்டுப் போகபடுகிற காரியங்களும் இலகுவாகவும் வேகமாகவும் இருக்க வாய்ப்புகள் இருந்தன. மலைப்பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளும், சரிவுகளில் அமைந்திருந்த கோட்டைகளும் வசிக்கிறவர்களுக்கு தேவைப்படுகிற தண்ணீரைக் கொண்டு போக பயன்படுத்தப்பட்ட உத்திகளும் இன்றைய பொறியியலாளர்களையும் வியக்க வைக்கின்றன.
15வது நூற்றாண்டில் ஸ்பெயின் தேசத்து ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதலுக்கு 'இன்கா'வின் ராஜ குடும்பத்தினர் தப்பி ஒளிந்த இடம் இங்கு தான் என்று சொல்லப்படுகிறது. இதில் நம்பமுடியாத ஆச்சர்யம் என்னவெனில் ஸ்பெயின் தேசத்துக்காரர்களால் இப்படியாக ஒரு கோட்டை இருந்ததை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அடர்ந்த காடுகளின் நடுவே, நெடுக உயர்ந்திருந்த ஒரு மலைச் சிகரத்தின் இன்னொரு புறமாக நிறுவப்பட்டிருந்த இந்த கோட்டை, கீழே, எங்கிருந்து பார்த்தாலும் கண்களுக்கே தெரியாதாம்.
பல நூற்றாண்டுகளாக இந்த மச்சு பிச்சு கோட்டை இருந்ததே வெளி உலகிற்கு தெரியாத நிலையில் (ஆனால் ஒரு சில பழங்குடி இன இந்தியர்களுக்கு மட்டுமே இது பற்றி தெரிந்திருந்ததாம்) 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிரிசஸ்பிட்டேரியன் மிஷனரி தாமஸ் பைன் (Thomas Paine) பெரு நாட்டுப் பகுதியில் ஊழியம் செய்தப் பொழுது, நண்பர்களாகி விட்ட சில பழங்குடி இன இந்தியர்கள் மூலமாக கேள்விப்பட்டு, அந்த இடத்திற்குப் போய் வியந்து போய், இங்கிலாந்து அரசின் தொல்பொருள் இலாக்காவிற்கு எழுத அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.
ஆனால் யேல் (Yale) பகுதியைச் சேர்ந்த மானுடவியலாளர் ஹிராம் பிங்காம் (Hiram Bingham) தாமஸ் பைனின் கண்டுபிடிப்பு பற்றி கேள்விப்பட்டு, அவரும் சிலரின் உதவியோடு அந்த 'மச்சு பிச்சு' பகுதிக்குப் போய் சேர்ந்தார். 'காணாமல் போயிருந்த இன்கா நகரம்' என்று உலகிற்கு பெரிய அளவில் அடையாளம் காட்டிய பெருமை பிங்காமிற்குப் போய் சேர்ந்தது என்றாலும், அதற்கு மூலகாரணமாய் இருந்த மிஷனெரி தாமஸ் பைனை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வேறு விஷயம்.
இந்த நாட்களில் மிக மிக அதிகமாக உல்லாசப் பயணிகள் வந்து போகிற இடங்களில் இந்த மச்சு பிச்சு பகுதியும் ஒன்று. அதுவும் 1948ல் இப்பகுதிக்கு போவதற்கான பாதைகள் அமைக்கப்பட்டு, சீர் செய்த பிறகு மச்சு பிச்சுவின் அற்புத அழகு, அதன் பிரமாண்டம், கட்டிட அமைப்புகளில் தெரிந்த பொறியியல் நேர்த்தி பற்றியெல்லாம் சிலாகித்து, பிரமித்தவர்கள், அதை அமைத்த இன்காவின் அரசனான 'பச்சாக்குட்டி' பற்றியும் அறிய, ஆராய முற்பட்டார்கள்.
