அப்போஸ்தலர் நடபடிகள் 17ம் அதிகாரத்தில் அத்தேனே பட்டணத்தின் மார்ஸ் மேடையிலிருந்து பவுல் செய்த பிரசங்கம், மிகவும் பிரசித்தி பெற்றதும், அநேகமாக நம் அனைவருக்கும் தெரிந்ததொன்று தாம். அதில் 23ம் வசனத்தில் வருகிற
"...அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலி பீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்"
என்ற பகுதி தாம்.
இதில் வருகிற அறியப்படாத தேவன் (THE UNKNOWN GOD) யார்? பவுல் எப்படி அத்தனை நிச்சயமாக அந்த அறியப்படாத தேவன் தான், தாம் அறிவிக்கப் போகிற தேவன் என்று அறிவிக்க முற்பட்டார்.
சுவாரஸ்யம் மிக்க இக்கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமெனில் இச்சம்பவம் தொடர்பான சரித்திர பின்னணியைப் பார்க்க வேண்டும். வேதாகமத்தில் 'அத்தேனே' பட்டணம் என்பது இன்றைய 'ஏதென்ஸ்' (Athens) நகரமாகும்.
சில வருஷங்களுக்கு முன்பாக ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் நடந்த அதே ஏதென்ஸ் நகர் தான்.
அந்நாட்களில் நூற்றுகணக்கான தேவர்களின் சிலைகள் அங்கிருந்தது. இப்படி பல, அநேக தெய்வங்களை வணங்கி வந்த அவர்களுக்கு, இன்னொரு கடவுளை, அவர்கள் வணங்கின தெய்வங்களை விடவும் பெரிய கடவுள் என்பதை போல, அதன் பெயரைக் கூட அறிவிக்காமல் அறிவித்து, அந்த கடவுளுக்கென்று ஒரு பலி பீடத்தையும் வைக்க காரணம் என்னவாக இருக்க முடியும்? அப்படியாக அறிவித்த அந்த மனிதன் யார்? அந்த மனிதனுக்கு நிச்சயம் மெய்யான கடவுளை அறிந்திருக்க, அவரை ஏற்றுக் கொண்டிருக்க வாய்ப்பு இருந்திருக்க வேண்டுமல்லவா? சரி இவனுக்கும் பவுலுக்கும் என்ன தொடர்பு இருந்திருக்க முடியும்?
அந்நாட்களில் நூற்றுகணக்கான தேவர்களின் சிலைகள் அங்கிருந்தது. இப்படி பல, அநேக தெய்வங்களை வணங்கி வந்த அவர்களுக்கு, இன்னொரு கடவுளை, அவர்கள் வணங்கின தெய்வங்களை விடவும் பெரிய கடவுள் என்பதை போல, அதன் பெயரைக் கூட அறிவிக்காமல் அறிவித்து, அந்த கடவுளுக்கென்று ஒரு பலி பீடத்தையும் வைக்க காரணம் என்னவாக இருக்க முடியும்? அப்படியாக அறிவித்த அந்த மனிதன் யார்? அந்த மனிதனுக்கு நிச்சயம் மெய்யான கடவுளை அறிந்திருக்க, அவரை ஏற்றுக் கொண்டிருக்க வாய்ப்பு இருந்திருக்க வேண்டுமல்லவா? சரி இவனுக்கும் பவுலுக்கும் என்ன தொடர்பு இருந்திருக்க முடியும்?
இந்த கேள்விகளுக்கு பதில்களை பார்க்கும் முன்பாக நாம் 'அறியப்படாத தேவன்' (THE UNKNOWN GOD) வந்த சரித்திர சம்பவத்தைப் பார்க்கலாம்.
கி.மு.6ம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நகர மன்ற உறுப்பினர்கள் புகழ் பெற்ற மார்ஸ் மலை (Mars Hill) முகப்பில் கூடி இருந்தனர். அனைவரின் முகங்களிலும், கவலை, வேதனை, குழப்பம். பதில் தெரியாமல் பல பெரிய கேள்விகள் அவர்களை வாட்டிக் கொண்டிருந்தது. நகரம் முழுக்க வதைத்துக் கொண்டிருந்த இந்த வாதை எதற்காக? ஏன் இப்படி ஆக்கினை,சாபம் மக்கள் மேல் வந்தது? இதற்கும் நூற்றுக்கணக்கான தேவர்களை தொழுது, பலியிட்டு வந்தும் ஏன் இந்த சாபம்? இதற்கு எப்படித்தான் விடிவு?
