Wednesday, October 21, 2015

அறியாமலிருக்கும் அற்புதங்கள் - 6

ஆப்பிரிக்கா என்றதுமே நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது கருப்பு இன மக்களும், அடர்த்தி மிகு பசுமைக்காடுகளும் தான். டிஸ்கவரி சானல் உபயத்தில் ஏராளமான பரப்பில் காட்டு விலங்குகளின் விநோதங்களும், அங்குள்ள  பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளும் இன்றைக்கு பலருக்கு பரிச்சயமானது தான். சில வருஷங்களுக்கு முன்பாக ஆப்பிரிக்காவிலிருந்து உதகையில் வந்து தங்கி படிக்கிற மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. கென்யா, தன்சானியா, நைஜீரியா என்று பலபல ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்திருந்த அவர்கள், எவ்வித இசைக்கருவிகளும் இல்லாமல் வெறும் கைத்தாளங்கள், சொடுக்குகளோடு பாடிய கிறிஸ்துவ பாடல்கள் மொழியின் அர்த்தம் விளங்காவிட்டாலும் எம்மை பிரம்மிக்க வைத்தது. அவர்களின் சாட்சிகள் கூடி இருந்த நம் மக்களுக்கு இன்னொரு செய்தியை சொல்லாமல் சொல்லிற்று.

தேச எல்லைகளைத் தாண்டி, இன எல்லைகளை தாண்டி இந்த பலபல தேசங்களிலிருந்து வந்த கருப்பு இன மாணவர்களுக்கும் ஆண்டவர் போதுமானவராக, புதிய வாழ்க்கையைத் தருபவராக இருக்கிறாரே என்ற செய்திதான் அது.

சமீப நாட்களில் ஆப்பிரிக்க தேசங்களின் பின்னணியில் இருந்து வருகிற பல ஊழியர்களை GOD TV சேனலில் மட்டுமல்ல, நம் பல சபைகளின் சுவிஷேசக் கூட்டங்களிலுமே பார்க்க முடிகிறது. அந்த தேசங்களில் வெடிக்கிற எழுப்புதல்கள், பெருகும் திருச்சபைகள் பலருக்கு ஆச்சர்யமாகவே இருக்கும்.
ஊடகங்களின் வலிமை அதிகம் இல்லாத அந்த நாட்களில் 'டேவிட் லிவிங்க்ஸ்டன்' (David Livingstone) மூலமாக, ஆப்பிரிக்கா பற்றின தகவல்கள் வர; அநேகரை அது பிரமிக்க வைத்தது. மனிதரை தின்னும் காட்டுவாசிகள் உட்பட அந்த அதிவிநோதமான செய்திகள் திகைக்க வைத்தது.  ஆப்பிரிக்கா பற்றி இப்படியாக அறியப்பட்டிருந்த கட்டத்தில் எப்படி திருச்சபைகளுக்கான கதவுகள் எப்படி விரிய விரியத் திறந்தன என்பது மிகவும் ஆர்வமூட்டுகிற ஒன்றுதான்.

மானுடவியலாளர் டான் ரிச்சர்ட்சன் குறிப்பிடுகிற பழங்குடிகளில் இரண்டு குடிகளைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம்.  எப்படி சுவிஷேசத்திற்கான கதவுகளை அந்த பழங்குடி மக்களின் கலாச்சார காரியங்களினூடே வைத்திருந்தார் என்கிற நாம் இதுவரை அறியாமலிருக்கிற அற்புதத்தை விளக்குகிறார் அவர்.

மலைப் பகுதிகள் நிறைந்துள்ள தென் மத்திய எத்தியோப்பியாவில் பலவிதமான பழங்குடி இன மக்கள் உண்டு. விஷேசம் என்னவெனில் இந்த மக்களின் ஒரு பொதுவான நம்பிக்கை 'எல்லாவற்றையும் படைத்த (கடவுள்) ஒருவர் இருக்கிறார்' என்றும் அவர் "MAGANO" அழைக்கப்படுகிறார் என்பதுதான்.  (MAGANO என்றால் Omnipotent Creator of All என்று அர்த்தமாம்). 

(இனி வரும் பல ஆப்பிரிக்க பெயர்களை, தமிழில் எழுதும் பொழுது வினோதமாக தொனிப்பதால், பெயர்களை ஆங்கிலத்திலேயே குறிப்பிட விரும்புகிறோம்.)
இந்தக் குடிகளில் Darassa என்னும் இன்னும் குறிப்பாக "Gedeo" என்று அறியப்பட்டிருக்கிற ஒரு பழங்குடி இன மக்கள் உண்டு. இந்த இன மக்கள் பெரும்பாலும் இந்த "MAGANO"வை தொழுது கொண்டாலும், முழுமையாக உண்டா என்றால் இல்லை. சொல்லப் போனால் இப்படி "MAGANO"வை தெய்வமாக கொண்டிருந்த இவர்கள் "Sheitan" என்று அழைக்கப்படுகிற (தமிழில் இதை சொல்லிப் பார்க்க 'சைத்தான்' என்று குறைய வருவதை பார்க்க வியப்பாக இருக்கிறது அல்லவா?) துர்தேவதைக்கு, அதன் கோபத்திற்கு அதிகம் பயப்படுவார்களாம், கவலைப்படுவார்களாம்.

இந்த "Gedeo" மக்களின் மத்தியில் ஊழியம் செய்த Albert Brandt, அவர்களிடம் ஒருமுறை கேட்டாராம், "MAGANO கடவுளை இத்தனை பயபக்தியாய் நினைத்துக் கொண்டிருக்கிற நீங்கள் ஏன் இந்த Sheitanக்கும் பலியை செலுத்துகிறீர்கள்?"  என்றதற்கு அவர்கள்,

"உண்மைதான். பலி செலுத்துவது அன்பினால் அல்ல பயத்தால். MAGANOவோடு நெருங்கிய உறவுகளை எங்களால் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இப்படிச் செய்தாக வேண்டி இருக்கிறது" என்றார்களாம் பதிலாக.

வியப்பாக இருக்கிறது அல்லவா? இவர்களில் ஒருவன் வித்தியாசமாக யோசித்தான். அவன்தான் இந்த இன மக்களின் அரச குடும்பத்தைச் சேர்ந்த  Warassa Wange. அவன் இருந்த இடம் 'Dilla' என்று அழைக்கப்படுகிற இடம். இந்த "Gedeo" மக்கள் இருக்கும் நிலப்பரப்பில் ஒரு மூலையில், உள்ள ஊர் இது. இவன் ஒருமுறை MAGANO விடம், தமக்கு அவரை வெளிபடுத்தும் படியாக சாதாரண முறையில் ஜெபிக்க ஆரம்பித்தாராம்.

ஆச்சர்யம் என்னவெனில் இந்த எளிமையான ஜெபத்திற்கு உடனடியாக பதில் வந்தது தான். அதிர வைக்கிற வினோதமான தரிசனங்கள் அவனுக்கு வரத் தொடங்கின. அதில் ஒன்றில் முற்றிலும் அறிமுகமேயில்லாத இரண்டு வெள்ளைக்காரர்கள் வந்ததுதான்.

(நமக்கு, நாம் இருக்கிற சூழலின் பின்னணியில் இந்த தரிசனக் காட்சி ஒருவேளை வெகு சாதாரணமாகத் தெரியலாம். சிலருக்கு உயரமான இடம், ஓடுகிற தண்ணீர் போன்றவற்றைக் கண்டாலோ பயம் வருவதைப் போல, சிலருக்கு வெள்ளைக்காரர்களைப் பார்த்தாலே அலர்ஜியாகலாம். இதை Caucasophobia என்பார்கள். இது அதிகமுள்ள பழங்குடி மக்களிடையே இப்படியொரு தரிசனம் என்றால் விஷேசம் தானே?)

Warassa Wange பார்த்த இரண்டு அந்நியமான வெள்ளைக்காரர்களும் 'Dilla' ல் ஒரு அத்திமர நிழலின் கீழ் மெலிதான ஒரு குடிலை முதலில் போட ஆரம்பித்தவர்கள், பிறகு பளபளக்கிற கூரையுள்ள குடில்களைப் போடுகிறார்கள். இந்தக் குடில்களே அந்த மலைப்பகுதி எங்கும் நிறைந்து போகிறது. இதில் விஷேசம் என்னவெனில் அந்த மெலிதான குடிலையோ, பளப்பளக்கிற குடில்கள் எதையுமே நிஜத்தில் அந்த Wange பார்த்ததே கிடையாது. ஏனெனில் "Gedeo"வில் உள்ள எல்லா வீடுகளின் கூரைகளுமே புற்களால் ஆனது. இச்சமயத்தில் அசிரிரீ போல ஒரு குரல் கேட்டதாம் அவனுக்கு. 

"இந்த வெள்ளைக்கார மனிதர்கள் தாம் நீ தேடிக் கொண்டிருக்கிற MAGANO விடமிருந்து உனக்கு ஒரு செய்தி கொண்டு வருவார்கள். எனவே அவர்களுக்காக காத்திரு".

இந்த தரிசனங்களின் இறுதியில் Wange தானே தன் வீட்டில் நடுவில் உள்ள தாங்கு நடு மரக்கோலை அசைத்து பிடுங்குகிறானாம். அவர்களின் கலாச்சாரத்தில் ஒரு வீட்டின் தாங்கு நடு மரக்கோல், அந்த வீட்டின் சொந்தக்கார மனிதனின் வாழ்க்கையைக் குறிப்பதாகும். பின் அவன் அந்த தாங்கு நடு மரக்கோலைத் தூக்கிக் கொண்டு முன்பு பார்த்த அந்த அந்நிய வெள்ளைக்கார மனிதர்களின் பளபளக்கும் கூரை உள்ள குடில்களுக்கு அருகிலேயே மறுபடி நடுகிறானாம்.

யோசிக்கையில் Wange வுக்கு ஒன்று புரிந்தது, இந்த தரிசனத்தில். அவனுடைய வாழ்க்கை இனி இந்த அந்நிய மனிதர்களின் காரியங்களோடு, அவர்கள் தரும் செய்தியோடு, அவர்களை அனுப்பிய MAGANO கடவுளோடு அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று உணரலானான்.