பிரமாண்ட கட்டுமான அமைப்புகளில் உள்ள அவரின் ஈடுபாடுகளைத் தாண்டி தெரிய வந்த வேறு சில சிறப்பியல்புகள் அவரின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டி, அதன் வெளிச்சத்தில் அவருடைய சாதனைகளையெல்லாம் புதிய கோணங்களில் புரிந்து கொள்ள உதவி செய்தது.
நாம் சென்ற வலை பதிவின் தேடலில் பார்த்த எப்பிமெனெடிசை போல இவரும் ஆன்மீக காரியங்களில் தேடல் உள்ள ஒருவராக இருந்தார். இது அன்றைய காலகட்ட சூழலில் எத்தனை அபூர்வமும், ஆச்சரியமுமான ஒன்று என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இன்கா மக்கள் பல தெய்வ வணக்கமுள்ளவர்கள் என்றாலும், அவர்கள் வழிபட்டது இயற்கையின் சக்திகளாக இருந்த வானம், பூமி, மழை, இடி போன்றவைகளை தெய்வங்களாக ஏற்றுக்கொண்டதோடு, அவர்களின் முக்கிய தெய்வமாக 'இண்டி'யை (Inti) அதாவது சூரிய தேவனையே வைத்திருந்தனர். பச்சாகுட்டியுமே கூட சூரிய தேவனுக்கென்று அமைத்த ஒரு பெரிய கோவிலை பற்றி முன்பாகவே நாம் குறிப்பிட்டிருக்கிறோம்.
இதைத் தாண்டி ஒரு பெரிய கடவுளாக அவர்களது பாரம்பரியத்தில் விரகோச்சாவும் (Viracocha) இருந்தது. இந்த கடவுள் தாம் சர்வத்தையும் படைத்தவர் என்றும் மலைகள் ஓரமாய் போகும் நதி உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் அவர் நடந்து சென்று பசிபிக் கடலுக்குப் போனார். ஆனால் திரும்பவும் வருவார் என்றும், அவரது முகச்சாயல் அங்குள்ள பெரிய மலைமுகப்பில் மிகப் பிரமாண்ட அளவிற்கு இருப்பதாகவும் நம்பினார்கள்.
பொதுக் குற்றங்கள் குறைவாக இருந்த 'இன்கா' சமுதாயத்தில் அதிகபட்ச தண்டனை பெறக்கூடிய பட்டியலில் 'கடவுளர்களைப் பற்றி தப்பிதமாக சொல்வது' என்பதும் முக்கியமானதொன்று. ஆக இப்படியான மத உணர்வு உள்ள இன்கா சூழலில் தான் பச்சாகுட்டியின் ஆன்மீக தேடல் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்.
சரி. பச்சாகுட்டி எவைகளை வைத்து இந்த ஆன்மீகத் தேடல் இருந்தது என்பதை அறிய வந்தது ஒரு சுவாரசியமான நிகழ்வாகும்.
பொதுக் குற்றங்கள் குறைவாக இருந்த 'இன்கா' சமுதாயத்தில் அதிகபட்ச தண்டனை பெறக்கூடிய பட்டியலில் 'கடவுளர்களைப் பற்றி தப்பிதமாக சொல்வது' என்பதும் முக்கியமானதொன்று. ஆக இப்படியான மத உணர்வு உள்ள இன்கா சூழலில் தான் பச்சாகுட்டியின் ஆன்மீக தேடல் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்.
சரி. பச்சாகுட்டி எவைகளை வைத்து இந்த ஆன்மீகத் தேடல் இருந்தது என்பதை அறிய வந்தது ஒரு சுவாரசியமான நிகழ்வாகும்.
