Saturday, October 10, 2015

அறியாமலிருக்கும் அற்புதங்கள் - 4


நான்காம் அமென்ஹோடப் (Amenhotep IV) அல்லது அக்கநேட்டன் (Akhenaten) என்று அறியப்பட்டிருக்கிற எகிப்து தேசத்தின் ராஜாவாகிய பார்வோன் கி.மு.14ம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற ஒரு வித்தியாசமான ராஜா என்று சொல்லலாம். 
கொஞ்சம் குறைய 17 வருஷங்களே ஆட்சி செய்திருந்த இவர் எப்படி மற்ற, நீண்ட காலம் ஆட்சி செய்த எகிப்திய பார்வோன்களை விட, இப்போதும் பேசப்பட்டு வருகிறார் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

நம்மில் பலரும் ஒரு சமயம் அறிந்திருக்கிறபடி பல தெய்வ வணக்கங்களுக்குப் பெயர்போன எகிப்திய பார்வோன்கள் மத்தியில், இவர் மட்டுமே திடுமென 'ஒரே தெய்வக் கோட்பாட்டை' (First Monotheist) முதலாவது கொண்டு வந்து புரட்சி செய்தவர் என்று அனேக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

நம் முந்தைய வலை பதிவில் அறியாமலிருக்கும் அற்புதங்கள்-3ல் நாம் பார்த்த இன்கா அரசன் (பஷுகூட்டி - சரியான உச்சரிப்பு) பச்சா குட்டி எவ்வாறு 'இண்டி' யின் வணக்கத்தை கேள்வியாக்கி சகலத்தையும் படைத்த கடவுளை நோக்கித் திரும்பினார் என்பதற்கான பின்னணியை நாம் பார்த்தோம். அதே விதமாக இந்தப் பார்வோனின் மாற்றத்திற்கான பின்னணிக்குள் நாம் பயணிக்க முயற்சிக்கப் போகிறோம்.


ஆனால் அதற்கு முன்பாக இந்தப் பார்வோனைப் பற்றி வலைத் தளங்களிலும், மற்ற பல பதிவுகளிலும் தற்போது கூறப்பட்டு வருகிற ஒரு காரியத்தை மறுத்துவிட்டு, நம் பயணத்தை தொடரலாம்.
பெரும் புகழ்பெற்ற உளவியலாளர் சிக்மண்ட் ப்ராய்ட் (Sigmund Freud) இந்த பார்வோனைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவரின் புரட்சிகர மத சீர்திருத்தங்களைப் பற்றி (Religious views of Sigmund Freud) கூறும்பொழுது சொல்கிறார்,  'இந்த பார்வோனுக்கு அனேக வருஷங்களுக்கு பிறகு வந்த மோசே வெளியிட்ட ஒரே பரம தெய்வத்திற்கான "யாவே" (יהוה) கோட்பாட்டின் உந்துதலை அநேகமாக இந்த அக்கநேட்டனிடமிருந்து தான் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்' என்று. ப்ராய்ட் மட்டுமல்ல இன்னும் பல பெரிய அறிஞர்களின் யூகங்களும் இப்படியாகவே இருக்கின்றன. இவ்விதமாக பதிவுகளும், கூற்றுகளும் இருப்பதற்கு முக்கிய காரணமொன்று உண்டு. 

இஸ்ரவேல் மக்கள் மோசேயின் தலைமையில் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட வருஷம் கி.மு.1250, அதாவது கி.மு.13ம் நூற்றாண்டில் தான் என்று நினைத்துக் கொண்டிருப்பதுதான்.  (இதைப் பல கிறிஸ்தவ அறிஞர்களுமே ஆதரிக்கின்றனர் என்பது வேறு விஷயம்) நம்மின் இந்த எகிப்திய பார்வோனின் காலகட்டம் கி.மு.1350-1334 (சில ஆசிரியர்கள் கி.மு. 1381-1366) என்பதால் ஏறக்குறைய நூறு வருஷங்களுக்குப் பின்பாக வந்த அதாவது (கி.மு. 1250 களில்) மோசே, இந்த பார்வோனின் புரட்சிகரமான, அதுவரை எவருமே கூறியிராத ஒரே தெய்வ கோட்பாட்டை, தான் கூறின ஒரே தெய்வத்திற்கான இஸ்ரேலின் தெய்வமாகிய "யாவே" (יהוה)யின் கோட்பாட்டிற்கான அடிப்படையாகக் கொண்டிருந்தார் என்று சொல்வதும் இயல்புதான்.


