Friday, November 18, 2016

சரித்திரம் அவரின் சித்திரம் - 2


வேதாகமத்தில் வருகிற சரித்திரத் தகவல்களை அணுகி, ஆராய்ந்து என்ன ஆகப் போகிறது? தெரிந்து என்ன பயன்? முடிந்தவைகள், ஒளிந்து கொண்டிருப்பவைகள் பற்றின அலசல் எதற்காக? என்றெல்லாம் கேள்விகள் நம்மில் பலரின் மனதிலும் எழுவது இயல்பானதுதான். சென்ற வலைப்பதிவில் தானியேலையும், பாபிலோனிய ராஜாக்கள் பற்றியும் படித்துவிட்டு பலர் இப்படியாகக் கேட்கவும் செய்தனர்.

ஆனால் ஒரு மலை முகப்பின் உச்சியில் நின்று பார்க்கும்பொழுது விரியும், பரந்திருக்கும் காட்சிகளில் பரவசமாகிற பொழுதோ, கண்கள் திகட்ட பசுமையாய் அடர்ந்திருக்கிற கானகக் காட்சிகளில் லயிக்கிற பொழுதோ, கடலினுள் வாழும் விசித்திர நீர் ஜந்துக்களை வினோத மீன் வகையறாக்களை சிலாகிக்கும் பொழுதோ இவைகளைப் படைத்த ஆண்டவரைப் பற்றின சிலிர்ப்பு நமக்குள் துளிர்த்து அவரைத் துதிக்க வைப்பதைப் போல, இந்த உலக சரித்திரத்தினூடாக நாம் கண்டறிய முடிகிற அளவில் கரம், சித்தம், செயல்பாடுகள், ஊன்றிக் கவனிக்கையில் சிலிர்க்க வைக்கின்றன. அவர் சித்தம் செயல்பட புறஜாதி ராஜாக்களின் சில சரித்திர நிகழ்வுகள் பயன்படுவது, நம் விசுவாச வேர்கள் புத்துயிர் பெற ஏதுவாக இருக்குமென்று நாம் நம்பலாம்.


வேதாகமத்தில் வருகிற இன்னொரு முக்கியமான பேரரசு அசீரியர்களுடையது. அநேக வருஷங்களுக்கு முன்பாக, நம் பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் வருகிற இந்த அசீரிய ராஜாக்கள் பலரையும், உலக சரித்திரப் படி அடையாளப்படுத்த முடியாதென்றும், புராண பாத்திரங்கள் போலதான் என்றும் பல அறிஞர்கள் கூறி வந்தனர். உதாரணத்திற்கு ஏசாயா 20: 1ல் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிற 'சர்கோன்' ராஜா, அசீரிய சரித்திரத்திலேயே இல்லை என்றார்கள்.
ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அகழ்வு ஆராய்ச்சிகளும், தொல்பொருள் ஆய்வுகளும் வேதாகமத் தகவல்களின் துல்லியதையும், மெய்மையையும் நிரூபித்துக் கொண்டு வருகின்றன.

அசீரியா. இந்த பெயர் நோவாவின் மகனான சேமின் மகனான அசூரின் வழித்தோன்றல்கள் மூலம் ஏற்பட்டிருக்கக்கூடிய நாடாக இருக்கலாமென்று குறிப்புகள் உண்டு.