1575ல் குஷ்கோவில் (Cusco) கிறிஸ்டோபல் டி மோலினா (Cristóbal de Molina) என்கிற ஸ்பெயின் தேசத்து பாதிரியார் ஒருவர் 'இன்கா'வில் வழங்கப்பட்டு வந்த பாடல்கள் மற்றும் அதன் தொடர்பான பாரம்பரியங்களை சேகரித்து (Account of the Fables and Rites of the Incas) தொகுத்து வைத்திருந்தார். அவைகளை ஆராயும் பொழுது தான் சூரிய தேவனை 'இன்கா' மக்கள் பிரதான தெய்வமாக வணங்கியதை உலகமே அறிந்திருந்தாலும், அது பற்றி கேள்விகள் எழாமல் இல்லை என்பதை பல பாடல்கள் உணர்த்தின. 'இன்கா' மொழியை க்யூச்வா (Quechua)என்று அழைப்பார்கள் என்றாலும், எழுத்துக்களைக் கூட்டி உச்சரிக்கிற காரியங்கள் ஸ்பானிய மொழியிலிருந்தே பெறப்பட்டவைகளாகும். ஏனெனில் அவர்களுக்கு எழுதும் முறை என்று எதுவுமில்லை. இதில் தொகுக்கப்பட்ட எல்லா பாடல்களுமே பச்சாகுட்டி காலத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோலினாவின் தொகுப்பை ஆராய்ந்த அறிஞர்கள் அதில் மிளிர்ந்த புரட்சிகரமான கருத்துக்களைப் பார்த்து வியந்து போனார்கள். எந்த அளவிற்கு என்றால், சிலர் இந்தப் பாடல்கள் 'இன்கா' காலத்தினுடையதே அல்ல என்று சொல்லுமளவிற்கு. பலர் டி மோலினா இந்தப் பாடல்களை தொகுத்த பொழுது சில மாற்றங்களை செய்து ஐரோப்பிய சிந்தனைகளைப் புகுத்தியிருக்கக்கூடும் என்றார்கள்.
ஆனாலும் அல்பிரட் மேட்ரக்ஸ் (Alfred Metraux), ஜான் ரோ (John Row) போன்ற அறிஞர்கள் மோலினா தொகுத்த இன்கா பாடல்கள், அதன் மூல வடிவம் கெடாமல் இருக்கிறது என்றும், மிஷனரிகளின் போதனைகளின் புகுத்தல்கள் எதுவும் இல்லை எனவும், பதப்பிரயோகங்களும், விவரிப்புகளும் இன்கா மொழியில் உள்ள கிறிஸ்தவ நூல்களில் உள்ள பதப் பயன்பாடுகளுக்கும் விவரிப்புகளுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறதென்றும் கூறினார்கள்.
டி மோலினா தொகுத்ததின் உண்மைத்தன்மையை உறுதி செய்கிற விதமாய் இன்னொரு ஆதாரமும் கிடைத்தது. 17வது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இன்கா இந்திய சேகரிப்பாளர் அதே போன்ற இன்கா பாடல்களை சேகரித்து வைத்திருந்தார். இந்த பாடல்களையும் மோலினா தொகுப்பினையும் ஒப்பிட்ட பொழுது, இரண்டிற்கும் பெரிய அளவில் ஒற்றுமை இருந்தது. பதப் பிரயோகங்களிலிருந்து பலவற்றிலும்.
மேட்ரக்ஸ் இன்னமும் இப்பாடல்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, அதில் தெரிகிற சிந்தனைச் செழிப்பும், கவித்துவமும் நம் வேதாகமத்தில் சங்கீதங்களோடு ஒப்பிடும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார்.