இந்த முயற்சிகளில் தீவிரமாக இருந்த நகர் மன்ற உறுப்பினர் நிசியாஸ் வர எல்லோரும் அவரிடம் இருந்து வரப் போகிற சேதிக்காக காத்திருந்தார்கள்.
"குறி சொல்லுகிறவள் சொல்கிறாள், நாம் இன்னும் பலி செலுத்தியிராத, வணங்காத இன்னொரு கடவுள் உண்டாம்" என்றார் நிசியாஸ். பலருக்கும் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. "என்னது! இன்னுமொரு கடவுளா? அது யார்? அந்தக் கடவுளின் பெயர் என்னவாம்?" என்று முணுமுணுத்தார்கள்.
"அதை சொல்ல முடியாது, அந்த குறி சொல்லுகிறவளுக்கே அந்தக் கடவுளின் பெயர் தெரியவில்லை" என்றார்.
அனைவரும் மறுபடியும் திகைத்துப் போக, நகரப் பகுதிகளில் வாதையில் அவதிப்படுகிறவர்களின் ஓலம் மெலிதாக கேட்டுக் கொண்டிருந்தது. நிசியாஸ் தொடர்ந்துப் பேசினார்.
"நாம் ஒன்று செய்யலாம். இப்போதே கிரேத்தா தீவுக்கு (Crete Island) ஒரு கப்பலை அனுப்ப வேண்டும். அங்கே எப்பிமெனிடிஸ் (Epimenides) என்பவரை உடனடியாக இங்கு கூட்டி வரலாம். அந்த தீர்க்கதரிசிக்கு இந்தப் பெயர் தெரியாத புது கடவுளை எப்படி சமாதானப்படுத்துவதென்பது தெரியுமாம். இதையும் அந்த குறி சொல்லுகிறவள் தான் சொன்னாள் ".
பலருக்கு கோபமே வந்து விட்டது இதை கேட்டதும்.
"இதென்ன புதிதாக இப்படி? ஏதென்ஸ் நகரில் இல்லாத ஞானிகளா அங்கே இருக்கிறார்கள்? அதுவும் போய் ஒரு அந்நிய மனிதனிடமா உதவிக்கு நிற்பது?"
எழுந்த பல கேள்விகளும், நகர்ச் சூழலில் நிலவின வாதை உக்கிரத்தை யோசிக்காமல் பலவீனமாய் அடங்கிப் போக, நிசியாஸ் வார்த்தைப்படி எப்பிமெனிடிஸை அழைக்க தலைவர் உத்தரவிட கப்பல் கிளம்பிற்று.
வருகிற தீர்க்கத்தரிசியை வரவேற்க, நிசியாஸ் போயிருந்தார். எப்பிமெனிடிஸை அழைத்துக் கொண்டு நகருக்குள் நடந்து போன பொழுது, எங்கும் அழுகுரலும், வேதனையான முணங்கலுமே ஒழித்துக் கொண்டிருந்தன. வழியெங்கிலும் காணப்பட்ட சிலைகளை எப்பிமெனிடிஸ் வியப்புடன் பார்த்துக் கொண்டே வந்தார்.
வியப்புடன் "இத்தனை தெய்வங்களின் சிலைகளை இந்த அளவிற்கு நான் பார்த்ததே இல்லை. எத்தனை கடவுள்கள் உங்களுக்கு உண்டு நிசியாஸ்?"என்றார்.
"நூற்றுக்கணக்கில். சொல்லப் போனால், ஒரு வகையில் மனிதர்களை விடவும் அதிகமாய்" என்று சிரித்தார் நிசியாஸ். "என்றாலும் என்ன? இத்தனை போதாதென்று குறி சொல்லுகிறவள் இன்னொரு கடவுளை நாங்கள் அறியவில்லையாம். அதனோடு ஒப்புறவு ஆக வேண்டுமாம். அதற்குத்தான் எப்பிமெனிடிஸ் அவர்களே உங்களை நாங்கள் அழைத்து வந்ததும். ஆனால் எனக்குத் தெரிந்து உலகத்தில் உள்ள எல்லாக் கடவுளர்களும் இங்கே ஏதென்ஸ் நகரில் தான் உண்டு என்று நினைக்கிறேன். இத்தனை இருந்தும் என்ன செய்வதென்று தெரியவில்லை."
"அது உங்கள் தலைவலி. நிசியாஸ் என்ன செய்ய?"
ஏதென்ஸ் நகர மன்ற உறுப்பினர்கள் ஆவலுடன் அவர்களுக்காக காத்திருந்தனர்.
"எப்பிமெனிடிஸ் அவர்களே உங்கள் உதவியை எதிர்பார்த்திருக்கிறோம். உங்கள் உதவிக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்". என்றார் நகர் மன்றத் தலைவர்.
"ஏதென்ஸ் நகரத் தலைவர்களே, எனக்கு நீங்கள் நன்றி கூற அவசியமில்லை. நாளை அதிகாலை ஒரு ஆட்டு மந்தையையும், கட்டிடம் கட்டுகிற ஆட்களையும், கற்களையும் மற்றும் தேவையான பொருட்களையும் இந்த மலைப் பகுதிக்கே கொண்டு வாருங்கள். ஆடுகள் நல்ல ஆரோக்கியமானதாகவும், பல நிறங்களில் இருக்க வேண்டும். நான் விடியற் காலையில் இங்கு வருவேன், அதுவரை நான் ஒய்வு எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்." என்றார்.
நகர் மன்ற உறுப்பினர்களுக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. தலைவர் மட்டும் எப்பிமெனிடிஸ் சொன்னபடி தவறாது செய்து விடுங்கள் என்றார்.
மறுநாள் அதிகாலை. சொன்னபடி எல்லாம் வந்தாயிற்று. கருப்பும் வெள்ளையுமாய் ஆட்டு மந்தை, கட்டிடம் கட்டுகிற ஆட்கள், கற்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நடக்கப் போகிறவைகளை பார்க்கவென்று நூற்றுக்கணக்கில் ஆட்கள் அந்த மலைப் பகுதியில் ஆங்காங்கே நின்றிருந்தார்கள், மிகுந்த ஆர்வத்துடன்.
அமைதியாக வந்து நின்றார் எப்பிமெனிடிஸ்.
"கற்று அறிந்த பெரியோர்களே இங்கே நகரில் நிலவுகிற வாதையை தடுக்க, ஏற்கனவே இங்குள்ள நூற்றுக்கணக்கான தேவர்களுக்குப் பலி செலுத்தி வந்தும், அவைகளினால் எந்தப் பயனும் இல்லை என்பதை இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
என்றாலும் நான் இப்போது மூன்று கருத்துக்களின் அடிப்படையில் நானும் பலி செலுத்தப் போகிறேன்.
முதலாவது இங்கே உள்ள எந்த ஒரு சிலையாலும் அடையாளப்படுத்த முடியாத, இதுவரை நீங்கள் அறிந்தே இராத ஒரு மகா கடவுள் உண்டென்றும், அந்த கடவுள் இந்த வாதை பற்றி அறிந்திருக்கிறார் என்றும்,
இரண்டாவதாக, இந்தக் கடவுள் இந்த வாதையைப் போக்குகிற அளவிற்கு மகா பெரியவர் என்றும், ஆனால் அது, அதற்காக அவரை நோக்கி நாம் விண்ணப்பம் செய்யும் போது மட்டுமே சாத்தியமாகுமென்றும் ......"
அவசரமாக குறுக்கிட்டார் ஒருவர்.
"பெயரே தெரியாத கடவுளிடம் என்னவென்று சொல்லி கேட்க முடியுமாம் சொல்லுங்கள்."
"பொறுங்கள். மூன்றாவதாக, அந்தக் கடவுள் அத்தனை பெரியவராக இருக்கும் பொழுது, நல்லவராகவும் இருப்பார், இந்த வாதையை போக்குகிற அளவிற்கு மட்டுமல்ல இதுவரை அவரை அறியாதிருந்த நம் அறியாமையை புன்னகையுடன் மன்னித்து... ஆம் நம் அறியாமையை அறிக்கையிட்டு அவரிடம் இப்படியாக விண்ணப்பிக்கும் பொழுது, இந்த வாதையை எடுத்துப் போடுகிறவராக இருக்கிறார் என்றும் நான் நம்புகிறேன்."
பலருக்கும் அவர் பேசினது எதுவும் புரியவில்லை. காலைப் பசியில் ஆடுகள் கத்திக் கொண்டிருக்க, அநேகருக்கு கருப்பும், வெள்ளையுமாய் இத்தனை ஆடுகள் எதற்கென்றும் புரியவில்லை.
"சற்றுக் கவனியுங்கள்" என்று மீண்டும் ஆரம்பித்தார் எப்பிமெனிடிஸ். "இதோ இந்த ஆடுகளை இந்தப் புல் சரிவில் அவிழ்த்து விடப் போகிறோம். எந்த ஆட்டையும் யாரும் கட்டுப்படுத்த வேண்டாம். ஆனால் ஒவ்வொரு ஆட்டின் பின்பாகவும் ஒருவர் சென்று அதை கவனிக்க வேண்டும்."
பின் அவர் வானத்தை ஏறிட்டுப் பார்த்து, மிகுந்த நம்பிக்கை தொனிக்கிற குரலில்...
"இதுவரை இங்கு அறியப்படாதிருக்கிற கடவுளே இந்த நகரத்தை வாட்டிக் கொண்டிருக்கிற வாதைக்காக உம்மை நோக்கி கெஞ்சுகிறேன். மெய்யாகவே இம்மக்கள் மீது மனது இரங்கி, மன்னித்து உதவி செய்வீர் எனில் இதோ இந்த ஆட்டு மந்தையை கண்ணோக்கிப் பாரும், உம்முடைய சித்தத்தை இப்படியாக எங்களுக்கு காண்பிக்க வேண்டுமாய் உம்மை நோக்கி வேண்டுகிறேன். இங்கு மேயப் போகிற ஆடுகளில் உமக்குப் பிரியமானவைகளை, அவைகள் மேயாமல் அப்படியே, அந்தந்த இடங்களிலேயே அமரப் பண்ணும். வெள்ளையானாலும் சரி, கருப்பானாலும் சரி. அவைகளை உமக்கென்று, உமது நாமத்தை அறிந்திராத எங்கள் அறியாமைக்காக உமக்கு பலியாகத் தருவோம்" என்றார்.
பின் தலையை தாழ்த்தி, கீழே சிலை போல் அமர்ந்து கொண்டு, ஆடுகளை விடுவிக்கலாம் என்பது போல கையசைத்தார். ஆடுகள் வேக வேகமாக புல் சரிவுகளுக்கு ஓடின.
"இதென்ன முட்டாள்த்தனம். அதிகாலை வேளை, பசியான வேளை, எத்தனையான பசுமையான புல் சரிவு. வயிற்றை நிரப்புவதை விட்டு விட்டு, ஆடுகளாவது....அமரப் போவதாவது? வயிறு நிறையாமல் அவைகளை அமர்ந்து உட்கார சாத்தியமே இல்லை." என்றார் ஒருவர்.
"அப்படியானால் எப்பிமெனிடிஸ் ஒரு நோக்கத்திற்காக தான் இந்த நேரத்தை தேர்ந்தெடுத்தார் போலிருக்கிறது. அப்பொழுது தான் அந்த கடவுளின் சித்தத்தை செய்கிறதை நாம் புரிந்து கொள்ள முடியும்" என்றார் நிசியாஸ்.
ஆனால் பார்க்கப் பார்க்க, ஆங்காங்கே ஒவ்வொரு ஆடுகள் மேய்வதை விட்டு விட்டு கால், மடக்கி அமர ஆரம்பித்தன.
"ஆகா, ஒன்றிரண்டு மட்டும் இப்படி உட்கார்ந்திருந்தால் ஒரு சமயம் அதற்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் இப்போது..... இத்தனை ஆடுகள்...? ஒரே ஒரு பதில்தான் உண்டு இதற்கு" கண்களில் பயம் தெரிய சொன்னார் இன்னொருவர்.
எப்பிமெனிடிஸிடம் வந்தார் நகர் மன்றத் தலைவர்.
"இப்போது என்ன செய்வது எப்பிமெனிடிஸ் அவர்களே?"
"உட்கார்ந்திருக்கிற ஆடுகளை, மற்ற ஆடுகளிடமிருந்து பிரித்து விடுங்கள். ஒவ்வொரு ஆடும் உட்கார்ந்த இடத்தை அடையாளமிட்டு, அந்தந்த இடங்களில் சிறிய பலிபீடங்களைக் கட்டச் சொல்லுங்கள்."
எல்லோரும் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கட்டிடம் கட்டுகிறவர்கள் பலிபீடங்களை அமைக்க, கட்டத் துவங்கினார்கள். பின் தலைவர்..
"எப்பிமெனிடிஸ் அவர்களே, இந்த பலி பீடங்களில் என்ன பெயர் எழுதப்பட வேண்டும்"என்றார்.
நாம் அவரின் நாமத்தை அறியாதிருக்கிறோம் என்று ஒப்பு கொண்டு விட்டோம். இப்போது நாமாக எந்த பெயரையும் எழுத வேண்டாம். அது அவருக்கு பிடிக்காமல் போகக்கூடும்." என்று தயங்கினார் எப்பிமெனிடிஸ்.
"அப்படியல்ல எப்பிமெனிடிஸ் அவர்களே, நாம் எதுவும் எழுதாமல் பலியிடக் கூடாது. அது சரியில்லாமல் போய் விடும்." என்று தலைவர் மீண்டும் சொல்ல, சற்று யோசித்து விட்டு எப்பிமெனிடிஸ் "ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதும் சரி. எனில் 'அறியப்படாத தேவனுக்கு' என்று மட்டும் இருபுறமும் எழுதுங்கள். அதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்"என்றார்.
அதன்படியே அவர்கள் செய்து, அமர்ந்த ஆடுகள் அந்த பலி பீடங்களில் பலியிடப்பட்டன. மறுநாள் வாதையின் பிடியிலிருந்து நகரம் விடுபட ஆரம்பித்தது. மெல்ல மெல்ல வாதை ஒழிந்து போக எப்பிமெனிடிஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்தன. அக மகிழ்ந்து போன ஏதென்ஸ் நகர மக்கள், தங்கள் நன்றியை காட்டுகிற விதமாக எப்பிமெனிடிஸின் சிலையையும் செய்ய வைத்து நகரத்தில் வைத்தார்களாம்.
ஆனால் காலம் மாற, வருஷங்கள் உருண்டோடிப் போக ஏதென்ஸ் நகர் மக்கள், எப்பிமெனிடிஸ் அறிவித்த 'அறியப்படாத தேவனைப்' பற்றி, அவரின் இரக்கம் வாதையிலிருந்து மக்களை விடுவித்ததுப் பற்றி மெல்ல மெல்ல மறந்து போனார்கள். அங்கே மார்ஸ் மலையில் கட்டப்பட்டிருந்த பல 'அறியப்படாத தேவனுக்கு' என்றிருந்த பலிபீடங்கள் கவனிப்பாரின்றி சிதைந்து போயின, புதர் மண்டியும் போயின, சில பலி பீடங்களின் கற்கள் கூட காணாமல் போயிருந்தன.
ஒரு நாள் வயதான நகர மன்ற உறுப்பினர்கள் இரண்டு பேர் அப்பகுதிக்கு வந்தவர்கள், அப்படியானதொரு 'அறியப்படாத தேவனுக்கு' பலிபீடத்தைக் கண்டார்கள். ஒருவர் அதன் அருகில் வந்து பெருமூச்சு விட்டப்படி உடன் வந்த்தவரிடம் "நண்பரே இது நினைவிருக்கிறதா?" என்றார். மற்றவரும் பெருமூச்சுடன், "ஆகா... மறக்கக்கூடிய விஷயமா அது? அந்த சமயம் நான் தான் மிகவும் இளைய நகர் மன்ற உறுப்பினர். நடந்த்தவைகள் அப்படியே மனதில் இருக்கிறதே...."என்றார்.
"எனக்கு ஒன்று தோன்றுகிறது. எப்பிமெனிடிஸ்ன் இந்த 'அறியப்படாத தேவன்' தன்னை வெளிப்படையாக அன்று அறிவித்து விட்டிருந்தால், ஒரு சமயம் இந்த மற்ற தேவர்களை எல்லாம் நாம் தூக்கி எறிந்திருக்கலாம் இல்லையா நண்பரே".