இன்றைய ஈராக்கின் வடக்குப் பகுதியில் தான் அந்நாளில் அமைந்திருந்தது அசீரிய பேரரசு. இதன் பல நிகழ்வுகளை நம் வேதாகம சம்பவங்களோடு அழகாகப் பொருத்திப் பார்க்க முடியும். குறிப்பாக கி.மு.900 முதல் கி.மு. 600 வரை அமைந்திருந்த புதிய அசீரிய ராஜாக்களின் காரியங்களை நம் வேதத்தில் வருகிற பல நிகழ்வுகளில் பொருத்திப் பார்க்க வாய்ப்புண்டு. இந்த காலகட்டத்தில் தான் அவர்களின் அரசு விரிவடைந்து மத்திய தரைக்கடல் பகுதியைக் கடந்து, பாலஸ்தீனம் வரை நீண்டு, எகிப்தையுமே தொட்டது. இவர்கள் தாம் இஸ்ரேல் தேச வடக்கு பகுதியை ஒழித்து சமாரியாவைப் பிடித்து, அங்கு தம் மக்களைக் குடியேற்றினார்கள். பிறகு அவர்கள் யூதாவின் மேல் கவனத்தைத் திருப்பின பொழுது பாபிலோனிய ராஜாக்களின் கை ஓங்கி கி.மு.612ல் அவர்களிடம் தோற்றுப்போனார்கள்.
சமீப வருஷங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அசீரிய ராஜாக்களின் பதிவுகளான அந்தந்த ராஜாக்களின் குறிப்புகளும், அரசின் பொதுவான நிகழ்வுக் குறிப்புகளும் வேதாகம குறிப்புகளோடு அதிசயிக்கத்தக்க வகையில் ஒத்துப் போனது ஆராய்ச்சியாளர்களை பிரமிக்க வைத்தது. ராஜாக்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில்கூட வித்தியாசம் இல்லை. நாம், (கிறிஸ்தவர்கள்) பல தடவைகளிலும் வேதாகம சரித்திர காரியங்களை மிகவும் இயல்பானதாக எடுத்துக்கொண்டாலும், வேதத்தை அறிந்திராத / நம்பாத பல ஆராய்ச்சியாளர்கள் அந்த நாட்களின் சரித்திரங்கள் பற்றின வேதாகமக் குறிப்புகள் மிகவும் ஆச்சரியகரமான வகையில் உண்மையாக இருப்பதை சிலாகிக்கிறார்கள்.

வேதாகமத்தில் காணப்படுகிற அசீரிய ராஜாக்கள்:
  1. (மூன்றாம்) திகிலாத் பிலேசர் - கி.மு.745 - 725 (2இராஜாக்கள் 15: 19, 29, 16: 7, 10, 1நாளாகமம் 5: 6, 26, 2நாளாகமம் 28: 20)     
  2. (ஐந்தாம்) சல்மனாசார் (שַׁלְמַנְאֶסֶר) - கி.மு.726 - 722 (2இராஜாக்கள் 17: 3, 18: 9
  3. (இரண்டாம்) சர்கோன் - கி.மு.721 - 705 (ஏசாயா 20: 1)
  4. சனகெரிப் (סַנְחֵרִיב) - கி.மு.704 - 681 (2இராஜாக்கள் 18: 13, 19: 16, 20, 36, ஏசாயா 36: 1, 37: 17, 21, 37, 2நாளாகமம் 32: 1, 2, 9, 10, 22)  
  5. எசரத்தோன்( אֵסַר חַדֹּן) - கி.மு. 680 - 669 (2இராஜாக்கள் 19: 37, ஏசாயா 37: 38, எஸ்றா 4: 2
இவர்களைத் தவிரவும் சில அசீரிய ராஜாக்களின் பங்கு மறைமுகமாய் உண்டு. முதலாம் திகிலாத் பிலேசரில் அசீரிய அரசு ஆரம்பிக்கிறது எனலாம். இந்த காலகட்டம் கி.மு.1100 முதல் 900 வரை தொடர்கிறது. இதில் அசீரியா அரசு மிகவும் அடங்கின நிலையில் இருந்ததாம். இந்த காலகட்டங்கள் தாம் தாவீது ராஜாவும், சாலொமோன் ராஜாவும் முழுவீச்சில் இருந்த நாட்களாகும். அதே போல யோனா போய் அசீரியாவின் தலைநகரான 'நினிவே'யில் பிரசங்கித்து பெரும் மனமாற்றம் வந்ததை வேதாகமத்தில் படிக்கிறோம்.அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடிய கி.மு.9ம் நூற்றாண்டில் (கி.மு.848ல்) ஆட்சியில் இருந்தவன் அநேகமாக மூன்றாம் அடாட் நிராரி என்கிறார்கள்.
இதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் குறைவு என்றாலும், ஒரு சுவாரஸ்ய குறிப்பு இதை உறுதிப்படுத்துவதைப் போல உள்ளது. போரிடுவதை ஒரு மதத்தைப் போல, தொழிலைப் போல கையாளுகிற அசீரிய ராஜாக்களின் வரிசையில் இந்தக் காலகட்டம் மட்டுமே மிகமிகக் குறைந்த அளவாக அந்த உக்கிரம் இருந்ததாம்.