சரி. இப்பாடல்களின் புரட்சிகரமான இத்தன்மைக்கு இப்போது என்ன சிறப்பும், முக்கியத்துவமும் உள்ளது என்று நீங்கள் நினைக்கக் கூடும். சில பாரம்பரியங்களின்படி பச்சாகுட்டி 'இண்டி' கோவிலை குஷ்கோவில் திரும்ப பிரமாண்டமாய் கட்டி சூரிய தேவ வழிபாட்டுக்கு தன்னை அர்ப்பணித்திருந்தவராகும். ஆனால் பிறகு எப்படி அவருக்கு இந்த மாற்றம் வந்திருக்க முடியும்...? பிலிப் எய்ன்ஸ்வர்த் (Philip Ainsworth) என்ற அறிஞர் இதைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,
'சூரியன் எப்போதுமே, ஒரு குறிப்பிட்ட பாதையில் சென்று, குறிப்பிட்ட சில செயல்களை செய்து கொண்டே இருக்கிறது. அதாவது ஒரு பணியாளனைப் போல! சூரியன் எல்லாவற்றிற்கும் மேலான தெய்வம் என்றால் ஏன் இப்படி இருக்க வேண்டும்? அதுவும் கருமேகம் வரும்பொழுது சூரிய பிரகாசம் மங்கிப் போகிறதே, எப்படி? வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் படைக்கப்பட்ட ஒரு பொருள், சூரியன், உண்மையிலேயே ஒரு கடவுளாக இருந்திருக்க முடியுமென்றால் பிரகாச காந்தியை மறைத்திருக்க முடியாதே... இப்படியான சிந்தனைகள் தாம் பச்சாகுட்டியை திடுமென வேறு ஒரு புரிதலுக்கு கொண்டு போயிருக்க வேண்டும்' என்கிறார்.
அதாவது, அதுவரை படைக்கப்பட்டிருந்த ஒரு படைப்பினையே தொழுது வந்திருக்கிறோமே தவிர எல்லாவற்றையும் படைத்த பரமனை அல்ல என்ற தெளிவுக்கு பச்சாகுட்டி வந்தபொழுது இந்த கேள்வியும் எழுந்திருக்க வேண்டும். 'இண்டி' அல்லது சூரியன் உண்மையான கடவுள் இல்லை என்றால் யார் உண்மையான கடவுள்?
யூத மற்றும் கிறிஸ்தவ வாசனையும், வெளிச்சமும் பற்றி ஏதும் அறியாத ஒரு இன்கா அரசன் எப்படி இந்த கேள்விக்கு பதில் கண்டறிய முடியும்?
தன்னுடைய பாரம்பரியங்களினூடாக தேடினவன் தன் மக்கள் அநேகமாக மறந்து போன ஒரு காரியத்தை நாடினான். விரகோச்சாவை (Viracocha) ஆண்டவரும்,எல்லாவற்றையும் படைத்தவருமானவர் என்று அவர்கள் நம்பின, அவர்களின் விரகோச்சாவைத் தான் நாடினார். அதிதொன்மையானதாக இந்த விரகோச்சாவின் வழிபாட்டில் இருந்து திசை மாறினது தான் சூரிய தேவன் மற்றும் பிற குட்டி கடவுளர்களின் வணக்கங்கள் என்றெல்லாம் போலிருந்தது. பச்சாகுட்டிக்கு இன்னொன்றும் நினைவுக்கு வந்தது. அவருடைய தந்தை ஹாட்டன் டூபக்கிற்கு (Haitan Tupac) கனவில் ஒருமுறை இந்த விரகோச்சா வந்து தன்னைப் பற்றி வெளிப்படுத்தி சொல்லப்பட்டதெல்லாம்!
ஆக எல்லாவற்றையும் படைத்தவராய் கடவுள் ஒருவர் இருக்க, அவரை மட்டுமே தொழுது கொள்வது தான் நல்லது என்று பச்சாகுட்டி முடிவெடுத்தார். அதை விடுத்து அந்த இடத்தில் படைக்கப்பட்டவைகளை வைத்து வணங்குவது தவறு என்றும் எல்லாருக்கும் உணர்த்த தோணிற்று. யோசித்தவன் மிகவும் அழகான கொரிகன்சா (Coricancha) என்ற இடத்தில் ஒரு பெரிய இறையியல் கூட்டத்தைப் போல கூட்டினான் இது பற்றி தீர்மானிக்க.
கொஞ்சம் குறைய கி.பி. 3ம் நூற்றாண்டில் ஆதி கிறிஸ்தவ சபைகள் கூட்டின நிசேயா கவுன்சில் போல. அந்த பெரிய கூட்டத்தில் பச்சாகுட்டி சூரிய தேவன் பற்றி தன் சந்தேகங்களை இவ்விதமாய் வெளியிட்டார்.
1. சூரியன் உலகம் முழுமைக்குமான கடவுள் என்று சொல்ல முடியாது; ஏனெனில் சிலருக்கு வெளிச்சத்தைக் கொடுத்து, சிலருக்கு கொடாதிருக்க முடியாது.
2. சூரியன் பணியாளனைப் போல ஓய்வெடுத்துக் கொள்வதாலும், இன்னும் சில செயல்பாடுகளினாலும் அது முழுமை பெற்றது என்று சொல்ல முடியாது.
3. சூரியன் சர்வவல்லமையுடையது என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு சிறிய மேகம் கூட அதை மறைத்து விட முடியும்.பிறகு பச்சாகுட்டி சூரிய வணக்கத்திற்கு மாற்றாக எங்கும் வியாபித்திருக்கக் கூடிய கடவுளைப் பற்றி, விரகோச்சா பற்றின கருத்துக்களை வைத்தார். அவை:
- 'அவர் மிகத் தொன்மையானவர்,
- சர்வ வல்லவர்,
- படைக்கப்பட்டவர் அல்ல,
- இருந்துகொண்டே இருப்பவர்,
- தம்மைத்தாம் விரும்புகிற பொழுது திரித்துவமாக வெளிப்படுத்துகிறவர், மற்றபடி தூதர் சேனைகள் சூழ்ந்திருக்க பரலோகத்தில் இருப்பவர்.
- அவர் மக்களை, எல்லாவற்றையும் தம் வார்த்தையினால் உண்டாக்கினார். (இந்த இடத்தில் யோவான் சுவிசேஷத்தின் ஆரம்ப வரிகள் நம் நினைவில் வருகிறதல்லவா?)
- அவரே மனிதனுக்கு எல்லாவற்றையும் தருகிறவர்; போஷிக்கிறவர்,
- உண்மையில் அவரே மனித வாழ்வின் நோக்கமாய் இருக்கிறார்,
- மக்களை தமது மகன் மூலமாய் காக்கிறார், அவரே சமாதானத்தைத் தருகிறார்,
- எல்லா நியதிகளையும் காக்கிறவர், மனிதனின் பரிதாபகரமான தன்மையில், பலவீனங்களில் இரக்கமுள்ளவர்,
- அவரே மனிதனைத் தீர்ப்பு செய்கிறவர்,
- அவனுள் எழும் தீய செயல்பாடுகளை எதிர்த்து போராட உதவியும் செய்கிறார்.'
பச்சாகுட்டியின் இந்த செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதில் வியப்பில்லை தான். சூரிய தேவனுக்கு என்றிருந்த பூசாரிகள் கடுமையாக இதை எதிர்த்தார்கள். பச்சாகுட்டியின் ஒவ்வொரு அறிவிப்பும் வெடிகுண்டுகளைப் போல அவர்களைத் தடுமாற வைத்தன. என்றாலுமே பலர் பச்சாகுட்டியின் வாதங்களில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டு 'விரகோச்சா' பற்றி யோசித்து தொழுதுகொள்ளத் துவங்கினார்கள். போகப்போக எதிர்ப்புகள் அதிகம் வந்து, வலுத்தது. பல நூறு ஆண்டுகளாக இருந்து வந்த சூரிய வணக்கத்தை இல்லை என்றால் என்ன சொல்வது? அப்படியானால் முன்னோர்கள் செய்தது எல்லாம் தவறாகவா இருக்கும்? அத்தனை சிரமப்பட்டு கட்டப்பட்டிருந்த கோவில்கள் எல்லாம் வீண் தானா?இப்போது இவைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு புதிதாக மறுபடியுமாக முதலில் இருந்து துவங்குவது போல விரகோச்சாவை வணங்க ஆரம்பிக்க வேண்டுமா?' என்றெல்லாம் சிறிதும் பெரிதுமான குழப்பங்கள் பல நிலைகளிலும், பெரிய அளவில் நிச்சயமின்மை வர, உருவாகும் இந்த புதிய அரசியல் நெருக்கடியை சமாளிக்க பச்சாகுட்டியும் சற்றே வளைந்து கொடுத்து தன் போக்கை சற்று மாற்றிக் கொள்ளுமளவிற்கு சூழல்கள் உருவாகின.
அதன் ஒரு விளைவாக 'விரகோச்சா' வழிபாட்டை உயர்குல மக்களுக்கு உரியதென்றும், இந்த நம்பிக்கையை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்த எவ்வித நிர்பந்தமும் இல்லை என்பது போல ஒரு தீர்வு வந்தது. ஆக அருமையாக உருவான ஒரு மறுமலர்ச்சி காலப்போக்கில் இன்காவின் உயர்குல மக்களிடம் மட்டுமாய் இருக்கிறதொன்றாக சுருங்கிப் போயிற்று. ஆக சரித்திர பூர்வமாய் சில காலங்களுக்கு மட்டுமே இருந்ததொன்றாகிப் போயிற்று.
ஆனால் பச்சாகுட்டியின் மறைவிற்குப் பிறகு நூறு வருடங்களுக்குள்ளாக இரக்கமற்ற, பொருளாசை பிடித்த ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வந்து இன்காவின் உயர்குடி மக்களை அநேகமாய் ஒழித்தே விட, சாதாரண மக்கள் ஆன்மீக இருளில் இன்னமும் சூரிய தேவனையும் மற்ற குட்டி தெய்வங்களையும் வணங்கிக் கொண்டு வர, முயன்ற மாற்றங்களைப் பற்றி பெரிதாக ஏதுமே அறியாதவர்களாகவே இருந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு சமயம் இந்த பேராசை பிடித்த ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பதில், அதற்கு முன்பாக ஐரோப்பாவில் இருந்து கிறிஸ்தவ மிஷனரிகள் போய் இருந்திருப்பார்கள் எனில் இன்று சரித்திரமே வேறு விதமாக இருந்திருக்கக்கூடும். ஏனென்றால் இன்கா நம்பிக்கைகளில் ஒன்று 'விரகோச்சா கடவுள் ஒரு நாள் மேற்குப் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக வரப்போகிற மனிதர் மூலமாக புது ஆசீர்வாதத்தைக் கொண்டு வருவார்' என்று சொல்கிறது.
ஆனால் ஒரு சோக முரண்பாட்டைப் போல, சில இடங்களில் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு வந்த ஸ்பானிய பிஸாரோவும் (Pizarro Spanien) அவன் ஆட்களும் கடல் மார்க்கமாய் வந்தவர்கள். அவர்களின் நம்பிக்கையை அழித்து அந்த இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இன்காவின் செல்வங்களை கொள்ளையடித்து தங்கள் நாட்டிற்கு கொண்டுப் போனார்கள். ஒரு சமயம் இது 'விரகோச்சா'வின் கோபமோ? சொல்ல இயலாது தான் நமக்கு. இன்னுமொரு ஆச்சரியமான சோகம் என்னவெனில் ஒரு பெரிய கொள்ளை நோய் தாக்கி, 'இன்கா'வில் பெரும்பாலானவர்கள் மடிந்து போனார்கள். 15வது நூற்றாண்டின் பிற்பகுதியில் எது, எப்படியோ உண்மையான கடவுளைத் தேடின இன்கா அரசன் பச்சாகுட்டியை நாம் எப்பிமெனிடிஸ் உடன் கூட வைத்துப் பார்க்கலாமென்பது சரி தான்.
"சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், அவர் நன்மை செய்து வந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப் பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்." (அப்போஸ்தலர் 14: 16, 17)
-எட்வினா ஜோனாஸ்
Bro images seama super 😊. And onga post really good bro . Romba thanks onga lo da information Ku.
ReplyDeleteSuper bro
ReplyDeleteSuper bro
ReplyDelete