ஆனால் உண்மை என்ன? மோசேயின் தலைமையில் இஸ்ரேல் ஜனங்கள் எந்த வருஷம் விடுதலை அடைந்தார்கள்? அதை, எதை வைத்து சரியாக கண்டுகொள்ள முடியும்? என்று கேள்விகள் எழும்பலாம்.


விடை வேதாகமத்தில் உள்ள குறிப்புகளிலிருந்தே நமக்குக் கிடைக்கிறது. 1இராஜாக்கள் 6: 1ல் 

'இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480ம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான 4ம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.' 
And it came to pass in the four hundred and eightieth year after the children of Israel were come out of the land of Egypt, in the fourth year of Solomon's reign over Israel, in the month Zif, which is the second month, that he began to build the house of the LORD.   1king 6;1 (kjv)
וַיְהִ֣י בִשְׁמֹונִ֣ים שָׁנָ֣ה וְאַרְבַּ֣ע מֵאֹ֣ות שָׁנָ֡ה לְצֵ֣את בְּנֵֽי־יִשְׂרָאֵ֣ל מֵאֶֽרֶץ־מִצְרַיִם֩ בַּשָּׁנָ֨ה הָרְבִיעִ֜ית בְּחֹ֣דֶשׁ זִ֗ו ה֚וּא הַחֹ֣דֶשׁ הַשֵּׁנִ֔י לִמְלֹ֥ךְ שְׁלֹמֹ֖ה עַל־יִשְׂרָאֵ֑ל וַיִּ֥בֶן הַבַּ֖יִת לַיהוָֽה׃
מלכים א 6:1
என்று வருகிறது.

சாலொமோன் ஆலயத்தைக் கட்டிய வருஷம் கி.மு.960 என்பது பதிவாகி உள்ள ஒரு விஷயம். இதை அனைவருமே ஏற்றுக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் இஸ்ரேல் ஜனங்கள் விடுதலையான வருஷம் கி.மு.960 + 480 = கி.மு.1440 என்றாகிறது. அதாவது கி.மு.1440 வருடத்தைக் கொண்டிருக்கிற கி.மு. 15ம் நூற்றாண்டு, அதாவது மோசே வாழ்ந்த காலம்.


இந்தக் கணக்கு எகிப்து தேசத்தின் சரித்திர வருஷங்களோடு ஒத்துப்போகிறது என்பது இன்னொரு சுவாரஸ்யம்.  விக்டர் பியர்ஸ் என்கிற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியும், இறையியலாலருமானவர் எழுதின 'Evidence for truth; Archaeology', என்ற புத்தகத்தில், Ungers list of Bibilical dates-ல் இப்படி ஒத்துப்போகிறவைகளை ஆபிரகாமின் காலத்திலிருந்து சாலமோன் காலம் வரை தந்திருக்கிறார். அதிலிருந்து ஒன்றிரண்டை மட்டும் இப்போது பார்க்கலாம்.


ஆதியாகமத்தில் யோசேப்பு எகிப்திற்குப் போய் அதன் பிரதம மந்திரியான பிறகு இஸ்ரேல் புத்திரர்களை அழைத்துக் கொண்டது நமக்குத் தெரியும். யாத்திரையாகமமுமே எகிப்துக்குப் போன இஸ்ரவேலர்களின் பெயர்களுடன் தான் துவங்குகிறது.  


யாத்திராகமம் 1;8 வது வசனத்தில், 'யோசேப்பை அறியாத புதிய ராஜா ஒருவன் எகிப்தில் தோன்றினான்' என்று வருகிறதல்லவா. இது கி.மு.1570ல் ஆட்சிக்கு வந்த 18வது அரச குலத்தை அல்லது ராஜ பரம்பரையைச் சேர்ந்த முதல் ராஜா அல்லது பார்வோனைக் குறிக்கிறது எனலாம்.  இந்த முதல் பார்வோனை காமோஸ் (அ) முதலாம் துட்மோஸ் (Komose or Thutmose I) என்று எகிப்திய சரித்திரம் அழைக்கிறது. இவருக்கு முன்பாக எகிப்தியரல்லாதவர்களே, அதாவது அந்நிய தேசத்தவர்களே பார்வோன்களாக ஆட்சி செய்து வந்து முடிவு பெற்று, முதல் தடவையாக எகிப்தியரான காமோஸ் பார்வோனாகிறார். ஆக மண்ணின் மைந்தரான இந்த முதலாம் துட்மோஸ்க்கு பலுகிப் பெருகி வரும் இஸ்ரேல் ஜனங்களின் மேல் எரிச்சலும், அவநம்பிக்கையும், பயமும் வந்தது இயல்பானதல்லவா. 