Wange, வரப் போகிறவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். எட்டு வருஷங்கள் உருண்டோடின. இந்தக் கால இடைவெளியில் அநேக குறி சொல்கிற அவன் இன மக்கள் வந்து, "MAGANO" கடவுளிடமிருந்து அந்நிய மனிதர்கள் வரப்போவதாக அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

1948 டிசம்பரின் ஒரு உஷ்ணமான நாள். ஊழியக்காரர்களான Albert Brantம், அவரின் உடன் ஊழியரான Glen Cainம் தங்களின் பழைய வண்டி ஒன்றில் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் நோக்கம் இந்த "Gedeo" மக்கள் மத்தியிலே, அவரின் மகிமைக்கென்று ஊழியங்களைத் துவங்குவது தான்.
எத்தியோப்பியா அதிகாரிகளிடமிருந்து அனுமதிப் பெற்று, "Gedeo" இன மக்கள் வசிக்கிற அந்தப் பகுதியின் மத்தியில் ஊழியத்தைத் துவங்க நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் நண்பர்களில் சிலர் நிலவுகிற அரசியல் சூழ்நிலையினால் அப்படி அனுமதி கிடைக்காது என்று அறிவுறுத்தி இருந்தார்கள். மாற்று ஆலோசனையையும் இப்படியாகச் சொன்னார்கள். ஊழியம் துவங்க அனுமதி கேட்கும் பொழுது, அந்த மக்கள் இருக்கும் பகுதியில், நடுவில் என்று கேட்காமல், அப்பகுதியின் எல்லையில் ஒரு ஓரத்தில் உள்ள 'Dilla' போன்ற பகுதியில் கேட்கச் சொன்னார்கள். அதற்கு எதிர்ப்பும் அதிகமிருக்காது என்பது அவர்களின் கருத்து.


"அதோ.... அதுதான் 'Dilla' என்று நினைக்கிறேன்" என்றபடி தன் பழைய வண்டியை திருப்பினார் Brant. வந்து சேரும் முன்பே வியர்த்துக் கொட்டியது. "மிகவும் உஷ்ணமாயிருக்கிறது ஆல்பர்ட், எங்கேயாவது நிழல் இருக்கிறப் பகுதியைப் பாப்போம்" என்றபடி அவர் பார்வை தேடியதில், தூரத்தில் இருந்த பெரிய அத்திமரம் தெரிய அதை நோக்கி வண்டியை செலுத்தினார்.

தூரத்தில் ஏதோ வண்டி வருகிற சப்தத்தைக் கேட்டு அப்பகுதியிலிருந்த Wange வந்த பொழுது, அத்திமர நிழலின் கீழ் அந்தப் பழைய வண்டி நின்றிருக்க, அதிலிருந்து கீழே இறங்கி நின்றிருந்தனர் வெள்ளைக்காரர்களான Albert Brantம், Glen Cainம்.

தன் தரிசனத்தை நினைவுக்கூர்ந்தவனாய் Wange பிரமித்துப் போய் அவர்களை நோக்கி நடந்தான்...

மூன்று தலைமுறை (தசாப்தம்) கடந்த பிறகு .......(Three Decades=30 years)

Warassa Wange இப்போது "MAGANO" (கடவுளின்) குமாரனான இயேசு கிறிஸ்துவின் தீவிரமான விசுவாசி. வந்த ஊழியக்காரர்களோடு சேர்ந்து இன்றைக்கு அந்த "Gedeo" மக்களின் நடுவே 200க்கும் மேற்பட்ட திருச்சபைகள் உருவாக காரணமானார். ஒவ்வொரு சபையிலும் 200க்கும் மேற்பட்ட விசுவாசிகள் என்றால் எத்தகையதொரு எழுப்புதல், மாற்றம் என்று யோசித்துப் பாருங்கள். இன்றைக்கு இந்த "Gedeo" மக்களில் பெரும்பாலானவர்கள் ஆண்டவரை அறிந்துக் கொண்டவர்கள்.

இவர்களில் முக்கியமான, பலரும் அறிந்திருக்கிற Dake Seriயும் உண்டு. இவரின் கதை வெகு சுவாரஸ்யமானது. கதைகளில் வரும் வினோத சம்பவங்களைப் போல இவரின் மனமாற்றமும், மெல்ல மெல்ல இவரின் பிற மாற்றங்களும் எனலாம். "Gedeo" மக்களின் மாற்றத்திற்கு மட்டுமன்றி, தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள Guji (Oromo people (or) Oromia Region of Ethiopia) இனமக்களின் மனமாற்றத்திற்கும் காரணமாக இருந்தார். ஆரம்பத்திலேயே மனம் மாறின விசுவாசியாக இருந்த இவர் சபைகளின் முதல் தலைவராகவும் இருந்தார்.

சில மானுடவியலாளர்கள் பொதுவாக சொல்கிற படி 'வானத்திலிருக்கிற கடவுள் தன் செய்தியை கொண்டு வருகிறவர்கள் என்ன செய்தியை சொல்லப் போகிறார்கள் என்று சொல்வதில்லை. ஆனால் சொல்லப் போகிற தூதர்கள் வரப் போகிறார்கள் என்ற செய்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறார்' எனலாம்.

இதில் "KORO" வின் கதை ஆச்சர்யகரமான விதிவிலக்கு. சரி யார் இந்த KORO? ஆப்பிரிக்காவின் பல Bantu மொழிகளில் "KORO" என்றால் 'படைத்தவர்' என்று அர்த்தமாம். இந்த Bantu பழங்குடிகளில் ஒன்றான Mbaka பழங்குடி மக்கள் "KORO"விடமிருந்து செய்தியை தூதர்கள் கொண்டு வர காத்திருந்தது மட்டுமல்ல; அதில் தங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும் கூட நம்பினார்கள்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள சிபியூட் (Sibyut) நகர் பகுதியில் Mbaka இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். ஊழியக்காரரான Eugene Rosenau Ph.D., தன் தகப்பனாராகிய ஊழியக்காரர் Ferdinand Rosenau தன் சகாக்களுடன் இம்மக்கள் நடுவே ஊழியம் செய்ய வந்தபோது (1920) Mbaka இன மக்கள் அதிகமுள்ள Yablangba கிராம மக்கள் எந்த அளவிற்கு செவி சாய்த்தார்கள் என்று சொல்கிற அனுபவங்களை மெய்சிலிர்க்க கேட்டுக் கொண்டிருந்ததாக கூறுகிறார்.

ஒரு தடவை அவரின் Mbaka நண்பர்கள் அவர்களின் கலாச்சாரத்தில் எப்படியாக, சொல்லப்படப் போகிற சுவிஷேசத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி பல காரியங்கள் அமைந்துள்ளது என்பதைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் Eugene சொல்வாராம்...

"உங்களின் Mbaka மூதாதையர்கள், வடக்கு ஐரோப்பாவில் உள்ள எங்களுடைய ஜெர்மானிய மூதாதையர்களை விட அவரின் சத்தியத்திற்கு நெருங்கி இருந்தார்கள்."

சரி. அப்படி என்ன கதைகள்!... இதோ கவனியுங்களேன்.

"KORO எல்லாவற்றையும் படைத்தவர் (அதாவது கடவுள்) நம்முடைய (Mbaka) மூதாதையர்களுக்கு அநேக காலங்களுக்கு முன்பாக சொல்லப்பட்டதாவது... KORO தம்முடைய குமாரனை இந்த சகல மனித குலத்திற்காகவுமே மிகவும் அருமையான, அற்புதமான காரியத்தை நடப்பிக்க இவ்வுலகத்திற்கு அனுப்பினாராம். என்றாலும் நம்மின் இந்த மூதாதையர்கள் KOROவின் குமாரனான அவரின் உண்மைகளுக்கு செவிக்கொடுக்காமல் போனார்கள். அதிலிருந்து, அந்த மறந்து போன காலத்திலிருந்து அதன்பின் வந்த தலைமுறைகள் KOROவின் குமாரனைப் பற்றின (மறந்து போன) உண்மைகளைக் கண்டுபிடிக்க ஏங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் பின் சொல்லப்பட்ட செய்தி என்னவெனில், மறந்து போன அந்தக் காரியங்களைப் பற்றிச் சொல்ல தூதர்கள் வருவார்கள். அவர்கள் அநேகமாய் வெண்மையானவர்களாய் (நம் புரிதலுக்காக வெள்ளைக்காரர்களாய்) இருப்பார்கள்...

எப்படியோ KOROவின் தூதர்கள் இப்படி வரும்பொழுது, அதை தவறி விட்டு விடாமல், நாங்கள் அவர்களை வரவேற்று அவர்கள் தரும் செய்தியை ஏற்றுக்கொள்கிறோம் என்றார்களாம்.

Eugeneன் தகப்பனார் கண்டுபிடித்த இன்னொரு சுவாரசியமான காரியம் என்னவெனில், Yablangba என்று அழைக்கப்படுகிற அந்தப் பெரிய கிராமத்தில் உள்ளவர்களைப் பற்றி 'KORO கடவுளின் காரியங்களை கவனிப்பவர்கள்' என்று சொல்லப்படுவதுண்டாம்.  (இது கொஞ்சம் குறைய ஆசாரியப் பணி செய்ய பணிக்கப்பட்டிருந்த 'லேவி' கோத்திர மக்களைப் போல அல்லது நம் பகுதிகளில் வழிவழியாய் சில கோவில்களில் தொடர்ந்து பூஜை செய்ய சில கிராமங்களின் சில குடும்பத்துக் குருக்களைப் போல விளங்கிக் கொள்ள முற்படலாம்)

சரி. இப்படி அழைக்கப்படுகிற இவர்கள் சுவிஷேசத்திற்கு செவி கொடுத்தார்களாவென்றால் இன்னொரு ஆச்சர்யமான புள்ளி விவரம் உண்டு.

1950களில் Eugene மற்றும் அவரின் சகாக்களினால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்பிரிக்க போதகர்களில் 75லிருந்து 80 சதவீதம் பேர் இதே Yablangba கிராமத்தைச் சேர்ந்தவர்களே!! மட்டுமல்ல, இந்த Mbaka குடிகளின் பழக்கவழக்கங்களில் பல யூத மற்றும் கிறிஸ்துவ (Judeo-Christian) காரியங்களின் சாயலைப் பார்க்கலாம்.

இவர்களின் குழுவில் யாரையாவது சேர்த்துக் கொள்ள, அந்த நபரை நதியில் முழுக்கி விட்டுதான் (நம் ஞானஸ்நானம் போல) சேர்த்துக் கொள்வார்களாம். மட்டுமல்ல இந்த சடங்கிற்குப் பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டவர் குழந்தையைப் போல தான் நடந்துக் கொள்ள வேண்டுமாம், சில நாட்களுக்கு. அதாவது புதிதாய் பிறந்ததைப் போல.

இன்னொரு காரியமும் உண்டு, Mbaka இனத்தினன் ஒருவன் கல்லில் தடுக்கி விட்டால், அந்தக் கல்லை எடுத்து, அதை அபிஷேகம் செய்து இப்படியாக சொல்வானாம். "கல்லே சொல், KOROவாகிய கடவுள் உன்னை பயன்படுத்தி என்னை ஆபத்திலிருந்தோ இல்லை தீமையிலிருந்தோ  காப்பாற்றினாரோ?"

நம் வேதாகமத்தில் உவமையாக வரும், 'இடறுவதற்கு ஏதுவான கல்லாகிய கிறிஸ்துவை' இந்த பழக்கத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறார் Eugene. இப்படியான மேலும் சில பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொண்டு போகலாம்.

பின் நாட்களின் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பல புகழ் பெற்ற தலைவர்கள் இந்த Mbaka இனத்தைச் சேர்ந்தவர்கள் தாம். இதில் முன்னாள் அதிபதி Jean Bedel Bokassa, ஒரு கத்தோலிக்க பாதிரியாராக தன் வாழ்க்கையைத் துவங்கி, பின் அரசியலில் நுழைந்து, பல சாதனைகளைச் செய்து மிகவும் புகழ் பெற்ற முதல் பிரதம மந்திரியான Barthelemy Boganda வரை பலரை சொல்லலாம்.
சமீபத்தில் 'African Fables'  என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் எப்படி அங்கு காலங்காலமாய் வழங்கி வருகிற பழக்கவழக்கங்கள், சொல் வழக்குகள், கதைகளின் பின்னணி சில புரிதலுக்கு கடினமான வேதவசனங்களையும், எவ்வளவு இயல்பாக விளங்கிக் கொள்ள எதுவாக இருக்கிறது என்பதை அழகாக விளக்குகிறார்.

உதாரணத்திற்கு 'கண்ணீரோடு விதைக்கிறவர்கள், கெம்பீரத்தோடே அறுவடை செய்வார்கள்' என்ற வசனம் நம் சூழலில் பார்க்கும்பொழுது அத்தனை பிடிபடுவதில்லை. விதைக்கும் பொழுது சந்தோஷமும், எதிர்பார்ப்புமாய், மகிழ்ச்சியுமாய்த் தானே விதைப்பார்கள் என்று நாம் யோசிக்க வாய்ப்புண்டு.  ஆனால் 'கண்ணீரினூடே விதைக்கிற ஆப்பிரிக்க விவசாயிகள் பற்றின பின்னணிக் கதை, இந்த வசனத்தை எவ்வளவு அருமையாய் அவர்கள் உள்வாங்கி இருக்கக்கூடும் என்பதை உணர்த்த இது ஒரு மாதிரி தான். இப்படி பல, பல சம்பவங்கள், வழக்கங்களை படிக்கிற பொழுது நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.

இவைகளைப் பற்றியெல்லாம் அறிய வரும் பொழுது ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு பெரிய எழுப்புதலுக்கான பின்புலக் காரணங்கள் மனதில் தோன்றி கொண்டிருக்க, நாம் நினைப்பதற்கும், யோசிப்பதற்கும் அதிகமாய் கிரியை செய்துவரும் அவரை மகிமைப்படுத்தாமல் இருக்க முடியுமா  என்ன?...  அல்லேலூயா!

-எட்வினா ஜோனாஸ்

அறியாமலிருக்கும் அற்புதங்கள் - 5


உலகின் பல்வேறு தேசங்களில் உள்ள அறியாமலிருக்கும் அற்புதங்களைப் பார்த்த நாம், இம்முறை ஒரு மாறுதலுக்காக நம் இந்தியாவைப் பற்றி பார்க்கப் போகிறோம்.  ஒரு புத்தகத்தில் இவ்விதமாய் குறிப்பிடப்பட்டிருந்தது.

'ஐரோப்பாவில் பெரும்பாகம் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து, தற்காலத்தில் அதிக நாகரீகம் பெற்றவர்கள் என்று எண்ணப்படுகிற ஆங்கிலேயர், ஜெர்மானியர் போன்றவர்கள் எல்லாம் சாக்கினி தேசக் காடுகளில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த அந்த காலத்திலேயே இந்தியாவில் கிறிஸ்துவ மதம் ஸ்தாபிதமாகி இருந்தது.'

இந்தக் காலம் அநேகமாக முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டாக இருக்க வேண்டும். யோசிக்கையில் ஆச்சர்யம் தான். முதலாவது நூற்றாண்டிலேயே அப்போஸ்தலர் தோமா மூலம் இந்தியாவில் கிறிஸ்துவம் விதைக்கப்பட்டு விட்டது. இந்திய மக்களில் ஒரு பகுதியினர், குறிப்பாக தென்னிந்தியாவில் ஒரு பகுதியினர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை, மெய்யான தேவனை அறிந்துக் கொண்டார்கள் எனலாம். ஒரு அருட்பணியாளர் சொன்னதை போல 'தோமாவின் ஊழியத்தின் விசேஷம் என்னவென்றால், முற்றிலும் அறிந்திராத ஒரு தேசத்தில், வேதாகமமோ அல்லது அது போன்ற வேறு எதுவுமே இல்லாத நிலையில், தன் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள் மூலமாக மட்டிலுமே ஆண்டவரைப் பற்றி அறிவித்திருக்க வேண்டும். இது எத்தனை கடினமான, சவால்கள் நிரம்பின முயற்சியாக இருந்திருக்க வேண்டும் இல்லையா?'
தோமாவின் ஊழியத்திற்கு கனிகள் இருந்ததா? மக்கள் அவர் வார்த்தைகளை, அவர் காட்டின வழியை ஏற்றுக் கொண்டார்களா? ஏற்றுக்கொண்டவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறிப் போயிருந்திருக்க வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு கிடைக்கிற பதில்கள் சுவாரசியமானவை. மட்டுமல்ல, நம் விசுவாசிகளில் பலரும் அறிந்திராதவை என்றும் கூட சொல்ல முடியும். பலர் நினைத்திருக்கிறபடி தோமாவின் ஊழியத்தால் கேரளக் கரையோரத்தில் உள்ள, சென்னையில் உள்ள பலரும் தான் என்றில்லாமல் (அதுவும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் தான் என்றில்லாமல்) வேறு கூட்ட மக்களும் உண்டு. ஒரு பிரசங்கியார் சொன்னதைப் போல கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதையில் வரும் 'சான்றோர்கள்' இப்படியான விசுவாசிகளைத் தான் குறிக்கிறது என்று நாமும் சொல்லாவிட்டாலும் கூட, வித்தியாசமாய் இருந்தார்கள் என்று சொல்ல முடியும். இம்மக்களின் பாடல்களில் அல்லது மற்றவைகளில் ஒருவேளை நேரிடையாக சிலுவை, கிறிஸ்து போன்ற பதங்கள் பிரயோகிக்கப் படாமாலிருக்கக் கூடும். ஆனால் நாம் முன்பாகவே கூறினதைப் போல புதிய ஏற்பாட்டின் நாம் அறிந்திருக்கிற எந்த புத்தகமும் எழுதப்படாததற்கு முன்பாகவே இந்தியா வந்த தோமா ஆண்டவரை மக்களுக்கு வித்தியாசமான வகையில் அடையாளப்படுத்தி அல்லது காட்டி இருந்திருக்கக்கூடும். அது என்னவாக இருந்திருக்கலாம் என்பதை பிறகுப் பார்க்கலாம். 

தோமா தமிழகத்தில் ஊழியம் செய்த பொழுது மக்கள், தமிழ் மக்கள் அவரையும், ஆண்டவரையும் ஏற்றுக் கொண்டார்கள். எனில் அவர்கள் யார்? அதில் முக்கியமான, நமக்குத் தெரிந்தவர்கள் இருக்க வாய்ப்புண்டா என்கிற ஆய்வில் நாம் அறிய வருகிற பதில்கள் வியப்பானவை.


1970களில் தமிழகமெங்கும் 'மெய்பொருள் விழா'க்கள் என்றழைக்கப்படுகிற கூட்டங்கள் நடந்தன. அவைகளில் புலவர் மு.தெய்வநாயகம், "திருக்குறள்" கிறிஸ்த்துவ கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டது என்றும், திருவள்ளுவர் தோமையாரால் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தப் பட்டிருக்க வேண்டும் என்பது பற்றியும் மிகவும் ஆதாரப்பூர்வமாக பேசினார். அவர் கருத்துக்களுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பின பொழுதும், அவர் எழுப்பின கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை தர எவரும் முன்வரவில்லை.

சமீபத்தில்  ஒரு மூத்த ஆயருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தன்னைப் பொறுத்த வரை சமண சமயக் கருத்துக்களை தான் திருக்குறள் பிரதிபலிக்கிறது என்றார். அவர் மட்டுமல்ல, திரு.வி.க,கிறிஸ்துவக் கல்லூரி பேராசிரியரான ச.த.சற்குணன், பேராசிரியர் S.வையாபுரிப் பிள்ளை போன்றவர்களுமே அப்படித்தான் நம்புகிறார்கள். என்றாலுமே இந்தக் கருத்தை அவருடைய 'ஏழு பிறப்பு' என்கிற சிறு நூலில் திட்டமும், தெளிவுமாக மறுக்கிறார் புலவர் மு.தெய்வநாயகம்.

பிறவி சுழற்சிக் கொள்கை, பல பிறப்புகள் போன்ற கொள்கைகளை உள்ளடக்கியது சமண சமயம் என்பது நமக்குத் தெரியும். இவற்றைக் கூறுகிற விதமாய் திருக்குறள்கள் பலவற்றில் வருகிற எழுமை, ஏழு பிறப்பு, பிறப்பறுத்தல், பிறவிப் பெருங்கடல் போன்ற பதங்களை புலவர் எப்படி விளக்குகிறார் என்பதை இப்போது பார்க்கலாம்.

எழுமையையும், ஏழு பிறப்பு என்பதனையும் ஒரே விதமாய் பொருள் கொண்டு, பலர் விரிவுரை எழுதி இருந்தாலும் அவற்றை நுட்பமாய் ஆராய்ந்து இரண்டும் வெவ்வேறு அர்த்தத்தில் வருகிறவை என்கிறார். அதே விதமாக ஏழு பிறப்பு என்பதுமே கூட 'ஏழு' என்பது வேதாகமத்தில் பல இடங்களில் வருகிற 'ஏழு' என்ற எண் எப்படி முழு மைய, நிறைவை அடையாள படுத்துகிறதோ, அதே தன்மையில் தான் குறள்களிலும் வருகின்றனவாம்.

மற்ற இரு பதங்களுமே, அவைகளின் இயல்பான அர்த்தங்களை வைத்து பொருத்திப் பார்க்கிற பொழுது அது சமண சமயக் கொள்கைகளுக்கே அதாவது பிறவி சுழற்சிக் கொள்கைகளுக்கே எதிராக வருவதை தெளிவாக விளக்குகிறார் புலவர்.

(இந்த இடத்தில் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.  ஒரு தமிழ் செய்யுள் பாட விளக்க உரை போல சற்றே கடினமாக நம் கட்டுரை மாறி விடுவதை தவிர்க்கும் பொருட்டு, சுருக்கமான தகவல்களை மட்டும் தந்து கொண்டிருக்கிறோம் என்பதை நம் வாசகர்கள் புரிந்துக் கொள்ள வேண்டுகிறோம்.  என்றும் தமிழ் செய்யுள் பாட சாயல் வருவதை தவிர்க்க இயலவில்லை. மன்னிக்க..!)

இதெல்லாம் சரி, கிறிஸ்துவை அல்லது கிறிஸ்துவக் கோட்பாடுகளை உள்ளடக்கிய நூல் திருக்குறள் என்பதற்கு வேறு ஆதாரம் உண்டோ என்று பார்த்தால், பல உண்டு, குறிப்பாக 'பாயிரத்தை' சுட்டிக் காட்டுகிறார் புலவர்.

பாயிரம் என்றால்? எல்லா இலக்கிய நூல்களின் ஆரம்பத்திலும் 'பாயிரம்' என்று ஒரு பகுதி உண்டு. இது நூல் ஆசிரியர் தாம் வணங்குகிற குருவுக்கோ, பெரியவர்களுக்கோ அஞ்சலி போல எழுதுகிற பகுதி, சமர்ப்பணம் செய்யும் பகுதி என்று சாதாரண மக்கள் விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக பொதுவாக இப்படிச் சொல்லலாம்.

திருக்குறளின் 'பாயிரம்' பகுதியில் நான்கு அதிகாரங்கள் உண்டு.
1.கடவுள் வாழ்த்து,
2.வான் சிறப்பு,
3.நீத்தார் பெருமை,
4.அறன் வலியுறுத்தல்  என்று.
இதில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து சரி நமக்குப் புரிகிறது.  அடுத்த
அதிகாரம் வான் சிறப்பு என்றால் மழையின் பெருமை அல்லது சிறப்பு.
                               நீத்தார் பெருமை =உயிர் நீத்தவர்கள்,
அல்லது பெரியோர்கள் பற்றின சிறப்பு என்று இயல்பாய் இருக்கிற அர்த்தத்தில் பொருள் கொள்வோமெனில், ஒரு கேள்வி எழுகிறது. கடவுள் வாழ்த்துக்கு அதாவது கடவுளுக்கு இணையாக மழையையும், உயிர் நீத்தவர்களையும் எப்படிச் சொல்லி இருக்கிறார், ஏன் சொல்லி இருக்கிறார், எதற்காக என்றெல்லாம் கேள்விகள் வருமெனில், வெளி வந்துள்ள பல விளக்கவுரைகளை பார்க்கும் பொழுது பல முரண்பாடுகள் வருவதை தெளிவாக சுட்டிக் காட்டுகிறார் புலவர். ஆனால் ஒரு மாற்றாக,

வான் சிறப்பு = மழை சிறப்பு = பரிசுத்த ஆவியானவரை மழைக்கு அடையாளமாக சொல்லி, (பரிசுத்த ஆவியானவரின் மழைக்கு அடையாளமாக சொல்லி) பரிசுத்த ஆவியானவரின் சிறப்பு என்றும்,

நீத்தார் பெருமை = நீத்தவர்கள் அல்ல, நீத்தவர், நமக்காக உயிர் நீத்தவர் = தேவ குமாரன் பெருமை என்றும் பொருள் கொண்டு பார்க்கும் பொழுது, எழுப்பப் படுகிற அநேக கேள்விகளுக்கு திருப்தியான பதில்கள் கிடைக்கின்றன.

குறிப்பாக குறள்களில்வருகிற, ஐந்துவித்தான், மூவர் யார் என்கிற பதங்களை சரியான தளத்தில், இந்த கோணத்தில் தான் விளங்கிக் கொள்ள பொருத்தமாகிறது என்று ஆணித்தரமாக உரைக்கிறார் புலவர்.

தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற மொழிப்பெயர்ப்பாளரும், நாவலாசிரியருமான மறைந்த திரு.க.நா.சு. அவர்கள் எழுதிய சரித்திர நாவல் ஒன்றில் தோமையாருக்கும், திருவள்ளுவருக்கும் இருந்த நட்பு பற்றின தகவல்கள் இந்த நேரத்தில் நினைவுக்கூரத்தக்கது. இதற்கும் திரு.க.நா.சு. அவர்கள் ஒரு கிறிஸ்துவர் அல்ல, வெறும் கற்பனை குதிரையை மட்டும் தட்டிவிட்டு எழுதுபவரும் அல்ல.

திருவள்ளுவர் சரி, அதற்குப் பிறகு வந்த மற்றவர்களில் எவரையாவது சொல்ல முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு வரக்கூடும்.

'சித்தர்கள்' என்று தமிழ் மக்கள் அழைக்கிற அநேகர் (முனிவர்களைப் போன்றவர்கள்) தோமாவின் மூலமாகவும், அதற்குப் பின்பாகவும் ஆண்டவரை அறிந்துக் கொண்டார்கள் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு.

அநேகம் சித்தர் பாடல்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். உருவ வழிபாடும், சிலை வழிபாடும், பல தெய்வ வணக்கமும் ஏதேதோ சடங்கு, சாக்கியங்களும், பூஜை புனஸ்காரங்களும் இருந்திருந்த அந்தக் காலத்தில், அந்த சூழலில் இந்தப் பாடல்கள் அதற்கு எதிராக இருக்கின்றன என்பது எத்தனை வியப்பான விஷயம் அல்லவா? உதாரணத்திற்கு ஒரு சில பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

இதோ 'சிவ வாக்கியார்' எழுதின இரு பாடல்கள்!
"கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குராமரே,
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே!
ஆவதும் அழிவதுவும் இல்லை இல்லை இல்லையே...."(30)
"அழுக்கற தினங்குளித்து அழுக்கறத மாந்தரே 
அழுக்கிருந்தது எவ்விடம், அழுக்கில்லாதது எவ்விடம் 
அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் 
அழுக்கில்லாத சோதியோடு அணுகி வாழல் ஆகுமே" (201) 
எஸ்.தாயப்பன் என்பவர் எழுதின "சித்தர்கள் கண்ட மெய்ப் பொருள்" என்ற சிறுநூலில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான அகத்தியரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, "அவர் மெய்யான தேவனை உணர்ந்து திருவருள் வயப்பட்டு அவரால் ஆட்கொள்ளப்பட்டு, ஞானம் பெற்று, தான் பெற்ற பேரின்ப ஞானத்தை, கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புரட்டி" என ஔவை கிழவி பாடியதைப் போல் பரம் பொருளான இறைவனே அவரிடம் உரைத்தபடி ('அகத்தியர் ஞானம்') என்று முப்பதே பாடல்களில் சுருக்கிப் பாடியுள்ளார்" என்கிறார்.

இப்பாடல்களில் ஒரு சில பாடல்களைப் பார்க்கலாம், எத்தனை நேர்த்தியாக வேதாகமக் கருத்துக்கள் இப்பாடகளில் தொங்கி நிற்கிறது பாருங்கள்.

அகந்தையில் தேவதூதர் விழுந்து போன கதை நமக்குத் தெரியும். அதைச் சொல்கிறது இப்பாடல். இதை படிக்கும் முன்பாக ஏசாயா 14: 12 - 14 வசனங்களையும், யூதா எழுதின நிருபத்தின் 6 வது வசனத்தையும் ஒரு முறை படிக்கவும்.
"தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்."
அகத்தியர் ஞானம் : பாடல் 9
"அலகையது தேவனுக்குச் சரியாய் நின்று,
ஆங்காரம் தானெடுத்து அகந்தையாலே,
நிலை குலைந்து பாதாளக் குழிக்குள் நின்று,
நித்தியமும் மானிடரை மோசம் போக்கி,
பல கலையும் உணர் அறிவை மயக்கித் தங்கள்
பாதாள வீடதிலே பதுங்கச் செய்யும்
நிலையதுவை அறியாமல் போனார் போனார்
நினைத்துப் பார் புலத்தியனே நிசமாய்த்தானே..."
நிச்சயம், இது சித்தர் பாடல் தானா இல்லை சமீபத்தில் எவராவது எழுதியதோவென்று ஒரு கணம் சந்தேகம் வந்து போயிருக்கக்கூடும். அகத்தியரின் இன்னொரு பாடலையும் பார்க்கலாம். தேவன் சகலத்தையும் உண்டாக்கினதில் இருந்து பின் மனு உருவில் வந்ததை சொல்கிறது இது.

அகத்தியர் ஞானம் (15)
"வணங்குவாய் செகசோதி ஒருவனாகி மானிலத்தை
ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின்பு குவலயத்தில்
தான் உதித்துக் குருவாய் வந்து
சனமான சமுசாரம் ஒன்று இல்லாமல் சன்னியாசி போல்
இருந்து தவத்தைக் காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப் போட்டு அகண்டதவம்
சென்றவரை அண்டுவாயே..."
திரித்துவத்தைப் பற்றி திரி ஏக தேவனைப் பற்றிய பாடல் இது.  பல தெய்வ வணக்கங்கள் உள்ள சூழலில், ஆண் /பெண் தெய்வங்கள் என்றெல்லாம் உள்ள சூழலில்,  இப்பாடலின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

அகத்தியர் ஞானம் பாடல் : 20
"முச்சுடராம் ஒன்றாம் மும்மூர்த்தியல்ல;
மூவருமே ஆளுயரம் ஒன்றேயாகும்.
அச்சுதா இவர்களுமே ஆண், பெண் அல்ல;
அரனும் அல்ல; இலிங்கம் அல்ல; அநாதியான
சச்சிதானந்தனையே வணக்கம் செய்து
சற்குருவைத் தரிசித்து சரண் பற்றி,
எச்சரிக்கை கொண்டு நட அப்பா! அப்பா
எண்ணிலா முத்திவழி எய்துவாயே."
சரி வேறு சித்தர்களின் பாடல்கள், இவ்விதமான கருத்துக்களோடு உண்டா என்றால் நிறைய உண்டு. அதிலும் சிலவற்றை பற்றி மட்டும் பார்க்கலாம். இதோ குருவின் (கடவுளின், ஆண்டவரின்) பாதம் மட்டுமே பற்றிக் கொள்ள வலியுறுத்தும் பாம்பாட்டி சித்தரின் பாடல்.
"பொய் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளிம்பும்
மெய்க் குருவின் பாதம் போற்றி ஆடாய் பாம்பே..."
புராண புருஷர்கள் எல்லாம் வெறும் மனிதர்கள் தாம் என்று சொல்லும் சித்தர் திருமூலரின் பாடல்.
"பல கலைகளோ துவகை நாலுந்தானும்பண்ணியதோர் நால் வேத மாறு சாஸ்திரம் அலையுடனே தத்துவங்கள் தொண்ணுற்றலும் அவைகளிலே பொய் களவு அதர்மஞ்சேரும் மலையரசன் சிவன், பிரம்மா, விஷ்ணு தானும் மாசில்லா நாதருட வழியுங் காணார் நிலை பெருக மோட்ச வழி காணாததாலே நீதியற்ற மனிதரென்று நிகழ்த்தினோமே..."
இன்னொரு சித்தர் பாடல் உக்கிரமாகச் சொல்கிறது
"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பஞ் சாத்து றீர்
சுத்தி வந்து முணுமுணுவென்று சொல்லு மந்திரமேதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்டச் சட்டி சட்டுவங்கறிச் சுவை யறியுமோ?
மாறுபட்ட மணி கிலுக்கி மலரிறைத்து வீணிலே
உறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே
வேறுபட்ட தேவரும் விரும்புகின்ற உண்மையுங்
கூறுபட்டதேது காண் குருக்கள் பூசை பண்ணுகிறீர்"
இப்படி சொல்லிக் கொண்டே போகமுடியும். 'சித்தர் பாடல்களும், கிறிஸ்தவமும்' பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் மைக்கேல் பாரடே இன்னும் விவரங்களை தரக்கூடும்.  ஆனால் நம் கட்டுரையின் நேரடியான நோக்கம் அதுவல்ல. தோமாவின் ஊழியத்தின் கனிகளாய் இருந்த இவர்கள் இவர்களைப் போன்றிருந்தவர்கள் என்னவானார்கள் என்பது இன்னொரு கட்டுரை எழுத வேண்டிய அளவிற்கான விஷயம். சாது செல்லப்பா அவர்களின் குறுந்தகடு ஒன்றில் அவர் பேசும்போது இப்படி குறிப்பிடுகிறார், 'சுவாமி விவேகானந்தர் எழுதிய ஞானதீபம் என்ற புத்தகத்திலே நான் படித்தேன், முதல் நூற்றாண்டிலேயே இந்தியாவிலே 33,000 கிறிஸ்துவர்கள், அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் இருந்தார்களாம்.' என்று.



அவர்களின் நம்பிக்கைகளில் எப்படி பின்பு வந்த ஆரியர்களின் தலையீடு, பாதிப்பு எல்லாவற்றையும் மாற்றி திசை திருப்பிப் போட்டது பற்றி பல ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. இது ஒரு பக்கமிருக்கட்டும்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் எழுப்பின கேள்விகளுக்கு, அதாவது தோமா எப்படியாக ஆண்டவரை பற்றின நற்செய்தியை என்ன விதமாய் வைத்திருக்க முடியும் என்பதை சில பதிவுகளைக் கொண்டு யூகிக்க முற்படலாம்.


'தோமா எழுதின சுவிஷேசம்' என்ற புத்தகம் பற்றி நம்மில் ஒரு சிலர் கேள்விப்பட்டிருக்கக் கூடும். முன்பாக இதன் சில பகுதிகள் மட்டுமே ('OXYRHYNCHUS' என்ற தொகுப்பில் இருந்தன)  நமக்கு முன்பாகவே கிடைக்கப் பெற்றிருந்தாலும், 1945ம் வருடம் எகிப்து தேசத்தில் உள்ள நாக் ஹம்மாடி (NAG HAMMADI) யில் தற்செயலாய் கிடைத்த ஒரு பெரிய பானை ஒன்றில் கிடைத்த ஏராளமான பாப்பிரஸ் பிரதிகளில் (PAPYRUS MANUSCRIPTS) இந்த தோமாவின் சுவிஷேசமும் முழு அளவில் கிடைத்தது.





பலர், இது மற்ற சுவிசேஷங்களுக்கு முன்பதாகவே எழுதப்பட்டிருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள், 114 வசனங்களைக் கொண்ட இந்த சுவிஷேசத்தில் பல பகுதிகள், குறிப்பாக உவமைகள், நம்மின் ஒத்திசைவு சுவிசேஷங்களுக்கு இணையாக இருந்தாலுமே நம் வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் வேறு பல்வகை காரணங்களுக்காக சேர்க்கப்படவில்லை. அநேக பண்டிதர்கள் தோமாவின் சுவிசேஷத்தின் பல பகுதிகள், அங்கீகரிக்கப்பட வேண்டிய அளவிற்கு சிறப்பாக இருக்கின்றன என்கிறார்கள்.

தோமாவின் சுவிசேஷத்தையும், யோவானின் சுவிஷேசத்தையும் ஒப்பிட்டு பலர் ஆய்வு செய்துள்ளனர் என்பது இன்னொரு விஷேசம். (ஒப்பிடுதல்) காரணம் என்னவெனில் இரண்டிற்கும் பொதுவான இறையியல் அடிப்படை உண்டு என்பது தான். (வித்தியாசங்கள் உண்டு, வேறு பலவற்றில்)  இதில் நமக்கு பயன்படுகிற ஒன்றை மட்டும் பார்ப்போம்.

இருவருமே ஆண்டவரை வெளிச்சமாக ஒளியாக பார்க்கிறார்கள்.  யோவான் முதலாம் அதிகாரம் 1 - 9 வசனங்களில் இயேசு 'ஒளி'யாக அறிமுகப்படுத்தப் படுகிறார். யோவான் ஸ்நானனைப் பற்றிக் கூறும்பொழுது "அவன் அந்த ஒளியல்ல. அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தவன்" என்கிறார். பின் 9வது வசனத்தில் எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியே அந்த மெய்யான ஒளி என்கிறார். பிறகு யோவான் 8:12ல் இயேசு ஜனங்களை நோக்கி "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" என்றார். யோவான் 1:3ல் "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" என்கிறது.
இதே கருத்தை பிரதிபலிப்பதைப் போல தோமா சுவிஷேசத்தின் 77வது வசனம் இப்படியாகச் சொல்கிறது, இயேசு சொல்கிறார்
'எல்லாவற்றின் மேலும் பிரகாசிக்கிற ஒளி நானே. நான் எங்குமிருக்கிறேன். என்னிடமிருந்தே எல்லாம் உண்டானது, என்னிடமே எல்லாம் திரும்பும்...'

இவைகளை எல்லாம் நாம் இப்போது எதற்கு பார்க்கிறோம் என்றால், தோமா ஆண்டவரை ஒளியாக, வெளிச்சமாக, அறியாமை, தீமை என்ற இருளிலிருந்து விடுவிக்கிறவராயும் அந்நாட்களில் மக்களுக்கு முன் வைத்திருக்க வேண்டும். இருள் நிறைந்த எல்லாவற்றிலிருந்தும் விடுதலை தருகிறவராய் ஆண்டவரை பற்றி உள்வாங்கிக் கொண்டதாலோ என்னவோ பல சித்தர் பாடல்களில் ஆண்டவரை சோதியாக, ஒளியாக, வெளிச்சமாக உருவகிப்பதைப் பார்க்க முடிகிறது. தங்களை இத்தகைய இருள்களிலிருந்து மீட்டுக் கொள்கிறவராயும், உருவமற்றவராயும் பார்க்க முடிந்திருக்கிறதோ என்று நாம் யூகிக்க இடமிருக்கிறது.

இக்காரியங்கள் நமக்கு திரும்பத் திரும்ப உணர்த்துகிற காரியங்களில் ஒன்று, அவரின் வழிகள் அற்புதமானவைகள், ஆராய்ந்து முடியாதவைகள்.
-எட்வினா ஜோனாஸ் 

Saturday, October 10, 2015

அறியாமலிருக்கும் அற்புதங்கள் - 4


நான்காம் அமென்ஹோடப் (Amenhotep IV) அல்லது அக்கநேட்டன் (Akhenaten) என்று அறியப்பட்டிருக்கிற எகிப்து தேசத்தின் ராஜாவாகிய பார்வோன் கி.மு.14ம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற ஒரு வித்தியாசமான ராஜா என்று சொல்லலாம். 
கொஞ்சம் குறைய 17 வருஷங்களே ஆட்சி செய்திருந்த இவர் எப்படி மற்ற, நீண்ட காலம் ஆட்சி செய்த எகிப்திய பார்வோன்களை விட, இப்போதும் பேசப்பட்டு வருகிறார் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

நம்மில் பலரும் ஒரு சமயம் அறிந்திருக்கிறபடி பல தெய்வ வணக்கங்களுக்குப் பெயர்போன எகிப்திய பார்வோன்கள் மத்தியில், இவர் மட்டுமே திடுமென 'ஒரே தெய்வக் கோட்பாட்டை' (First Monotheist) முதலாவது கொண்டு வந்து புரட்சி செய்தவர் என்று அனேக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

நம் முந்தைய வலை பதிவில் அறியாமலிருக்கும் அற்புதங்கள்-3ல் நாம் பார்த்த இன்கா அரசன் (பஷுகூட்டி - சரியான உச்சரிப்பு) பச்சா குட்டி எவ்வாறு 'இண்டி' யின் வணக்கத்தை கேள்வியாக்கி சகலத்தையும் படைத்த கடவுளை நோக்கித் திரும்பினார் என்பதற்கான பின்னணியை நாம் பார்த்தோம். அதே விதமாக இந்தப் பார்வோனின் மாற்றத்திற்கான பின்னணிக்குள் நாம் பயணிக்க முயற்சிக்கப் போகிறோம்.


ஆனால் அதற்கு முன்பாக இந்தப் பார்வோனைப் பற்றி வலைத் தளங்களிலும், மற்ற பல பதிவுகளிலும் தற்போது கூறப்பட்டு வருகிற ஒரு காரியத்தை மறுத்துவிட்டு, நம் பயணத்தை தொடரலாம்.
பெரும் புகழ்பெற்ற உளவியலாளர் சிக்மண்ட் ப்ராய்ட் (Sigmund Freud) இந்த பார்வோனைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவரின் புரட்சிகர மத சீர்திருத்தங்களைப் பற்றி (Religious views of Sigmund Freud) கூறும்பொழுது சொல்கிறார்,  'இந்த பார்வோனுக்கு அனேக வருஷங்களுக்கு பிறகு வந்த மோசே வெளியிட்ட ஒரே பரம தெய்வத்திற்கான "யாவே" (יהוה) கோட்பாட்டின் உந்துதலை அநேகமாக இந்த அக்கநேட்டனிடமிருந்து தான் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்' என்று. ப்ராய்ட் மட்டுமல்ல இன்னும் பல பெரிய அறிஞர்களின் யூகங்களும் இப்படியாகவே இருக்கின்றன. இவ்விதமாக பதிவுகளும், கூற்றுகளும் இருப்பதற்கு முக்கிய காரணமொன்று உண்டு. 

இஸ்ரவேல் மக்கள் மோசேயின் தலைமையில் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட வருஷம் கி.மு.1250, அதாவது கி.மு.13ம் நூற்றாண்டில் தான் என்று நினைத்துக் கொண்டிருப்பதுதான்.  (இதைப் பல கிறிஸ்தவ அறிஞர்களுமே ஆதரிக்கின்றனர் என்பது வேறு விஷயம்) நம்மின் இந்த எகிப்திய பார்வோனின் காலகட்டம் கி.மு.1350-1334 (சில ஆசிரியர்கள் கி.மு. 1381-1366) என்பதால் ஏறக்குறைய நூறு வருஷங்களுக்குப் பின்பாக வந்த அதாவது (கி.மு. 1250 களில்) மோசே, இந்த பார்வோனின் புரட்சிகரமான, அதுவரை எவருமே கூறியிராத ஒரே தெய்வ கோட்பாட்டை, தான் கூறின ஒரே தெய்வத்திற்கான இஸ்ரேலின் தெய்வமாகிய "யாவே" (יהוה)யின் கோட்பாட்டிற்கான அடிப்படையாகக் கொண்டிருந்தார் என்று சொல்வதும் இயல்புதான்.


ஆனால் உண்மை என்ன? மோசேயின் தலைமையில் இஸ்ரேல் ஜனங்கள் எந்த வருஷம் விடுதலை அடைந்தார்கள்? அதை, எதை வைத்து சரியாக கண்டுகொள்ள முடியும்? என்று கேள்விகள் எழும்பலாம்.


விடை வேதாகமத்தில் உள்ள குறிப்புகளிலிருந்தே நமக்குக் கிடைக்கிறது. 1இராஜாக்கள் 6: 1ல் 

'இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480ம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான 4ம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.' 
And it came to pass in the four hundred and eightieth year after the children of Israel were come out of the land of Egypt, in the fourth year of Solomon's reign over Israel, in the month Zif, which is the second month, that he began to build the house of the LORD.   1king 6;1 (kjv)
וַיְהִ֣י בִשְׁמֹונִ֣ים שָׁנָ֣ה וְאַרְבַּ֣ע מֵאֹ֣ות שָׁנָ֡ה לְצֵ֣את בְּנֵֽי־יִשְׂרָאֵ֣ל מֵאֶֽרֶץ־מִצְרַיִם֩ בַּשָּׁנָ֨ה הָרְבִיעִ֜ית בְּחֹ֣דֶשׁ זִ֗ו ה֚וּא הַחֹ֣דֶשׁ הַשֵּׁנִ֔י לִמְלֹ֥ךְ שְׁלֹמֹ֖ה עַל־יִשְׂרָאֵ֑ל וַיִּ֥בֶן הַבַּ֖יִת לַיהוָֽה׃
מלכים א 6:1
என்று வருகிறது.

சாலொமோன் ஆலயத்தைக் கட்டிய வருஷம் கி.மு.960 என்பது பதிவாகி உள்ள ஒரு விஷயம். இதை அனைவருமே ஏற்றுக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் இஸ்ரேல் ஜனங்கள் விடுதலையான வருஷம் கி.மு.960 + 480 = கி.மு.1440 என்றாகிறது. அதாவது கி.மு.1440 வருடத்தைக் கொண்டிருக்கிற கி.மு. 15ம் நூற்றாண்டு, அதாவது மோசே வாழ்ந்த காலம்.


இந்தக் கணக்கு எகிப்து தேசத்தின் சரித்திர வருஷங்களோடு ஒத்துப்போகிறது என்பது இன்னொரு சுவாரஸ்யம்.  விக்டர் பியர்ஸ் என்கிற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியும், இறையியலாலருமானவர் எழுதின 'Evidence for truth; Archaeology', என்ற புத்தகத்தில், Ungers list of Bibilical dates-ல் இப்படி ஒத்துப்போகிறவைகளை ஆபிரகாமின் காலத்திலிருந்து சாலமோன் காலம் வரை தந்திருக்கிறார். அதிலிருந்து ஒன்றிரண்டை மட்டும் இப்போது பார்க்கலாம்.


ஆதியாகமத்தில் யோசேப்பு எகிப்திற்குப் போய் அதன் பிரதம மந்திரியான பிறகு இஸ்ரேல் புத்திரர்களை அழைத்துக் கொண்டது நமக்குத் தெரியும். யாத்திரையாகமமுமே எகிப்துக்குப் போன இஸ்ரவேலர்களின் பெயர்களுடன் தான் துவங்குகிறது.  


யாத்திராகமம் 1;8 வது வசனத்தில், 'யோசேப்பை அறியாத புதிய ராஜா ஒருவன் எகிப்தில் தோன்றினான்' என்று வருகிறதல்லவா. இது கி.மு.1570ல் ஆட்சிக்கு வந்த 18வது அரச குலத்தை அல்லது ராஜ பரம்பரையைச் சேர்ந்த முதல் ராஜா அல்லது பார்வோனைக் குறிக்கிறது எனலாம்.  இந்த முதல் பார்வோனை காமோஸ் (அ) முதலாம் துட்மோஸ் (Komose or Thutmose I) என்று எகிப்திய சரித்திரம் அழைக்கிறது. இவருக்கு முன்பாக எகிப்தியரல்லாதவர்களே, அதாவது அந்நிய தேசத்தவர்களே பார்வோன்களாக ஆட்சி செய்து வந்து முடிவு பெற்று, முதல் தடவையாக எகிப்தியரான காமோஸ் பார்வோனாகிறார். ஆக மண்ணின் மைந்தரான இந்த முதலாம் துட்மோஸ்க்கு பலுகிப் பெருகி வரும் இஸ்ரேல் ஜனங்களின் மேல் எரிச்சலும், அவநம்பிக்கையும், பயமும் வந்தது இயல்பானதல்லவா. 

இதை யாத்திராகமம் முதலாவது அதிகாரத்தில் நாம் தெளிவாகப் பார்க்கிறோம். இந்த பார்வோனுக்கு ஒரு குமாரத்தி இருந்தாள். அவளின் பெயர் ஹேட்ஷீப்ஸ்ட் (Hatshepsut). இவளே யாத். 2வது அதிகாரத்தில் வருகிற பார்வோன் குமாரத்தி. இவள் மோசேயை நைல் நதியிலிருந்து எடுத்து, அவனை ஒரு ராஜகுமாரனாகவே வளர்க்கிறாள். இன்னும் சில விவரங்களை வைத்து கணக்கிட்டு மோசே பிறந்த வருஷம் கி.மு. 1520 ஆக இருக்கலாம் என்கிறார்கள். இந்த கணிப்பு பின் வரும் பல சரித்திர வருஷங்களின் விவரங்களோடு ஒத்துப்போகிறது. குறிப்பாக பார்வோன் குமாரத்தி மரித்தபிறகு பதவிக்கு வந்த 3ம் துட்மோஸின் ஆட்சி காலத்தில் 
1.மோசே 40 வயதளவில் ஒரு எகிப்தியனை கொலை செய்ததினிமித்தம் இந்த 3ம் துட்மோஸ்க்கு பயந்து மீதியனுக்கு ஓடிப் போனது,2.பின் 80 வயதளவில் திரும்பி வரும்பொழுது, (உன்னை கொல்ல தேடினவர்கள் இறந்து போனார்கள்) (யாத் 4: 19) என்று ஆண்டவர் சொல்லிய பிறகு ...
போன்ற  வசனங்களிலிருந்து பார்வோன் 3ம் துட்மோஸ் மரித்த வருடம் (1450), 2ம் அமென்ஹோடப் (Amenhotep II) ஆட்சிக்கு வந்த வருடம் (1450) போன்றவைகளை குறிப்பிடலாம். 

ஆக, நாம் பார்த்தவைகளை வைத்து சில உண்மைகளை இவ்வாறாகத் தொகுக்கலாம். 


மோசேயின் காலம் கி.மு. 1520 - 1400 (120 ஆண்டுகள்) இஸ்ரவேல் ஜனங்களின் விடுதலை கி.மு. 1440 எனில், நம் புரட்சிகர பார்வோன் அக்கநேட்டாவின் காலம் கி. மு. 1350 - 1334. எனவே 100 வருஷங்களுக்கு முன்பாக வாழ்ந்த மோசேயின், இஸ்ரவேல் ஜனங்களின், கர்த்தராகிய "யாவே" (יהוה)யின் கோட்பாடுகள், கருத்துகளின் பாதிப்புகள் இந்த பார்வோனின் 'ஒரே தெய்வ' வழிபாட்டிற்கு திரும்பினதின் உந்துதலாக இருக்க வேண்டுமே தவிர, இருந்திருக்க வாய்ப்பே தவிர அதற்கு எதிர்மறையாக அல்ல.


நல்லது. பல தெய்வ வணக்கங்களில் ஊறிப் போன பார்வோன்களிலிருந்து இவன் மட்டும் திசை மாறினது, எந்த காரணங்களால் இருக்க முடியும் என்று வியப்புடன் நினைக்கிறீர்களா? மறுபடியும் அந்த சரித்திர அகழ்வுகளுக்குள் போய் தேடிப் பார்க்கலாம்.


உலகப் புகழ் பெற்ற எகிப்தின் அதிசயங்களான பிரமிடுகளைப் போல புகழ் பெற்றது ஸ்பின்க்ஸ் சிலை (The Sphinx). சிங்க உடலும், பார்வோனின் தலையுமாய் உள்ள அந்த பிரமாண்ட சிலையைப் பற்றித் தெரியாதவர்களே இருக்காது என்பார்கள். அந்த சிலையின் பாதங்களுக்கருகே உள்ள மணல் பகுதியை சுத்தப்படுத்தும் பொழுது சிவப்பு கிரானைட் கல்லினால் ஆன கல்வெட்டு பதிந்திருப்பது தெரிய வந்தது. அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்களின் சாராம்சம் என்னவெனில் 'அரச பதவிக்கு வந்திருக்க வேண்டியவன் இல்லாமல் போனதால் அவனுக்கு இளையவன் ஆச்சரியமான விதத்தில் ஆட்சிக்கு வந்தான்' எனலாம்.

மேல் பார்வைக்கு இது வெகு சாதரணமான செய்தி போலிருந்தாலும், இதன் பின்பாக உள்ள சம்பவங்களை ஒரு அற்புத கோர்வைகளைப் போல அமைந்திருப்பது தான் வாழ்வின் வினோதம். மட்டுமல்ல, இந்த கல்வெட்டு, வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருகிற சம்பவத்திற்கு, இன்னொரு மறைமுகமான ஆதாரமென்பது ஆச்சரியம்தான்.