மூன்றாம் திகிலாத் பிலேசர் - பிற்கால அசீரிய பேரரசை நிறுவியவர் என்று இவனைச் சொல்லலாம். வெற்றிபெற்ற பகுதிகளைத் தக்க வைத்துக்கொள்ள அநேகம் நடவடிக்கைகளை மேற்கொண்டான் இவன். அதில் முக்கியமானதொன்று, ஒரு பட்டணத்தைப் பிடித்தபிறகு, அதில் உள்ளவர்களைத் துரத்திவிட்டு, தன் மக்களைக் குடியேற்றுவது. இவனுக்குப் பின் வந்த ராஜாக்களும் இந்த யுக்தியையே பின்பற்றினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வேதாகமத்தில் உள்ள குறிப்புகளை உறுதி செய்வதைப் போல, இவனுடைய ஆண்டுக் குறிப்புகள் உள்ளன.

மூன்றாம் திகிலாத் பிலேசரின் ஆண்டுக் குறிப்பு:
இஸ்ரேலையும், அங்குள்ள அனைவரையும் அவர்களின் பொருட்களோடு அசீரியாவுக்கு கொண்டு போனேன். அவர்கள் தங்கள் ராஜாவாகிய பெக்காவை தூக்கி எறிந்தார்கள். அவனுடைய ஸ்தானத்தில் நான் ஒலிசியாவை அவர்களுக்கு ராஜாவாக்கினேன். 1000 தாலந்து வெள்ளியை கப்பமாகக் கொடுத்தார்கள். ANET 28.
வேதாகமப்பகுதி: 2 இராஜாக்கள் 15
இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில், அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யானோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான். ஏலாவின் குமாரனாகிய ஒசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் இருபதாம் வருஷத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். (2இராஜாக்கள் 15: 29, 30)

ஐந்தாம் சல்மனாசார் - அரசாண்ட நாட்களில், சில புதிரான காரணங்களினால், ஓசெயா, அசீரியா ராஜாவுக்கு விரோதமாக எழும்பின பொழுது, சல்மனாசார், அவனைத் தோற்கடித்து சிறைபிடித்து, சமாரியவை முற்றுகையிட்டான். சிறைபிடித்துக் கொண்டு போன இஸ்ரவேல் ஜனங்களை கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபேரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். 2இராஜாக்கள் 18: 9-11ல் உள்ள இந்தக் காரியங்கள் பாபிலோனிய நிகழ்வுக் குறிப்புகளிலும் காணப்படுகிறது.

(இரண்டாம்) சர்கோன் - என்பவனைப் பற்றின குறிப்பு வேதாகமத்தைத் தவிர (ஏசாயா 20: 1) மற்ற சரித்திர பதிவுகளில் இல்லாமலிருந்ததால் இப்படி ஒரு ராஜாவே இல்லை என்று சொல்லி வந்தார்கள். ஆனால் ஈராக்கில் நடைபெற்ற ஒரு புதைபொருள் ஆராய்ச்சியில் இந்த சர்கோன் கட்டிய மிகப் பிரமாண்டமான அரண்மனையைக் கண்டுபிடித்தார்கள்.

சர்கோனைப் பற்றின கல்வெட்டுக் குறிப்பு:
திடீரென்று வந்த கோபத்தில், நான் வேகமாகக் கடந்துபோய், என்னுடைய ரதம் தவிர, என்னுடைய சொந்தப் படையுடன் ஆஸ்தோத்திற்கு விரோதமாய் போய் அஸ்தோத், காத், அஸ்டுடிம்மு பட்டணங்களைக் கைப்பற்றினேன்.  ANET P 286.
வேதாகமப் பகுதி: ஏசாயா 20: 1
தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின் மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே... (ஏசாயா 20: 1).