இதை யாத்திராகமம் முதலாவது அதிகாரத்தில் நாம் தெளிவாகப் பார்க்கிறோம். இந்த பார்வோனுக்கு ஒரு குமாரத்தி இருந்தாள். அவளின் பெயர் ஹேட்ஷீப்ஸ்ட் (Hatshepsut). இவளே யாத். 2வது அதிகாரத்தில் வருகிற பார்வோன் குமாரத்தி. இவள் மோசேயை நைல் நதியிலிருந்து எடுத்து, அவனை ஒரு ராஜகுமாரனாகவே வளர்க்கிறாள். இன்னும் சில விவரங்களை வைத்து கணக்கிட்டு மோசே பிறந்த வருஷம் கி.மு. 1520 ஆக இருக்கலாம் என்கிறார்கள். இந்த கணிப்பு பின் வரும் பல சரித்திர வருஷங்களின் விவரங்களோடு ஒத்துப்போகிறது. குறிப்பாக பார்வோன் குமாரத்தி மரித்தபிறகு பதவிக்கு வந்த 3ம் துட்மோஸின் ஆட்சி காலத்தில் 
1.மோசே 40 வயதளவில் ஒரு எகிப்தியனை கொலை செய்ததினிமித்தம் இந்த 3ம் துட்மோஸ்க்கு பயந்து மீதியனுக்கு ஓடிப் போனது,2.பின் 80 வயதளவில் திரும்பி வரும்பொழுது, (உன்னை கொல்ல தேடினவர்கள் இறந்து போனார்கள்) (யாத் 4: 19) என்று ஆண்டவர் சொல்லிய பிறகு ...
போன்ற  வசனங்களிலிருந்து பார்வோன் 3ம் துட்மோஸ் மரித்த வருடம் (1450), 2ம் அமென்ஹோடப் (Amenhotep II) ஆட்சிக்கு வந்த வருடம் (1450) போன்றவைகளை குறிப்பிடலாம். 

ஆக, நாம் பார்த்தவைகளை வைத்து சில உண்மைகளை இவ்வாறாகத் தொகுக்கலாம். 


மோசேயின் காலம் கி.மு. 1520 - 1400 (120 ஆண்டுகள்) இஸ்ரவேல் ஜனங்களின் விடுதலை கி.மு. 1440 எனில், நம் புரட்சிகர பார்வோன் அக்கநேட்டாவின் காலம் கி. மு. 1350 - 1334. எனவே 100 வருஷங்களுக்கு முன்பாக வாழ்ந்த மோசேயின், இஸ்ரவேல் ஜனங்களின், கர்த்தராகிய "யாவே" (יהוה)யின் கோட்பாடுகள், கருத்துகளின் பாதிப்புகள் இந்த பார்வோனின் 'ஒரே தெய்வ' வழிபாட்டிற்கு திரும்பினதின் உந்துதலாக இருக்க வேண்டுமே தவிர, இருந்திருக்க வாய்ப்பே தவிர அதற்கு எதிர்மறையாக அல்ல.


நல்லது. பல தெய்வ வணக்கங்களில் ஊறிப் போன பார்வோன்களிலிருந்து இவன் மட்டும் திசை மாறினது, எந்த காரணங்களால் இருக்க முடியும் என்று வியப்புடன் நினைக்கிறீர்களா? மறுபடியும் அந்த சரித்திர அகழ்வுகளுக்குள் போய் தேடிப் பார்க்கலாம்.


உலகப் புகழ் பெற்ற எகிப்தின் அதிசயங்களான பிரமிடுகளைப் போல புகழ் பெற்றது ஸ்பின்க்ஸ் சிலை (The Sphinx). சிங்க உடலும், பார்வோனின் தலையுமாய் உள்ள அந்த பிரமாண்ட சிலையைப் பற்றித் தெரியாதவர்களே இருக்காது என்பார்கள். அந்த சிலையின் பாதங்களுக்கருகே உள்ள மணல் பகுதியை சுத்தப்படுத்தும் பொழுது சிவப்பு கிரானைட் கல்லினால் ஆன கல்வெட்டு பதிந்திருப்பது தெரிய வந்தது. அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்களின் சாராம்சம் என்னவெனில் 'அரச பதவிக்கு வந்திருக்க வேண்டியவன் இல்லாமல் போனதால் அவனுக்கு இளையவன் ஆச்சரியமான விதத்தில் ஆட்சிக்கு வந்தான்' எனலாம்.

மேல் பார்வைக்கு இது வெகு சாதரணமான செய்தி போலிருந்தாலும், இதன் பின்பாக உள்ள சம்பவங்களை ஒரு அற்புத கோர்வைகளைப் போல அமைந்திருப்பது தான் வாழ்வின் வினோதம். மட்டுமல்ல, இந்த கல்வெட்டு, வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருகிற சம்பவத்திற்கு, இன்னொரு மறைமுகமான ஆதாரமென்பது ஆச்சரியம்தான்.


எப்படியென்று பார்க்கலாம். இஸ்ரேல் ஜனங்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக நடந்த வாதைகளைப் பற்றி நமக்குத் தெரியும். அதில் கடைசி வாதையான, 'தலைச்சன் பிள்ளைகளை' கர்த்தர் அடித்த வாதை தான் மிகக் கடுமையானது. தேவனுடைய கரத்தின் செயல்பாட்டை அப்போதைய பார்வோனை புரிந்து கொள்ள வைத்த ஒன்று. மற்ற வாதைகளுக்கெல்லாம் வியாக்கியானம் சொன்ன, சிலவற்றுக்கு பதிலும் செய்த எகிப்திய மந்திரவாதிகளாலேயே புரிந்து கொள்ள முடியாமல், நடுங்கிப் போக வைத்த ஒன்று ஆகும். அந்த வாதையைப் பற்றி ஆண்டவர் சொல்கிற சாட்சியைப் போல இந்த கல்வெட்டு அமைந்திருக்கிறது எனலாம்.


என்னதிது, புதிர் போலவே அல்லவா இன்னும் இருக்கிறது என்று நம் வலைபதிவு வாசகர்கள் குழம்பி இருக்கலாம். இதோ கல்வெட்டு வந்த கதைக்குள் போகலாம்.


இந்த கல்வெட்டை நிறுவியது எகிப்திய பார்வோன்களில் ஒருவனாகிய 4ம் துட்மோஸ் (Thutmose IV) இவன் 2ம் அமென்ஹோடப்பிற்கு (Amenhotep II) பின்பு ஆட்சிக்கு வந்தவன். இந்தக் கட்டுரையில் சற்று முன்பாக மோசே இஸ்ரேல் ஜனங்களை விடுவிக்க முயற்சித்த பொழுது இந்த பார்வோன் தான் ஆட்சியில் இருந்தவன் என்று குறிப்பிட்டது நினைவிருக்கக் கூடும். ஆக இந்த பார்வோன் தான் பிறகு விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் ஜனங்களை செங்கடல் பகுதிக்குப் பின் தொடர்ந்து சென்று செங்கடலில் மூழ்கியவன்.


அதற்கு முன்பாக அவனுக்குப் பிறகு பார்வோனாக வரவேண்டிய இளவரசன் 'தலைச்சன் பிள்ளைகளை' பலி வாங்கிய கடைசி வாதையில் மரித்துப் போயிருந்தான் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். எனவே கடலோடு போய்விட்ட பார்வோனை அடுத்து பார்வோனாக ஆனவன் தான் இந்த 4ம் துட்மோஸ். சரி. இப்போதும் ஒரு கேள்வி எழக் கூடும். வழக்கமாக எல்லா அரச குலங்களிலும் நிகழக்கூடிய ஒன்று போலதானே அது இதிலென்ன, கல்வெட்டில் பொறிக்கிற அளவிற்கு விசேஷம் என்று... சந்தேகம் இன்னும் இருக்கலாம்.


காரணம் என்னவெனில், அனேக வருஷங்களுக்கு முன்பதாக, அதாவது இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையாவதற்கு முன்பு, இந்த 4ம் துட்மோஸ் ஸ்பிங்க்ஸ் சிலை இருக்கும் பாலைவனப் பகுதியில் வேட்டையாடப் போன பொழுது, மிகவும் களைத்துப் போனவனாய், ஸ்பிங்க்ஸ் சிலை நிழலில் படுத்து தூங்கிவிட, அவன் கனவில் சூரிய தேவன் சார்பாக வந்த ஸ்பிங்க்ஸ் பேசியதாம். அதாவது ஒருநாள் இந்த 4ம் துட்மோஸ் பார்வோனாகப் போகிறான் என்றும், அப்படி ஆகும்பொழுது மறவாமல் அதை நினைவுகூற வேண்டுமென்றும்.