எப்படியென்று பார்க்கலாம். இஸ்ரேல் ஜனங்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக நடந்த வாதைகளைப் பற்றி நமக்குத் தெரியும். அதில் கடைசி வாதையான, 'தலைச்சன் பிள்ளைகளை' கர்த்தர் அடித்த வாதை தான் மிகக் கடுமையானது. தேவனுடைய கரத்தின் செயல்பாட்டை அப்போதைய பார்வோனை புரிந்து கொள்ள வைத்த ஒன்று. மற்ற வாதைகளுக்கெல்லாம் வியாக்கியானம் சொன்ன, சிலவற்றுக்கு பதிலும் செய்த எகிப்திய மந்திரவாதிகளாலேயே புரிந்து கொள்ள முடியாமல், நடுங்கிப் போக வைத்த ஒன்று ஆகும். அந்த வாதையைப் பற்றி ஆண்டவர் சொல்கிற சாட்சியைப் போல இந்த கல்வெட்டு அமைந்திருக்கிறது எனலாம்.


என்னதிது, புதிர் போலவே அல்லவா இன்னும் இருக்கிறது என்று நம் வலைபதிவு வாசகர்கள் குழம்பி இருக்கலாம். இதோ கல்வெட்டு வந்த கதைக்குள் போகலாம்.


இந்த கல்வெட்டை நிறுவியது எகிப்திய பார்வோன்களில் ஒருவனாகிய 4ம் துட்மோஸ் (Thutmose IV) இவன் 2ம் அமென்ஹோடப்பிற்கு (Amenhotep II) பின்பு ஆட்சிக்கு வந்தவன். இந்தக் கட்டுரையில் சற்று முன்பாக மோசே இஸ்ரேல் ஜனங்களை விடுவிக்க முயற்சித்த பொழுது இந்த பார்வோன் தான் ஆட்சியில் இருந்தவன் என்று குறிப்பிட்டது நினைவிருக்கக் கூடும். ஆக இந்த பார்வோன் தான் பிறகு விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் ஜனங்களை செங்கடல் பகுதிக்குப் பின் தொடர்ந்து சென்று செங்கடலில் மூழ்கியவன்.


அதற்கு முன்பாக அவனுக்குப் பிறகு பார்வோனாக வரவேண்டிய இளவரசன் 'தலைச்சன் பிள்ளைகளை' பலி வாங்கிய கடைசி வாதையில் மரித்துப் போயிருந்தான் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். எனவே கடலோடு போய்விட்ட பார்வோனை அடுத்து பார்வோனாக ஆனவன் தான் இந்த 4ம் துட்மோஸ். சரி. இப்போதும் ஒரு கேள்வி எழக் கூடும். வழக்கமாக எல்லா அரச குலங்களிலும் நிகழக்கூடிய ஒன்று போலதானே அது இதிலென்ன, கல்வெட்டில் பொறிக்கிற அளவிற்கு விசேஷம் என்று... சந்தேகம் இன்னும் இருக்கலாம்.


காரணம் என்னவெனில், அனேக வருஷங்களுக்கு முன்பதாக, அதாவது இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையாவதற்கு முன்பு, இந்த 4ம் துட்மோஸ் ஸ்பிங்க்ஸ் சிலை இருக்கும் பாலைவனப் பகுதியில் வேட்டையாடப் போன பொழுது, மிகவும் களைத்துப் போனவனாய், ஸ்பிங்க்ஸ் சிலை நிழலில் படுத்து தூங்கிவிட, அவன் கனவில் சூரிய தேவன் சார்பாக வந்த ஸ்பிங்க்ஸ் பேசியதாம். அதாவது ஒருநாள் இந்த 4ம் துட்மோஸ் பார்வோனாகப் போகிறான் என்றும், அப்படி ஆகும்பொழுது மறவாமல் அதை நினைவுகூற வேண்டுமென்றும்.


எழுந்த துட்மோஸ்க்கு இது புரியவில்லை. தற்போது நன்றாக ஆட்சி செய்து வருகிற பார்வோனுக்கோ அப்படியொன்றும் வயதாகவில்லை. அவனுக்குப் பிறகு ஆட்சிக்கு வர பட்டத்து இளவரசன் தயாராக இருக்கும்பொழுது, இது எப்படி சாத்தியமாக முடியும். மட்டுமல்ல. மூத்த குமாரனும், பட்டத்து இளவரசனின் தாயுமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் தானோ, தன் தாயோ அப்படி அல்ல. இப்படி பாதி ராஜ வம்சப் பிறப்பாகிய தான் பார்வோனாக வர சாத்தியமே என்றெல்லாம் யோசித்தான்.


ஆனால் நடந்த சரித்திரம் நமக்குத் தெரியுமல்லவா. துட்மோஸ், 4ம் துட்மோஸாக பார்வோனாகி விட, தனக்கு வாக்கு சொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து, ஸ்பிங்க்ஸ் சிலையின் பாதத்தருகிலேயே, அந்த கல்வெட்டை பதிப்பித்தான். இன்று அதுவே 'தலைச்சன் பிள்ளைகள்' மரித்துப் போன கடைசி வாதைக்கு நிரந்தர சாட்சியாக இன்றுமிருக்கிறது.


இந்த சாட்சியில் 4ம் துட்மோஸ்க்கு பின் பார்வோன் ஆன மூன்றாம் அமென்ஹோடப் (Amenhotep III) மாறினானோ இல்லையோ, அவனின் மகனான, அடுத்த பார்வோனான நம் கட்டுரையின் நாயகனான நான்காம் அமென்ஹோடப் (Amenhotep IV) என்ற பெயரை அக்கநேட்டன் (Akhenaten) என்று மாற்றிக் கொண்ட பார்வோன் மாறியிருக்கக் கூடும் என்று நம்ப இடமிருக்கிறது எனலாம். ஒருவேளை கல்வெட்டின் பின்னணி கதை நம் பார்வோனை யோசிக்க வைத்திருக்கலாம்; இஸ்ரேலை வழிநடத்தின தேவனைப் பற்றி, வாதைகளை அனுப்பி வைராக்கியமாய் தம் ஜனங்களை மீட்டுக் கொண்ட மகா பெரிய 'யாவே'யைப் பற்றி சிந்தித்திருக்கவும் கூடும். எப்படியெனில் இதற்கு பல நிகழ்வுகளை உதாரணங்களாகச் சொல்லலாம்.

பல தெய்வ வணக்கத்தை முற்றிலுமாகத் துறந்துவிட்டு, ஒரே தெய்வ வழிபாட்டை தீவிரமாகப் பின் பற்றத் துவங்கினான். 'அமொன்' (Amon) என்ற தெய்வத்தின் பெயரைச் சேர்த்து இருந்த தன் பாரம்பரிய பெயரைத் துறந்துவிட்டு, 'Aten' கடவுளின் தாசன் என்ற விதத்தின் பொருள்படும்படியான (Akhenaten) 'அக்கநேட்டன்'  என்று மாற்றிக் கொண்டான். இஸ்ரேல் ஜனங்களின் ஆண்டவரைப் பற்றி, நம் பார்வோன் நிச்சயம் அறிந்திருக்க முடியும் என்பதை எதினால் நாம் அறிந்து கொள்ளலாமெனில், ஒரு சரித்திர நிகழ்வு உண்டு.
நம் பார்வோனின் பின் நாட்களில், நைல் நதியோரம் உள்ள (Amarna) 'அமர்னா'வில் தன் புதிய தலைநகரை மாற்றிக் கொண்டான். அந்தப் பகுதியிலிருந்து பின் நாட்களில் அனேக களிமண் பதிவுகள் (Tablets) கண்டெடுக்கப் பட்டன. அந்தப் பதிவுகளில் இருந்து ஏராளமான புதிய தகவல்களை, அக்காலச் சூழல், சம்பவங்கள் மற்றும் பல காரியங்களைப் பற்றி அறிய வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு பதிவுகளில் ஒன்று இச்சம்பவத்தைச் சொல்கிறது. 
 
இஸ்ரேல் ஜனங்களின் படையெடுப்பை எதிர்க்க உதவும்படி கானானியர்கள் நம் பார்வோனிடம் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி உதவாவிட்டால் எல்லாவற்றையும் இந்த இஸ்ரவேலர்கள் ஜெயித்து விடுவார்கள் என்றெல்லாம்... அந்த விண்ணப்பத்தை எழுதிய போர் வீரன் பெயர் அப்டிஹிபா (Abdkhiba). இவன் எருசலேம் பற்றி இப்படியாக பார்வோனின் தலைமை உதவியாளருக்கு எழுதுகிறான்.

'ராஜாவின் இந்த முழு பகுதியையுமே இழந்து விடுவோம் போலிருக்கிறது. சேயீர், ஏதோம் மற்றும் கர்மேல் பகுதிகளை அந்த பிரபுக்கள் இழந்து விட்டார்கள். ராஜாவின் முழு பகுதியையுமே இழந்து விடுவோம். இந்த வார்த்தைகளை பார்வோனின் சமுகத்திற்கு நேரிடையாக கொண்டு செல்லுங்கள். நம் ராஜாவின் முழு தேசமுமே நாசமடையப் போகிறது...' (இந்த குறிப்புகள் பற்றின பின்புலத் தகவல்களை நாம் உபாகமம் 2வது அதிகாரத்தில் காணலாம்.)


சரி. இவ்வளவு தீவிரமாக கேட்டுக் கொண்ட கடிதத்தின்படி, நம் பார்வோன் படைகளை அனுப்பினாரா? என்றால் இல்லை என்கிறார் இது பற்றி தன் புத்தகத்தில் குறிப்பிட்ட விக்டர் பியர்ஸ் என்கிற ஆராய்ச்சியாளர். இது மிகவும் ஆச்சர்யமான விஷயமல்லவா! பார்வோன் அனுப்பாததற்கு நாம் யூகிக்க முடிகிற ஒரே காரணம், அவன் முன்பாகவே கேள்விபட்டிருக்கக் கூடிய இஸ்ரவேலின் தேவன் அவர்களை முன்னின்று நடத்தும்போது, அதை எதிர்க்க யாராலும் முடியாது என்பதை புரிந்திருந்தது தான் என்று யூகிப்பதில் தவறில்லை தானே...


இதை பலரும் இந்த ரீதியில் விளங்கிக் கொள்வது சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால் அவனது செயல்பாடுகள் அநேகமாக இதை வலியுறுத்துகிறது என்பது நாம் சிந்திக்க வேண்டியதொன்று. அவனது முன்னோர்களின் தெய்வங்களைப் புறக்கணித்து, 'ஒரே தெய்வ' கருத்தை மக்கள் முன் வைத்தது என்பது மட்டுமல்ல. பதவிக்கு வந்த 3வது வருடத்திலேயே தன் புரட்சிகரமான மாற்றங்களை ஒரு பண்டிகையின்போது ஆரம்பித்தான் என்று சில பதிவுகள் சொல்கின்றன. பிறகு தன் ஆட்சியின் 9வது வருடத்தில் அவனின் மாற்றங்கள், அவன் ஏற்படுத்தின மாற்றங்கள் மிகவும் வியப்பூட்டுபவை. அவன் தன முன்னோர்களின் கோவில்கள் உள்ள கர்னாக் (Karnak) பகுதியை முற்றிலுமாய் புறக்கணித்துவிட்டு, தன் தலைநகரையே நாம் சற்று முன்பு கூறியபடி நைல் நதி கரையோரம் உள்ள அமர்னாவிற்கு மாற்றிக் கொண்டான். மற்ற தெய்வங்களின் கோவில்களை அழித்தும், நிராகரித்தும் வரத் துவங்கினான். எல்லா தெய்வ உருவங்களுக்கும் தடை விதித்தான். அனுமதித்த ஒன்றே ஒன்று தன் கிரணங்கள் வெளி வருவது போல் உள்ள சூரிய வட்டம் மட்டுமே.