"அதற்கு ஒரு வழி இருக்கிறது நண்பரே. நாம் குறைந்த பட்சம் இங்கிருக்கிற ஒரு பலி பீடத்தையாவது பாதுகாக்க வழி செய்வோம். அப்பொழுது எப்பிமெனிடிஸைப் பற்றின சகலமும் நம் பல தலைமுறைகளுக்கும் போய்ச் சேரும். இதற்கு ஆகிற செலவை நகர மன்றமே பார்த்துக் கொள்ள நம் ஏற்பாடு செய்ய வேண்டும்"
இதுதான் சரித்திர பக்கங்களில் உள்ள கதை. நடந்த கதை. இந்த குறிப்புகள் புகழ் பெற்ற கிரேக்க எழுத்தாளரான DIOGENENS LAERTIUS எழுத்துக்களிலும் காணப்படுகிறது.
யார் இந்த எப்பிமெனிடிஸ் தீர்க்கத்தரிசி?
தத்துவஞானி பிளாட்டோ (PLATO) இவர் பற்றி தன்னுடைய புத்தகமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். எப்பிமெனிடிஸ் ஏதென்ஸ் பற்றி ஒரு தீர்க்கத்தரிசனம் சொன்னாராம். பத்து வருடம் கழித்து நடக்கப்போகிற ஒரு காரியத்தை பற்றி... அந்த தீர்க்கதரிசனம் அப்படியே நிறைவேற, வியந்து போன மக்கள் தங்கக் காசுகளை பரிசாக தர, அதை ஏற்க மறுத்த அவர் தங்கள் பகுதி மக்களுடன், ஏதென்ஸ் நகர மக்கள் ஒரு நட்பு ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ள அப்படியே நடந்ததாம்.
சரி, பவுலுக்கும், எப்பிமெனிடிஸ்க்கும் என்ன தொடர்பு இருந்திருக்க முடியுமென்று பார்க்கலாம். பவுலுக்கும் இந்த 'அறியப்படாத தேவனுக்கு' பற்றின சரித்திரப் பின்னணி தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா எனில், உண்டு என்றே பல ஆதாரங்கள் உண்டு. இந்த எப்பிமெனிடிஸ் ஒரு கவிஞனும் கூட. பவுல் இந்த எப்பிமெனிடிஸ்ன் பல கவிதை வரிகளை தம்முடைய எழுத்துக்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.
உதாரணத்திற்கு சொல்வதென்றால், தீத்துவுக்கு எழுதின நிருபத்தில் 1: 12 வசனப் பகுதியில் வருகிற
"கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்கதரிசியானவனே சொல்லிருகிறான்."
"...அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசி" என்பது இந்த எப்பிமெனிடிஸ் தான்.
எப்பிமெனிடிஸ் சொன்னது:
hypothetical Greek text:
Τύμβον ἐτεκτήναντο σέθεν, κύδιστε μέγιστε,
Κρῆτες, ἀεὶ ψευδεῖς, κακὰ θηρία, γαστέρες ἀργαί.
Ἀλλὰ σὺ γ᾽ οὐ θνῇσκεις, ἕστηκας γὰρ ζοὸς αίεί,
Ἐν γὰρ σοὶ ζῶμεν καὶ κινύμεθ᾽ ἠδὲ καὶ ἐσμέν.
Translation:
They fashioned a tomb for you, holy and high one,
Cretans, always liars, evil beasts, idle bellies.
But you are not dead: you live and abide forever,
For in you we live and move and have our being.
Cretans, always liars, evil beasts, idle bellies.
But you are not dead: you live and abide forever,
For in you we live and move and have our being.
மட்டுமல்ல, தீர்க்கதரிசி என்று எப்பிமெனிடிசை குறிக்க அவர் பயன்படுத்தும் மூலவார்த்தை, பவுல் பொதுவாக பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுகளில் வரும் தீர்க்கதரிசிகளைக் குறிப்பிடும் பொழுது பயன்படுத்துகிற அதே வார்த்தைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Nabi - נָבִיא
profí̱ti̱s - προφήτης
இது பவுல் எப்பிமெனிடிஸின் மேல் வைத்திருந்த பெருமதிப்பைக் காட்டுகிறது என்றால் அது மிகையல்ல. மிகவும் பலவித வேத காரியங்களை புகழ் பெற்ற கமாலியேலின் (Gamaliel) பள்ளியில் கற்றுக்கொண்ட பவுல் எப்பிமெனிடிஸின் பேரில் கொண்டுள்ள மதிப்பு அவரின் இலக்கிய காரியங்களைத் தாண்டி, அவரின் விசுவாசம் பற்றின காரியங்களை அறிந்ததால் கூட இருக்கலாம்.