எழுந்த துட்மோஸ்க்கு இது புரியவில்லை. தற்போது நன்றாக ஆட்சி செய்து வருகிற பார்வோனுக்கோ அப்படியொன்றும் வயதாகவில்லை. அவனுக்குப் பிறகு ஆட்சிக்கு வர பட்டத்து இளவரசன் தயாராக இருக்கும்பொழுது, இது எப்படி சாத்தியமாக முடியும். மட்டுமல்ல. மூத்த குமாரனும், பட்டத்து இளவரசனின் தாயுமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் தானோ, தன் தாயோ அப்படி அல்ல. இப்படி பாதி ராஜ வம்சப் பிறப்பாகிய தான் பார்வோனாக வர சாத்தியமே என்றெல்லாம் யோசித்தான்.


ஆனால் நடந்த சரித்திரம் நமக்குத் தெரியுமல்லவா. துட்மோஸ், 4ம் துட்மோஸாக பார்வோனாகி விட, தனக்கு வாக்கு சொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து, ஸ்பிங்க்ஸ் சிலையின் பாதத்தருகிலேயே, அந்த கல்வெட்டை பதிப்பித்தான். இன்று அதுவே 'தலைச்சன் பிள்ளைகள்' மரித்துப் போன கடைசி வாதைக்கு நிரந்தர சாட்சியாக இன்றுமிருக்கிறது.


இந்த சாட்சியில் 4ம் துட்மோஸ்க்கு பின் பார்வோன் ஆன மூன்றாம் அமென்ஹோடப் (Amenhotep III) மாறினானோ இல்லையோ, அவனின் மகனான, அடுத்த பார்வோனான நம் கட்டுரையின் நாயகனான நான்காம் அமென்ஹோடப் (Amenhotep IV) என்ற பெயரை அக்கநேட்டன் (Akhenaten) என்று மாற்றிக் கொண்ட பார்வோன் மாறியிருக்கக் கூடும் என்று நம்ப இடமிருக்கிறது எனலாம். ஒருவேளை கல்வெட்டின் பின்னணி கதை நம் பார்வோனை யோசிக்க வைத்திருக்கலாம்; இஸ்ரேலை வழிநடத்தின தேவனைப் பற்றி, வாதைகளை அனுப்பி வைராக்கியமாய் தம் ஜனங்களை மீட்டுக் கொண்ட மகா பெரிய 'யாவே'யைப் பற்றி சிந்தித்திருக்கவும் கூடும். எப்படியெனில் இதற்கு பல நிகழ்வுகளை உதாரணங்களாகச் சொல்லலாம்.

பல தெய்வ வணக்கத்தை முற்றிலுமாகத் துறந்துவிட்டு, ஒரே தெய்வ வழிபாட்டை தீவிரமாகப் பின் பற்றத் துவங்கினான். 'அமொன்' (Amon) என்ற தெய்வத்தின் பெயரைச் சேர்த்து இருந்த தன் பாரம்பரிய பெயரைத் துறந்துவிட்டு, 'Aten' கடவுளின் தாசன் என்ற விதத்தின் பொருள்படும்படியான (Akhenaten) 'அக்கநேட்டன்'  என்று மாற்றிக் கொண்டான். இஸ்ரேல் ஜனங்களின் ஆண்டவரைப் பற்றி, நம் பார்வோன் நிச்சயம் அறிந்திருக்க முடியும் என்பதை எதினால் நாம் அறிந்து கொள்ளலாமெனில், ஒரு சரித்திர நிகழ்வு உண்டு.
நம் பார்வோனின் பின் நாட்களில், நைல் நதியோரம் உள்ள (Amarna) 'அமர்னா'வில் தன் புதிய தலைநகரை மாற்றிக் கொண்டான். அந்தப் பகுதியிலிருந்து பின் நாட்களில் அனேக களிமண் பதிவுகள் (Tablets) கண்டெடுக்கப் பட்டன. அந்தப் பதிவுகளில் இருந்து ஏராளமான புதிய தகவல்களை, அக்காலச் சூழல், சம்பவங்கள் மற்றும் பல காரியங்களைப் பற்றி அறிய வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு பதிவுகளில் ஒன்று இச்சம்பவத்தைச் சொல்கிறது. 
 
இஸ்ரேல் ஜனங்களின் படையெடுப்பை எதிர்க்க உதவும்படி கானானியர்கள் நம் பார்வோனிடம் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி உதவாவிட்டால் எல்லாவற்றையும் இந்த இஸ்ரவேலர்கள் ஜெயித்து விடுவார்கள் என்றெல்லாம்... அந்த விண்ணப்பத்தை எழுதிய போர் வீரன் பெயர் அப்டிஹிபா (Abdkhiba). இவன் எருசலேம் பற்றி இப்படியாக பார்வோனின் தலைமை உதவியாளருக்கு எழுதுகிறான்.

'ராஜாவின் இந்த முழு பகுதியையுமே இழந்து விடுவோம் போலிருக்கிறது. சேயீர், ஏதோம் மற்றும் கர்மேல் பகுதிகளை அந்த பிரபுக்கள் இழந்து விட்டார்கள். ராஜாவின் முழு பகுதியையுமே இழந்து விடுவோம். இந்த வார்த்தைகளை பார்வோனின் சமுகத்திற்கு நேரிடையாக கொண்டு செல்லுங்கள். நம் ராஜாவின் முழு தேசமுமே நாசமடையப் போகிறது...' (இந்த குறிப்புகள் பற்றின பின்புலத் தகவல்களை நாம் உபாகமம் 2வது அதிகாரத்தில் காணலாம்.)


சரி. இவ்வளவு தீவிரமாக கேட்டுக் கொண்ட கடிதத்தின்படி, நம் பார்வோன் படைகளை அனுப்பினாரா? என்றால் இல்லை என்கிறார் இது பற்றி தன் புத்தகத்தில் குறிப்பிட்ட விக்டர் பியர்ஸ் என்கிற ஆராய்ச்சியாளர். இது மிகவும் ஆச்சர்யமான விஷயமல்லவா! பார்வோன் அனுப்பாததற்கு நாம் யூகிக்க முடிகிற ஒரே காரணம், அவன் முன்பாகவே கேள்விபட்டிருக்கக் கூடிய இஸ்ரவேலின் தேவன் அவர்களை முன்னின்று நடத்தும்போது, அதை எதிர்க்க யாராலும் முடியாது என்பதை புரிந்திருந்தது தான் என்று யூகிப்பதில் தவறில்லை தானே...


இதை பலரும் இந்த ரீதியில் விளங்கிக் கொள்வது சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால் அவனது செயல்பாடுகள் அநேகமாக இதை வலியுறுத்துகிறது என்பது நாம் சிந்திக்க வேண்டியதொன்று. அவனது முன்னோர்களின் தெய்வங்களைப் புறக்கணித்து, 'ஒரே தெய்வ' கருத்தை மக்கள் முன் வைத்தது என்பது மட்டுமல்ல. பதவிக்கு வந்த 3வது வருடத்திலேயே தன் புரட்சிகரமான மாற்றங்களை ஒரு பண்டிகையின்போது ஆரம்பித்தான் என்று சில பதிவுகள் சொல்கின்றன. பிறகு தன் ஆட்சியின் 9வது வருடத்தில் அவனின் மாற்றங்கள், அவன் ஏற்படுத்தின மாற்றங்கள் மிகவும் வியப்பூட்டுபவை. அவன் தன முன்னோர்களின் கோவில்கள் உள்ள கர்னாக் (Karnak) பகுதியை முற்றிலுமாய் புறக்கணித்துவிட்டு, தன் தலைநகரையே நாம் சற்று முன்பு கூறியபடி நைல் நதி கரையோரம் உள்ள அமர்னாவிற்கு மாற்றிக் கொண்டான். மற்ற தெய்வங்களின் கோவில்களை அழித்தும், நிராகரித்தும் வரத் துவங்கினான். எல்லா தெய்வ உருவங்களுக்கும் தடை விதித்தான். அனுமதித்த ஒன்றே ஒன்று தன் கிரணங்கள் வெளி வருவது போல் உள்ள சூரிய வட்டம் மட்டுமே.

'Aten' என்பதே சூரியனைக் குறிப்பது, ஆக சூரிய வணக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டான் அல்லவா என்று பலர் கேள்வி எழுப்பக் கூடும். 


ஆனால் நம் பார்வோன் பற்றின 'Wikipedia' பதிவு ஒன்று இப்படியாகத் தெரிவிக்கிறது.


சூரிய கிரணங்கள் வெளிவருவது போல் உள்ள அந்த ஒளி வட்டம், 'Aten'னின் பார்க்க முடியாத ஆவியை (Unseen Spirit) அடையாளப்படுத்துவதாக இருக்கிறதாம். இங்கு 'Aten' என்று குறிப்பிடப்படுவது வெறும் சூரியனைக் குறிக்காமல் உலகளாவிய ஒரு கடவுளை (Universal Deity) எல்லாவற்றுக்கும் காரணரான கடவுளைக் குறிக்கிறதாம். ஒரு முக்கியமான குறிப்பு என்னவெனில், எங்கெல்லாம் இப்படி வெளிவரும் சூரிய கிரணங்களுடனான ஒளி வட்டம் 'Aten' என்ற முழு முதற் கடவுளைக் குறிக்கவென்று பயன்படுத்துகிற இடங்களிலெல்லாம் எகிப்தின் சித்திர எழுத்துக்களால் ஆன ஒரு குறிப்பும் உண்டு, இப்படியாக...

சர்வத்தையும் படைத்த ஆண்டவரைக் குறிக்க அடையாளப்படுத்தும் இந்த சூரிய பிம்பத்தையே கடவுளாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக அவர் படைப்பின் மகத்துவத்திற்கு ஒரு அடையாளமாக மட்டுமே கொள்ள வேண்டுமேயன்றி, மற்றபடி சர்வத்தையும் படைத்த கடவுளின் ரூபத்தை முழுமையாகவோ, போதுமானதாகவோ அடையாளப்படுத்த வேறு எந்த ஒரு படைப்பாலும் இயலாது.
நிச்சயமாகவே இது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்குமென்று நினைக்கிறேன். இதை மேலும் உறுதி செய்கிற விதமாய் இன்னொரு தகவலும் உண்டு. இந்த பார்வோனின் கல்லறையில் ஒரு பெரிய கவிதை பொறிக்கப்பட்டிருக்கிறது. 'The great hymn of Akhenaten' என்று மிகவும் பிரசித்தி பெற்றது இது. இதில் என்ன விசேஷம் என்றால், இதற்கும் நம் வேதாகமத்தில் உள்ள 104ம் சங்கீதத்திற்கும் உள்ள பல ஒற்றுமைகள், இந்த பார்வோனின் 'மாபெரும் பாடலின்' பிரசித்தத்திற்கு ஒரு காரணம். இன்றைக்கும் வலைத்தளத்தில் பார்ப்பீர்கள் எனில் இரண்டையும் ஒப்பிட்டு ஏராளமான தகவல்கள், கட்டுரைகள் உண்டு.

ஆனால் இவைகள் பலவற்றில் உள்ள குறிப்பு என்னவென்றால், இந்த நம் பார்வோனின் 'பெரிய பாடல்' தான் 104ம் சங்கீதம் எழுதப்பட உந்துதலாக இருந்திருக்கும் என்பது தான். இதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் முன்பே சொன்ன விதமாக எகிப்திலிருந்து இஸ்ரேல் விடுதலையை கி.மு.15ம் நூற்றாண்டாக (கி.மு.1440 என்பதால்) எடுத்துக் கொள்ளாமல் கி.மு.13ம் நூற்றாண்டாக (கி.மு.1250 என்று பலர் சொல்வதின்படி) பலர் நம்புவது தான். அதாவது 14வது நூற்றாண்டில் (1351-1334 கி.மு.) வாழ்ந்த நம் பார்வோனின் 'பெரிய பாடலின்' பாதிப்பு, இஸ்ரேல் ஜனங்கள் பயன்படுத்தி இருக்க முடிகிற 104ம் சங்கீதத்தில் உண்டு, அதன் மூலமே பார்வோன் பாடல் வடிவம் என்கின்றனர். ஆனால் இது தவறான யூகம் என்று ஏற்கனவே நம் விளக்கிக் கூறிவிட்டோம்.


இப்பொழுது இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். 'சங்கீதங்கள்' புத்தகம் முழுமையுமே எழுதினவர் தாவீது என்றும், சங்கீதங்களின் காலமே 9,10வது நூற்றாண்டு தான் என்று நினைத்து பேசிக் கொண்டு வருகிற பலர் நம்மிடையே உண்டு.


ஆனால் தாவீது பெரும்பாலான சங்கீதங்களை மட்டுமே எழுதினார் என்றும், அநேக சங்கீதங்களை எழுதினது இன்னார் என்று நமக்கு குறிப்புகள் இல்லை என்றாலும் அவைகளும் சங்கீதத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதொன்றாகும். குறிப்பாக, சரித்திர சம்பவங்களைச் சொல்கிற 68, 78, 95, 105, 106, 111, 114, 135, 136, 149வது சங்கீதங்களில் 68, 78,105வது சங்கீதங்களைத் தவிர மற்றவைகள் 'Anonymous' ஆசிரியர்கள் என்றே குறிக்கப்படுகிறது. என்னவென்று யூகிக்கலாமெனில், அந்தந்த சரித்திர கால நிகழ்வுகளின் பாதிப்புகளில் கடவுளின் தாசர்களால் அவரை மகிமைப்படுத்த, சாட்சியாக இருக்க அவைகள் எழுதப்பட்டிருக்கலாம்.