'Aten' என்பதே சூரியனைக் குறிப்பது, ஆக சூரிய வணக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டான் அல்லவா என்று பலர் கேள்வி எழுப்பக் கூடும். 


ஆனால் நம் பார்வோன் பற்றின 'Wikipedia' பதிவு ஒன்று இப்படியாகத் தெரிவிக்கிறது.


சூரிய கிரணங்கள் வெளிவருவது போல் உள்ள அந்த ஒளி வட்டம், 'Aten'னின் பார்க்க முடியாத ஆவியை (Unseen Spirit) அடையாளப்படுத்துவதாக இருக்கிறதாம். இங்கு 'Aten' என்று குறிப்பிடப்படுவது வெறும் சூரியனைக் குறிக்காமல் உலகளாவிய ஒரு கடவுளை (Universal Deity) எல்லாவற்றுக்கும் காரணரான கடவுளைக் குறிக்கிறதாம். ஒரு முக்கியமான குறிப்பு என்னவெனில், எங்கெல்லாம் இப்படி வெளிவரும் சூரிய கிரணங்களுடனான ஒளி வட்டம் 'Aten' என்ற முழு முதற் கடவுளைக் குறிக்கவென்று பயன்படுத்துகிற இடங்களிலெல்லாம் எகிப்தின் சித்திர எழுத்துக்களால் ஆன ஒரு குறிப்பும் உண்டு, இப்படியாக...

சர்வத்தையும் படைத்த ஆண்டவரைக் குறிக்க அடையாளப்படுத்தும் இந்த சூரிய பிம்பத்தையே கடவுளாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக அவர் படைப்பின் மகத்துவத்திற்கு ஒரு அடையாளமாக மட்டுமே கொள்ள வேண்டுமேயன்றி, மற்றபடி சர்வத்தையும் படைத்த கடவுளின் ரூபத்தை முழுமையாகவோ, போதுமானதாகவோ அடையாளப்படுத்த வேறு எந்த ஒரு படைப்பாலும் இயலாது.
நிச்சயமாகவே இது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்குமென்று நினைக்கிறேன். இதை மேலும் உறுதி செய்கிற விதமாய் இன்னொரு தகவலும் உண்டு. இந்த பார்வோனின் கல்லறையில் ஒரு பெரிய கவிதை பொறிக்கப்பட்டிருக்கிறது. 'The great hymn of Akhenaten' என்று மிகவும் பிரசித்தி பெற்றது இது. இதில் என்ன விசேஷம் என்றால், இதற்கும் நம் வேதாகமத்தில் உள்ள 104ம் சங்கீதத்திற்கும் உள்ள பல ஒற்றுமைகள், இந்த பார்வோனின் 'மாபெரும் பாடலின்' பிரசித்தத்திற்கு ஒரு காரணம். இன்றைக்கும் வலைத்தளத்தில் பார்ப்பீர்கள் எனில் இரண்டையும் ஒப்பிட்டு ஏராளமான தகவல்கள், கட்டுரைகள் உண்டு.

ஆனால் இவைகள் பலவற்றில் உள்ள குறிப்பு என்னவென்றால், இந்த நம் பார்வோனின் 'பெரிய பாடல்' தான் 104ம் சங்கீதம் எழுதப்பட உந்துதலாக இருந்திருக்கும் என்பது தான். இதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் முன்பே சொன்ன விதமாக எகிப்திலிருந்து இஸ்ரேல் விடுதலையை கி.மு.15ம் நூற்றாண்டாக (கி.மு.1440 என்பதால்) எடுத்துக் கொள்ளாமல் கி.மு.13ம் நூற்றாண்டாக (கி.மு.1250 என்று பலர் சொல்வதின்படி) பலர் நம்புவது தான். அதாவது 14வது நூற்றாண்டில் (1351-1334 கி.மு.) வாழ்ந்த நம் பார்வோனின் 'பெரிய பாடலின்' பாதிப்பு, இஸ்ரேல் ஜனங்கள் பயன்படுத்தி இருக்க முடிகிற 104ம் சங்கீதத்தில் உண்டு, அதன் மூலமே பார்வோன் பாடல் வடிவம் என்கின்றனர். ஆனால் இது தவறான யூகம் என்று ஏற்கனவே நம் விளக்கிக் கூறிவிட்டோம்.


இப்பொழுது இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். 'சங்கீதங்கள்' புத்தகம் முழுமையுமே எழுதினவர் தாவீது என்றும், சங்கீதங்களின் காலமே 9,10வது நூற்றாண்டு தான் என்று நினைத்து பேசிக் கொண்டு வருகிற பலர் நம்மிடையே உண்டு.


ஆனால் தாவீது பெரும்பாலான சங்கீதங்களை மட்டுமே எழுதினார் என்றும், அநேக சங்கீதங்களை எழுதினது இன்னார் என்று நமக்கு குறிப்புகள் இல்லை என்றாலும் அவைகளும் சங்கீதத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதொன்றாகும். குறிப்பாக, சரித்திர சம்பவங்களைச் சொல்கிற 68, 78, 95, 105, 106, 111, 114, 135, 136, 149வது சங்கீதங்களில் 68, 78,105வது சங்கீதங்களைத் தவிர மற்றவைகள் 'Anonymous' ஆசிரியர்கள் என்றே குறிக்கப்படுகிறது. என்னவென்று யூகிக்கலாமெனில், அந்தந்த சரித்திர கால நிகழ்வுகளின் பாதிப்புகளில் கடவுளின் தாசர்களால் அவரை மகிமைப்படுத்த, சாட்சியாக இருக்க அவைகள் எழுதப்பட்டிருக்கலாம்.


அதே போல தான் 104வது சங்கீதம் எழுதினவர் பற்றியும் நமக்குத் தெரியாது. சங்கீதங்களின் காலக்கட்டத்தைப் பார்த்தால் கி.மு.1440லிருந்து கி.மு.586 வரை பரந்ததொன்று என்று அறிஞர்கள் கூறுகின்றனர். மிகப் பழமையான சங்கீதமான மோசேயின் சங்கீதம் (90) ஒரு சமயம் கி.மு.1440ஆக இருந்திருக்கும். அதைப் போல இந்த 104ம் சங்கீதமும் மிகத் தொன்மையானதாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். படைப்பின் அருமைகளை, படைத்தவரைப் பற்றி புகழ்ச்சியோடு உள்ள இந்த சங்கீதத்தின் பாதிப்பே பார்வோனின் 'மா பாடலுக்கு' உந்துதலாக இருந்திருக்கலாம் எனில் அது நல்லதொரு யூகமாகவே தோணுகிறது. சரி, அப்படி என்னதான் ஒற்றுமைகள் என ஒன்றிரண்டைப் பார்க்கலாம். பெரிதாக சொல்லப்படுகிற எட்டு ஒற்றுமைகளில் இப்படி துவக்கத்திலேயே இரண்டிற்கும் பொதுவான ஒற்றுமை உண்டு. மேலும் குறிப்பிடும்படியான ஒற்றுமை 104: 20,21,22,23ம் வசனங்களுக்கும் 'மா பாடலுக்கும்' (The great hymn to the aten) உண்டு.

Atenக்கான பாடல் 
...உம்மின் உதயம் வானத்தில் எத்தனை அழகாய் ஓ ஜீவனுள்ள Aten வாழ்வின் ஆரம்பம் நீ கிழக்கு திசையில் உதித்து நீ நிலமெங்கும் அழகால் நிரப்புகிறாய் நீ அழகு பெரிதாய் எல்லாவற்றுக்கும்...

இதே விதமாக பாடலின் இறுதி வரிகளுக்கும், 104ம் சங்கீதத்தின் கடைசி வசனங்களுக்கும் ஒற்றுமை உண்டு. எப்படி வந்தது இப்படியொரு ஒற்றுமை என்பது பலரும் இன்றைக்கும் விவாதிக்கிற விஷயம். ஆனால் சர்வ வல்லமையுள்ள கடவுளை அவர் படைத்தவைகளை வணங்கிக் கொண்டிருந்து, படைத்தவரையே மறந்தவர்களிடமிருந்து விலகி, அந்த ஒரே கடவுளைப் பற்றிக் கொண்டு, அது பற்றின கருத்துக்களை நம் பார்வோன் பரப்ப முயன்றது உண்மை என்பதை எவரும் மறக்கவியலாது. 

17 வருஷங்களே பார்வோனாய் இருந்து, மறைந்த பிறகு, பார்வோனான அவனின் மகன் Tutankhamun தன் தகப்பனின் கருத்து நேர்விதமாய், ஏதோ வைராக்கியம் கொண்டவன் போல, இந்த 'அக்கநேட்டன்' பார்வோனின் பெயரையே சரித்திரத்திலிருந்து அழித்துப்போட கங்கணம் கட்டிக் கொண்டதைப் போல தீவிரமாய் அழித்துப் போட முயன்றதை, சரித்திரம் சொல்கிறது. ஒருவேளை அப்படி அழிக்கப்பட்டவைகளில் நம் பார்வோனின் மாற்றம், மதப் புரட்சி பற்றின பல தகவல்கள் அழிந்துப் போயிருக்கவும் கூடும். ஏனெனில் நம் பார்வோனின் மதப் புரட்சியில், எகிப்தில் பலரும், தெய்வங்களின் பூசாரிகளுமே அரண்டு போயிருந்தனர். அவர்கள் அழித்துப் போட்டவைகளில் எஞ்சியவற்றில் இருந்தே இந்த பார்வோனின் இந்த காரியங்கள் இன்று கொஞ்சம் குறைய 3000 வருஷங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.


ஆனால் அவனின் மாற்றங்கள் தொடரவில்லை என்பது உண்மைதான். 'இன்கா அரசில்' வந்த ஒரு பெரிய வாதையைப் போல, இங்கும் அமர்னாவில் ஒரு பெரும் வாதை வந்து அநேகம் பேர் மரித்துப் போனது ஒரு சரித்திர சோகம்.

"கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே."
-அப்போஸ்தலர் 17: 27.
-எட்வினா ஜோனாஸ்