(இதை இந்த இடத்தில் எதற்கு குறிப்பிட வேண்டுமெனில் எப்பிமெனிடிஸ் பற்றி வலைத்தளத்தில் பார்க்கிற பலர், கிடைக்கிற தகவல்களில் குழம்பிவிடக்கூடும். எனவே, இந்த தகவல்களை விட, பவுலின் தகவல்களை நம்பகமாக ஏற்றுக்கொள்வது நல்லது.)
அதிலும் மற்ற கிரேத்தா தீவுக்காரர்களை பவுல் சாடும் பொழுது இந்த வித்தியாசம் இன்னும் பலவற்றை உணர்த்துகிறது. மட்டுமல்ல, அப்போஸ்தலர் 17: 26, 27ல் வருகிற பவுலின் வார்த்தைகள்...
"மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுப்பிடிக்கதக்கதாகத் தம்மை தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே."
மறைமுகமாக எப்பிமெனிடிஸ் போன்றவர்களை குறிப்பிடுகிற பகுதியாக இருக்கிறது. இதை அச்சமயம் மார்ஸ் மேடையில் கேட்டுக்கொண்டிருந்த பலருமே புரிந்துகொண்டிருக்கக் கூடும். அதாவது எப்படியாக ஒரு புறஜாதி மனிதனும், தேவனைத் தேடி கண்டறிந்து கொள்ள முடியும் என்பதை உணர்த்துகிறது. ஒரு சமயம் அவர் மெய்யான கடவுளின் நாமத்தை அறியாதிருந்தாலும், முழு இருதயத்தோடு தேடும்பொழுது கண்டறியாமல் போகவில்லை அல்லவா.
இப்படித் தெளிவாக எப்பிமெனிடிஸ் பற்றி அறிந்திருந்ததால் தான் பவுல், மார்ஸ் மேடையில் ஆணித்தரமாக, எவ்வித தயக்கமும் இன்றி, அந்த 'அறியப்படாத தேவனையே' உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றார். அதனால் தான் எப்பிமெனிடிஸ் பற்றி பாரம்பரியமாய் அறிந்து வைத்திருந்த ஏதென்ஸ் நகரின் பல ஞானிகளும், பவுல் சொன்னதைக் கேட்டு பிரமித்து, அவர்களில் பலரும் இதில் மேலும் மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.
ஆக முடிவாக சொல்வதென்றால், எப்படி மெல்கிசேதேக்கிற்கு தன்னை வெளிப்படுத்தின தேவன், இந்த எப்பிமெனிடிஸ்க்கும் வெளிப்படுத்தி இருக்ககூடும் என்பது புரிகிறதல்லவா!
அடுத்த பகுதியில், தென் அமெரிக்க பகுதியில் இன்னொரு கூட்ட மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளைப் பார்க்கலாம்.
'அறியப்படாத தேவனையே, நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்...'என்று பேசினபொழுது, ஏதோ புதிய கடவுளை அவர் அறிவிப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. பவுலின் வார்த்தைப்படி, அவர் ஆராதிக்கிற தேவன், எப்பிமெனிடிஸின் பலிபீடத்தில் குறிக்கப்பட்டிருந்த 'அறியப்படாத தேவன்' தான் என்று அறிவித்து, அந்த தேவன் முன்பாகவே ஏதென்ஸ் நகர மக்கள் வாழ்வில் குறுக்கிட்ட தேவன் என்றெல்லாம் விளங்கச் செய்தபொழுது, பலர் ஏற்றுக்கொள்கிறார்கள். இதை அப்போஸ்தலர் 17: 34ல் நாம் பார்க்கிறோம்.
ஆக முடிவாக சொல்வதென்றால், எப்படி மெல்கிசேதேக்கிற்கு தன்னை வெளிப்படுத்தின தேவன், இந்த எப்பிமெனிடிஸ்க்கும் வெளிப்படுத்தி இருக்ககூடும் என்பது புரிகிறதல்லவா!
அடுத்த பகுதியில், தென் அமெரிக்க பகுதியில் இன்னொரு கூட்ட மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளைப் பார்க்கலாம்.
-எட்வினா ஜோனாஸ்
Bro seama ya erruku . God bless u more
ReplyDelete