அதே போல தான் 104வது சங்கீதம் எழுதினவர் பற்றியும் நமக்குத் தெரியாது. சங்கீதங்களின் காலக்கட்டத்தைப் பார்த்தால் கி.மு.1440லிருந்து கி.மு.586 வரை பரந்ததொன்று என்று அறிஞர்கள் கூறுகின்றனர். மிகப் பழமையான சங்கீதமான மோசேயின் சங்கீதம் (90) ஒரு சமயம் கி.மு.1440ஆக இருந்திருக்கும். அதைப் போல இந்த 104ம் சங்கீதமும் மிகத் தொன்மையானதாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். படைப்பின் அருமைகளை, படைத்தவரைப் பற்றி புகழ்ச்சியோடு உள்ள இந்த சங்கீதத்தின் பாதிப்பே பார்வோனின் 'மா பாடலுக்கு' உந்துதலாக இருந்திருக்கலாம் எனில் அது நல்லதொரு யூகமாகவே தோணுகிறது. சரி, அப்படி என்னதான் ஒற்றுமைகள் என ஒன்றிரண்டைப் பார்க்கலாம். பெரிதாக சொல்லப்படுகிற எட்டு ஒற்றுமைகளில் இப்படி துவக்கத்திலேயே இரண்டிற்கும் பொதுவான ஒற்றுமை உண்டு. மேலும் குறிப்பிடும்படியான ஒற்றுமை 104: 20,21,22,23ம் வசனங்களுக்கும் 'மா பாடலுக்கும்' (The great hymn to the aten) உண்டு.

Atenக்கான பாடல் 
...உம்மின் உதயம் வானத்தில் எத்தனை அழகாய் ஓ ஜீவனுள்ள Aten வாழ்வின் ஆரம்பம் நீ கிழக்கு திசையில் உதித்து நீ நிலமெங்கும் அழகால் நிரப்புகிறாய் நீ அழகு பெரிதாய் எல்லாவற்றுக்கும்...

இதே விதமாக பாடலின் இறுதி வரிகளுக்கும், 104ம் சங்கீதத்தின் கடைசி வசனங்களுக்கும் ஒற்றுமை உண்டு. எப்படி வந்தது இப்படியொரு ஒற்றுமை என்பது பலரும் இன்றைக்கும் விவாதிக்கிற விஷயம். ஆனால் சர்வ வல்லமையுள்ள கடவுளை அவர் படைத்தவைகளை வணங்கிக் கொண்டிருந்து, படைத்தவரையே மறந்தவர்களிடமிருந்து விலகி, அந்த ஒரே கடவுளைப் பற்றிக் கொண்டு, அது பற்றின கருத்துக்களை நம் பார்வோன் பரப்ப முயன்றது உண்மை என்பதை எவரும் மறக்கவியலாது. 

17 வருஷங்களே பார்வோனாய் இருந்து, மறைந்த பிறகு, பார்வோனான அவனின் மகன் Tutankhamun தன் தகப்பனின் கருத்து நேர்விதமாய், ஏதோ வைராக்கியம் கொண்டவன் போல, இந்த 'அக்கநேட்டன்' பார்வோனின் பெயரையே சரித்திரத்திலிருந்து அழித்துப்போட கங்கணம் கட்டிக் கொண்டதைப் போல தீவிரமாய் அழித்துப் போட முயன்றதை, சரித்திரம் சொல்கிறது. ஒருவேளை அப்படி அழிக்கப்பட்டவைகளில் நம் பார்வோனின் மாற்றம், மதப் புரட்சி பற்றின பல தகவல்கள் அழிந்துப் போயிருக்கவும் கூடும். ஏனெனில் நம் பார்வோனின் மதப் புரட்சியில், எகிப்தில் பலரும், தெய்வங்களின் பூசாரிகளுமே அரண்டு போயிருந்தனர். அவர்கள் அழித்துப் போட்டவைகளில் எஞ்சியவற்றில் இருந்தே இந்த பார்வோனின் இந்த காரியங்கள் இன்று கொஞ்சம் குறைய 3000 வருஷங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.


ஆனால் அவனின் மாற்றங்கள் தொடரவில்லை என்பது உண்மைதான். 'இன்கா அரசில்' வந்த ஒரு பெரிய வாதையைப் போல, இங்கும் அமர்னாவில் ஒரு பெரும் வாதை வந்து அநேகம் பேர் மரித்துப் போனது ஒரு சரித்திர சோகம்.

"கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே."
-அப்போஸ்தலர் 17: 27.
-எட்வினா ஜோனாஸ்

No comments:

Post a Comment