சனகெரிப் ராஜா - அசீரிய ராஜாக்களின் வரிசையில் பலரும் அதிகமாய் தெரிந்து வைத்திருப்பதற்கு காரணம் எசேக்கியா ராஜாவுக்கு அவன் விட்ட சவால் ஆகும். கி.மு.704 முதல் 681 வரை அரசாண்ட இவன், அசீரிய சாம்ராஜ்யத்தை மிகவும் விரிவாக்கினவன். இவன் கி.மு.701ல் யூதா மீது படையெடுத்து வந்த சம்பவங்களைத்தாம் நாம் ஏசாயா 36, 37 அதிகாரங்களில், 2நாளாகமம் 32ல், 2இராஜாக்கள் 18, 19ல் மிகவும் விரிவாகப் பார்க்கலாம். முன்பாக எசேக்கியா கொடுத்த வெகுமானங்களையும் பொருட்படுத்தாதபடிக்கு தேவனாகிய கர்த்தரை நிந்தித்ததாக வேதாகமக் குறிப்பு உள்ளது. விளைவு? தேவதூதன் அடிக்க, 1,85,000 அசீரியப் படையினர் சங்கரிக்கப்பட்டனர்.

மிகப் பயங்கரமான இந்த 'சம்பவம்' நடந்ததொன்று தானா? நடந்தது பற்றி வேறு எங்காகிலும் குறிப்புகள் உண்டா? என்று கேட்பதுண்டு.

சனகெரிப்பின் ஆண்டுக் குறிப்புகளில் எசேக்கியா தந்த வெகுமானம் பற்றின குறிப்புகள், கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் தவிர, மற்ற பல விஷயங்களோடு, வேதாகமத்தில் கூறப்பட்டவைகளோடு ஒத்துப்போனாலும், நடந்த 'மாபெரும்' சங்காரம் பற்றி ஏதும் தகவல்கள் இல்லை. மாறாக சனகெரிப்பின் வெற்றி (?) மிகவும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த வெற்றி (?)க்கு பிறகு அவன் 'யூதா' பக்கம் திரும்பவில்லை என்பதுதான். இதற்கும், அதற்குப் பிறகு 20 வருஷங்கள் அரசாண்ட பிறகும்.

'இந்த தேவதூதன் சங்காரம்' பற்றி யூத சரித்திர ஆசிரியர் ஜோஸிபஸ் குறித்திருக்கிறார்.

சனகெரிப் ராஜாவின் தளபதி ரப்சாகே தலைமையில் முற்றுகையிட்டபொழுது ஒரு பெரிய வாதை அசீரியப் படையைத் தாக்கி 1,85,000 பேர் மரித்தார்கள் என்று சிலர் ஷீராடோட்டஸின் ஒரு விசித்திர சரித்திரக் குறிப்பை காட்டுகிறார்கள். ஒருநாள் இரவில் மிக ஏராளமாய், எக்கச்சக்கமாய் வயல் எலிகள் புகுந்து முழு அசீரிய படைகளையும் முடக்கிப்போட்டது... இது பற்றியதாக இருக்கலாமென்கிறார்கள்.

அசீரிய ராஜா எசரத்தோன் (Esarhaddon אֵסַר חַדֹּן) பதவிக்கு வந்ததை, வந்த சூழ்நிலையை வேதாகமத்தில் குறிப்பிடுவதைப் போலத்தான் அசீரியர்களின் நிகழ்வுத் தொகுப்பும் சொல்கின்றன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தேவனை அறிந்திராத இந்த மகா ராஜாக்களையும் தம் சித்தத்தை நிறைவேற்ற எப்படிப் பயன்படுத்தினார் என்பது ஆழ்ந்து கவனிக்கையில் சிலிர்ப்பூட்டாமல் இருக்க இயலாது. மட்டுமல்ல, வேத வசனங்களின் துல்லியம் நினைக்க... நினைக்க... பிரமிப்புக் குன்றாத ஒரு அற்புதம்!
இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.- சங்கீதம் 2: 10
-எட்வினா ஜோனஸ் 
கட்டுரைக்கு உதவின நூல்கள்:
1. Archaeology and Biblical Research - Vol: 4, No: 2
2. Insight of the Scriptures - Vol I & II

1 comment: