Monday, March 28, 2016

தெரிந்த காரியங்களின் தெரியாத விவரங்கள்...



ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். பலரும் தபசு நாட்களில், அதற்கென்று பாரம்பரியமாய் வருகிற அனுசரிப்புகளை பக்தி சிரத்தையுடனோ, பழகிப் போனதாலோ அனுசரிக்கிறார்கள், இருக்கட்டும். அதைப் பற்றி நமக்கொன்றுமில்லை. நம்முடைய ஆதங்கம் என்னவெனில், இதோகூட, இந்த நாட்களுக்கென்றே உள்ள வேத வசனங்களை தீவிரமாய் தியானிக்கவும், ஆராயவும் முற்படுவது எத்தனை பயனுள்ளதாய் இருக்குமே என்றுதான்.

ஏனெனில் நாம் அறிந்திருக்கிற அல்லது அப்படி எண்ணிக் கொண்டிருக்கிற அனேக காரியங்களின் உட்பொதிந்துள்ள உண்மையான விவரங்கள் ஏராளம் உண்டு. அவைகளை நாம் கண்டுக்கொள்வதில்லை, அல்லது அதற்கெல்லாம் நேரமில்லை என்று இருந்து விடுகிறோம். ஆனால், நாம் தெளிவாக அறிந்து கொள்வது நம் விசுவாசத்தில் பெலப்பட ஏதுவாக இருக்குமென்று நம்பலாம்.

ஒருமுறை, புனித வெள்ளி, உயிர்த்தெழுந்த ஞாயிறு பண்டிகைக் கால சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், "இயேசு கிறிஸ்துவை கொலை செய்தது யார்?" என்ற விவாதிக்கப் பட்ட பொழுது, அதில் சொல்லப்பட்ட பல தகவல்கள் நம்மில் பலருக்கு ஆச்சர்யமான வியப்பைத் தந்தன. சிலுவைக்கு முன்பாக சித்தரிக்கப் படுகிற அனேக பகுதிகளை நாம் படித்திருப்பது மேலோட்டமாகவே என்பதை அப்பொழுது புரிந்து  முடிந்தது!!.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தொடர்பாக நடைபெற்ற சதித் திட்டத்தில் பரிசேயர்களே பிரதானம் என்ற பலருக்கும், அவர்களோடு கூட சதுசேயர்களுமே உண்டு என்று சொன்ன சிலருக்கும், எரோதியர்களின் பங்கும் இருந்தது என்பது தெரிந்திருக்கவில்லை. முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளை கொண்டிருந்த அவர்கள் இயேசு கிறிஸ்துவை  சிலுவையில் அடிக்க முயற்சிக்கிற காரியத்தில் எப்படி கூட்டணியாகச் செயல்பட்டார்கள் என்பது வியப்பூட்டுகிற காரியம். இதன் பின்புலத்தில் காணப்படுகிற சரித்திரப் பின்னணியும் வெகு சுவாரஸ்யமான காரியங்களை நாம் அநேகமாக கவனிக்காமலே விட்டு விடுவதை உணர்த்தக்கூடும்.

இது ஒரு பக்கமிருக்கட்டும், சிலுவை நாடகத்தின் காட்சிகளிலும் பல சித்தரிப்புகளை நாம் தவறாகப் புரிந்திருப்பதை இப்போது பார்க்கலாம்.

ஆண்டவரின் பாடுகளின் காட்சிகளில் அனைவரும் அறிந்திருக்கிற ஒன்று, பேதுரு ஆண்டவரை மறுதலித்த பொழுது சேவல் கூவுவது தான். ஆலயங்களில் நடத்துகிற நாடகங்களில் கூட, இக்காட்சியின் போது சேவல் கூவுகிற மாதிரி யாரையாவது கத்த வைப்பது தவறாது நடக்கும். ஏனெனில், அந்த அளவிற்கு இது நமக்கு பழகி விட்டது.

நல்லது. சேவல் கூவுவது என்பது உண்மையில் என்ன?

சுவிஷேசங்களில் மத்தேயு 26ம் அதிகாரத்திலும் 

இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். - மத்தேயு 26;34

அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று.

அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துகொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.  மத்தேயு 26;74,75

மாற்கு 14ம் அதிகாரத்திலும் 

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்கு முன்னே, நீ மூன்று தரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். - மாற்கு 14; 30

உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதான். - மாற்கு 14;72

சேவல் கூவுகிற காரியம்  பற்றி குறிப்பிடப்படுகிறது.   ஆனால், பலர் நினைத்திருப்பதைப் போல இது சேவலின் கொக்கரக்கோ கூவல்தானா என்றால் அது கேள்விக்குறிதான்?

காரணம் சம்பவம் நடப்பது பிரதான ஆசாரியனின் அரண்மனையில். இது எருசலேம் நகரின் நடுவில் உள்ளது என்பதால் அருகில் கோழிப் பண்ணை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால், எருசலேம் என்பது புனித நகரமாக கருதப்படுவதால் யூத சட்டப்படி கோழி, சேவல்களை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில், இவைகள் செய்கிற அசுத்தங்கள், புனித காரியங்களை அசுத்தப்படுத்தும் அல்லது தீட்டுப்படுத்தக்கூடும்.

எருசலேமிலே ஒவ்வொரு ஜாமம் முடிகிற வேளையிலும், அதைக் குறிக்கும் வகையில், ஒரு சங்கு ஒலிக்கும். அதாவது யூதர்களின் நாள் மாலை 6 மணியிலிருந்து ஆரம்பிக்கிறது. மூன்று மணி நேரம் ஒரு ஜாமம் என்பதால் 9 மணிக்கு, இரவு 12 மணிக்கு, பின் 3 மணிக்கு என்று வைத்துக் கொண்டால் இந்த மணி ஆரம்பமாவதைக் குறிக்க சங்கு ஒலிக்கும்.  அது மட்டுமல்ல ஒவ்வொரு ஜாமம் முடியும்போதும் அந்தப் பகுதியில் உள்ள அண்டோனியா கோபுரத்தில், ரோமக் காவலர்கள் மாறுவர். அதைக் குறிக்க ட்ரம்ப்பட் ஒலிக்கும். இந்த ட்ரம்ப்பட் அழைப்பை லத்தீன் மொழியில் கால்சினியம் (gallicinium "cock-crow") என்று அழைப்பார்கள். இதன் அர்த்தம் சேவல் கூவுவது என்பதாகும்.

மட்டுமல்ல, நாம் வசனத்தை இன்னும் சற்றே கவனமாகப் பார்ப்போமெனில், மத்தேயு 26;34லும் மாற்கு 14;30லும் இந்த ராத்திரியில் சேவல் கூவுவதற்கு முன்னே மூன்று தரம் மறுதலிப்பாய் என்கிறார் ஆண்டவர்.   அதுவும் மாற்கு சுவிசேஷத்தின் படி இரண்டு தரம் சேவல் கூவும் முன்பு மூன்று தரம் மறுதலிப்பாய் என்றிருக்கிறது. 

சேவல் பொதுவாக விடியற்காலையிலேயே கூவும் என்பதை அறிவோம். ராத்திரியில் அல்ல. அதுவும் இரண்டு தரம் கூவும் முன்பு மூன்று தரம் மறுதலிப்பாய் என்பது, நாம் நினைக்கிறபடி சேவல் கூவுவது இல்லை என்று புரிய வரும். இதை  நாம் எப்படி விளங்கிக் கொள்ளலாமெனில், இரண்டு ட்ரம்ப்பட் அழைப்புகளுக்கிடையில் உள்ள 3 மணி நேர இடைவெளிக்குள் என்னை மூன்று தரம் மறுதலித்து விடுவாய் என்பது தான். இதன் விளக்கம் 'மறுதலிப்பு' சம்பவங்களின் நிகழ்வோடு ஒத்துப் போகிறது.

பலர் தவறாகப் புரிந்துக் கொள்கிற இன்னொரு இடமும் உண்டு. யோவான் 20ம்  அதிகாரத்தில், உயிர்தெழுந்த ஆண்டவரைப் பார்க்க வந்த மரியாள், அவர்தாம் இயேசு என்று கண்டு கொண்டவுடன் 17ம் வசனத்தில் இயேசு அவளிடம் 'என்னை தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்தில் ஏறிப் போகவில்லை' என்றவர், பின் 27ம் வசனத்தில், தன்னை சந்தேகித்த தோமா'விடம் 'நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு' என்கிறார். மத்தேயு 28;9ல் உயிர்தெழுந்த ஆண்டவர் 'இயேசுவின் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துக் கொண்டார்கள்' என்றிருக்கிறது.

மரியாளைத் தொடாதே என்றவர், தோமாவைத் தொடு என்று சொல்வது புரியாமல்  இருக்கிறதே, முரண்பாடாக இருக்கிறதே என்று குழம்புபவர்கள் உண்டு.  இதை கேட்கும் மக்களுக்கு வியாக்கியானம் செய்ய முற்படுகிறவர்களின் பல விளக்கங்கள் கேட்பவர்களின் தடுமாற்றத்தை அதிகரிப்பதே அல்லாமல் வேறில்லை.

வில்லியம் பார்க்ளே (William Barclay) என்கிற வேத பண்டிதரின் விளக்கம் இந்த இடத்திற்கு அருமையான பதில்களை வைக்கிறது எனலாம்.  இரண்டு அநேகமான காரணங்களைச் சொல்கிறார்.


1. ஒரு வகையில் இது மொழிப் பெயர்ப்புத் தவறாக இருக்கக்கூடும். இயேசு நிச்சயம் பேசும்பொழுது 'அராமிக்' மொழியையே பயன்படுத்தி இருந்திருப்பார்.
கிரேக்க மொழியில் அல்ல. ஒரு சமயம் அராமிய மொழியில் இவ்விதமாய் பொருள்படும்படி அவர் சொல்லி இருந்திருக்கக் கூடும்.

ܐܡܪ ܠܗ ܝܫܘܥ ܠܐ ܬܬܩܪܒܝܢ ܠܝ ܠܐ ܓܝܪ ܥܕܟܝܠ ܤܠܩܬ ܠܘܬ ܐܒܝ ܙܠܝ ܕܝܢ ܠܘܬ ܐܚܝ ܘܐܡܪܝ ܠܗܘܢ ܤܠܩ ܐܢܐ ܠܘܬ ܐܒܝ ܘܐܒܘܟܘܢ ܘܐܠܗܝ ܘܐܠܗܟܘܢ

'என்னைத்  தொட்டுக் கொண்டிருக்காதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு போகும் முன்பாக..., அதாவது இதை இப்படியாக விரிவுப் படுத்தலாம். 'இப்படி என்னையே தொழுதுக் கொண்டு நேரத்தை செலவழிக்கதே, இந்த நற்செய்தியை மற்ற சகோதரரிடத்தில் பகிர்ந்து கொள்...' ஏனெனில் கிரேக்க மொழியில் உள்ள இந்த கட்டளையிடுகிற வினைச் சொல் நிகழ் காலத்தியது. அதாவது, மரியாள் அவர் பாதத்தைப் பற்றிக் கொண்டிருக்க 'என்னைத் தொட்டுக் கொண்டிருக்காதே' என்கிறது.
(நம்முடைய மொழிப் பெயர்ப்பில் உள்ள 'தொடாதே' என்ற வார்த்தை எதிர்காலத்தியது என்பதை நினைவுக் கூர்வது நல்லது.)

2. இன்னொரு சாத்தியக்கூறும் உண்டு. மற்ற ஒத்திசைவு நற்செய்திகளில் எல்லாம், இயேசுவை / தூதர்களை எதிர் பாராமல் காண்கிறவர்களின் பயம் எப்போதும் வலியுறுத்திக் கூறப்படுகிறது. மத்தேயு 28;10ல் இயேசு சொல்கிறார், 'பயப்படாதேயுங்கள்' என்று. லூக்கா 24;5 லும், மாற்கு 16;8 லும்  தூதர்களைக் கண்ட ஸ்திரீகள் பயப்பட்டார்கள் என்றிருக்கிறது.

ஆனால்,  யோவானின்  நற்செய்தியில்  இப்படியான 'பயந்தார்கள்' காரியம் இல்லை என்றாலும், பிரதிகளை தொடர்ந்து பிரதி எடுத்துக் கொண்டிருக்கிற சில வேத பாரகர்கள் சற்றே தவறி இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்று சில பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

அதாவது யோவான் முன்பாக அதை எழுதும்பொழுது, அதாவது மூல மொழியில் பார்ப்போமெனில் 'என்னைத் தொடாதே' என்று அர்த்தம் தருகிற ME HAPTOU  வை அல்ல. மாறாக, 'பயப்படாதே' என்று அர்த்தம் தருகிற ME PTOOU வையே தந்திருக்கக் கூடும் என்கிறார்கள்.

λέγει  αὐτῇ  Ἰησοῦς  Μή  μου  ἅπτου,  οὔπω  γὰρ  ἀναβέβηκα  πρὸς  τὸν  Πατέρα·  πορεύου  δὲ  πρὸς  τοὺς  ἀδελφούς  μου  καὶ  εἰπὲ  αὐτοῖς  Ἀναβαίνω  πρὸς  τὸν  Πατέρα  μου  καὶ  Πατέρα  ὑμῶν  καὶ  Θεόν  μου  καὶ  Θεὸν  ὑμῶν.                                                                                                                    Γιάννης 20 ;17

அதாவது, 'மரியாளே பயப்படாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குப் போக வில்லை...' என்று இருக்கக்கூடும் என்பது அவர்கள் கருத்து.
(PTOEIN  என்ற வினைச் சொல்லுக்கு பயத்தால் நடுங்குவது என்று அர்த்தமாகும்)

நாம் கண்ட இந்த இரண்டு காரியங்கள் மட்டுமல்ல. இதைப் போல விளங்கிக் கொள்ள, தெரிந்துக் கொள்ள வேதாகமத்தில் உள்ள சிலுவைக்  காட்சிப் பகுதிகளிலேயே இன்னும் பல இடங்கள் உண்டு. அவைகளைப் பற்றி அறிந்துக் கொள்வது நம் விசுவாசத்தில் பெலப்படப் பெரிதும் உதவியாக இருக்கும்.

-எட்வினா ஜோனாஸ்